ஓர் அறிவியக்கம் உருவாவது…

அன்புள்ள ஜெ

முழுமையறிவு முயற்சிகளைக் கண்டேன். மிகுந்த செயலூக்கத்துடன் ஒவ்வொன்றிலும் ஈடுபடும் உங்களைக் கண்டு வியக்கிறேன். தமிழில் ஓர் அறிவியக்கத்தை உருவாக்க நினைக்கிறீர்கள் என தோன்றுகிறது. அதற்கு அடிப்படையான தத்துவம் அல்லது கொள்கை ஏதாவது உண்டா?

சிவரஞ்சன்

அன்புள்ள சிவரஞ்சன்,

அப்படி ஓர் அறிவியக்கத்தை உருவாக்கவேண்டும் என்னும் ‘திட்டம்’ எல்லாம் இல்லை. முடிந்தவரை முழுமையாகச் செயல்படுவது, அதன் மகிழ்ச்சியையும் நிறைவையும் அடைவது மட்டுமே என் நோக்கம். இச்செயல்களால் நான் என்னை பயனுள்ளவனாக உணர்கிறேன். பிற எல்லாம் காலத்தின் கையில். அதை நாம் எவ்வகையிலும் முடிவுசெய்ய முடியாது.

என் செயல்களின் மையமாக ஒரு ‘கொள்கை’ இல்லை. ஆனால் ஒரு ‘தரிசனம்’ உள்ளது. அந்த தரிசனத்தின் தர்க்கபூர்வமான விளக்கமாகிய தத்துவமும் உள்ளது. அதை நான் அத்வைத வேதாந்தம் என்பேன். அது நாராயணகுருவின் மரபு வழி வந்தது.

இங்குள்ள அனைத்தும் பிரம்மத்தின் வடிவங்களே என்னும் நோக்கில் இங்குள்ள எல்லா அறிதல்களும் பிரம்மஞானம் நோக்கிச் செல்பவையே. எந்த அறிதலும் பிழையானது அல்ல. எல்லா அறிதல்களும் ஒன்றையொன்று நிரப்புகின்றன. ஒன்றையொன்று வளர்க்கின்றன. நதிகள் வந்து சேரச்சேர நதி மேலும் விசை கொள்கிறது.

அத்வைதத்தின் இந்த அனைத்தையும் அணைத்துக்கொள்ளும் தன்மையையே அதன் அறிவார்ந்த தனிச்சிறப்பாகக் காண்கிறேன். இலக்கியம், கலைகள், மெய்ஞானங்கள் வழியாக நானும் அந்த முழுமை நோக்கி நகர முயல்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைபிரபந்த வகுப்பு, கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாத்திகன் கோயிலுக்குச் செல்வது…