பறவை பார்த்தல், கடிதம்

அன்புள்ள எழுத்தாளருக்கு,

இன்று காலை பறவைப்பார்த்தல் வகுப்புக்கு நித்தியவனம் வந்தேன். சில வருடங்கள் முன்பு கூட என் மாமா மகன் விளையாடி கொண்டு இருந்த விளையாட்டு சாமான்களை பார்த்து நான் இதுல எல்லாம் நான் விளையாடினதே இல்ல-ன்னு வெளிப்படையாகவே வருந்தினேன். என் வழுக்கையை பார்த்து, “கொஞ்சம் வளரேன்” ன்னு பக்கத்தில் உள்ளவர்கள் சொன்னார்கள்.

இந்த பறவைப்பார்த்தல் பயிற்சி குழந்தைகளுக்காக ஆனாலும் நான் விண்ணப்பித்து இருந்தேன். காலையில் உள்ளே வந்ததும் விஜயபாரதியிடம் நலம் விசாரித்தேன். நான் யாரை அழைத்து வந்து இருப்பதாக கேட்டார் அவர். என்னை தான் அழைத்து வந்துள்ளேன்.. எப்படியும் கொஞ்ச நாளில் வளர்ந்து பெரியவன் ஆகிடுவேன்-னு உறுதி அளித்த பின் சேர்த்துக்கொண்டார்.

ஈஸ்வர மூர்த்தியும் விஜயபாரதியும் மிக அருமையாக நடத்தி சொல்கிறார்கள். பசங்களிடம் ஒரு பறவையை காண்பித்து இதுதான் இன்ன பறவைன்னு அவர்கள் சுட்டியவுடன் சிறுவர்கள் கவனம் முழுக்க அந்த பறவை மேலேயே இருந்தது. ஒருவரை ஒருவர் மிக எளிதாக நட்பாகி அந்த பறவை போகும் இடமெல்லாம் அதன் மேலேயே கவனமாக இருந்தார்கள். என்ன ஒரு ஆர்வம்👏🏾👏🏾👏🏾

வகுப்பில் குழந்தைகளுக்கு சமமாக பெற்றோரும் இருந்தனர். முக்கியமாக நான் உணர்ந்தது அம்மா-க்கள் அவர்களிடமும் பெரும் ஆர்வம் இருந்தது.. அவர்கள் உண்மையில் கற்று கொள்கிறார்கள். பறவைகளை எப்படி எப்படி எதை எதை வைத்து அடையாளம் காண்பது, அவைகளின் ஒலிகள் என்ன, அவைகளை கான செல்லும் போது எடுத்து கொள்ளவேண்டிய precautions என்ன என்ன, பறவைகளை பார்க்கும் போது பறவைகளை சீண்டாமல் அவைகளை தொந்தரவு செய்யாமல் எப்படி இருக்க வேண்டும் இதெல்லாம் சுட்டி காட்டப்பட்டு உணர்த்தப்பட்டது.

பின் பறவைகளை நடந்து சென்று பார்த்தோம். கொஞ்சம் மழையும் பெய்ததனால் மழைக்கு பின் பூச்சிகளை திங்க இன்னும் நிறைய பறவைகள் வந்தன. நான் சுமார் 22 பறவைகள் பார்த்ததை குறிப்பு எடுத்துள்ளேன்.

விஜயபாரதி சொன்னார் “Grey Hornbill – சாம்பல் இருவாட்சி மட்டும் பார்க்க எனக்கு 1 1/2 வருடம் காக்க வேண்டி இருந்தது…நீங்கள் இன்றே பார்த்து விட்டீர்கள்”.

போதாதுக்கு Imperial Pigeonகள் ஒரு 6 பறவைகள் கூட்டமாக போய் வந்தன. அவர் எங்கள் எல்லார் மேலும் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறார். எல்லாம் நல்ல ஆசிரியர்கள் கூட இருப்பதால் எங்களுக்கு கிடைத்தது.. இல்லாவிட்டால் இந்த பறவைகள் எல்லாம் எங்கள் முன் parade நடத்தி இருந்தால்கூட எங்களுக்கு என்ன அருமை தெரிந்து இருக்கும். இது இந்த  இடத்தின் அருமையும் கூட.

பின்னர் முதல் நாள் இரவு நேர பாடத்தில் தமிழில் உள்ள பறவைகள் சம்பந்தமான புத்தகங்கள், முக்கிய சிறுகதைகள் – பறவையாளர்கள் எழுதிய முக்கிய புத்தகங்கள் மற்றும் முக்கிய பறவையாளர்கள் பற்றி எல்லாம் பேசினார்கள். உண்மையில் ஈஸ்வர மூர்த்தி மற்றும் விஜயபாரதி மிக கணிவானவர்களாகவும் பொறுமையாகவும் இருக்கின்றனர். குழந்தைகள் உள்ள அவைக்கு அது பெரும் சொத்து. இந்த பாடங்கள் மேலும் நிறைய நடக்க வேண்டும்.

இன்று காலை தொடங்கும் முன் அந்தியூர் மணி அண்ணாவிடம் கேட்டேன் “ஏன்னா, இதுல சைவ சமய பாடம் உண்டா.. எப்பிடி இது குள்ள வரும்”-ன்னு.. தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே “உழவாரம்” எனும் பறவையை பற்றி விஜயபாரதி சொல்லி கொண்டு இருந்தார். மணி அண்ணா விட்டாலும் நான் சைவத்தை விடுவதாக இல்லை. 😇

நாளை காலை 6 மணி முதல் இரண்டாம் நாளுக்கான தொடக்கம்.. சரி இப்போது தூங்க போகிறேன். நன்றி

ராகவ்

முந்தைய கட்டுரைசெயலின்மையிலிருந்து ஏன் விடுபடவேண்டும்?
அடுத்த கட்டுரைபுதுக்கல்வி, சில கனவுகள்