அன்புள்ள ஜெமோ
முழுமையறிவு ஒரு மகத்தான முயற்சி. வழக்கம்போல முதலில் சிறிய அளவில் தொடங்கி, வாய்ப்புகளைக் கணக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கம் செய்துகொண்டிருக்கிறீர்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், தமிழ் விக்கி போல இதுவும் ஒரு மிகச்சிறந்த அமைப்புச்செயல்பாடாக முன்னகரவேண்டும்.
உங்கள் காணொளிகளில் நம் அறிவுத்துறையில் உள்ள பெரிய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். தத்துவார்த்தமாக, அப்ஸ்டிராக்ட் ஆக, சிந்திப்பது நமக்கு அமைவதில்லை. மோட்டாவான ஒரு நடைமுறை நோக்குதான் நம்மிடம் உள்ளது. அதற்கு வரும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் பெரிய இடமில்லை. சுயசிந்தனையை முன்வைக்கவேண்டும். தத்துவக்கல்வியை முன்வைக்கவேண்டும்.
இந்தக்குறைபாடு நம் நம் கல்விமுறையிலேயே உள்ளது. மாணவர்களிடமிருந்தே தொடங்கியாகவேண்டியிருக்கிறது. அதற்கான முன்னெடுப்புகள் உங்களிடமிருந்து வரவேண்டுமென விரும்புகிறேன்
கிருஷ்ணா முகுந்த்
அன்புள்ள கிருஷ்ணா
நீங்கள் சொன்னதுதான், செய்துபார்த்து விரிவாக்குதல். அதுதான் காந்தியின் பாதை. அறிவித்துவிட்டு முன்னகர்வது அல்ல எங்கள் வழக்கம். தமிழ்விக்கி அறிவிக்கப்படும்போதே அதில் ஆயிரம் பதிவுகள் கடந்துவிட்டிருந்தன.
மாணவர்களுக்கான சில அமைப்புகளை உருவாக்கும் திட்டங்கள் நண்பர்களிடம் உள்ளன. கனவுகளுடன் அவற்றை வடிவமைத்துக்கொண்டிருக்கிறோம்
ஜெயமோகன்