அம்பும் ஊஞ்சலும்

அன்புள்ள ஜெ

சம்பிரதாயம் பற்றிய உங்கள் பேச்சைக் கேட்டேன். உண்மையில் அது எனக்கும் இருந்த சந்தேகம். சம்பிரதாயமாகத்தான் மதநூல்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்று என் அப்பா சொல்கிறார். எனக்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் சம்பிரதாயங்களில் ஊறியவர்களுக்கு எந்த ஒரு அறிவார்ந்த விரிவும் இல்லை. எந்த ஒரு கனிவும் இல்லை. ஒரு மிஷின் போல ஆகிவிடுகிறார்கள். மிஷின்போல இருப்பதையே நினைத்து பெருமையும் உள்ளது.

ஶ்ரீ

அன்புள்ள ஶ்ரீ,

எனக்கு சம்பிரதாயங்கள் ஏற்பில்லை – அது அந்த சிறு உரையிலேயே தெரியும். மதம் சார்ந்து இரண்டுவகையான கல்வி உண்டு. ஒன்று மதம்சார்ந்த- என்றதுமே என் வாயில் சமையற்கல்வி என்று வருகிறது. அதை விழுங்கித்தான் சம்பிரதாயக் கல்வி என்கிறேன். அதன் மனநிலை சமையல் போன்ற ஒன்றுதான்.ஆனால் அறிவார்ந்தவற்றில் ஈடுபட, எதையும் மீறிச்சென்று அடைய முடியாதவர்கள் பலர் உண்டு. அவர்களுக்கு அது உதவியானதே. எனக்கு அவர்கள் மேல் மதிப்பில்லை. எதிர்ப்பும் இல்லை – அவர்கள் சாதி மத மேட்டிமைவாதம் பேசி மனிதாபிமான எதிர்ப்புநிலை எடுக்காதவரை.

நான் ஆன்மிகம் என்பது முற்றிலும் இன்னொன்று. முதலில் அது அறிவார்ந்தது. அடுத்தபடியாக அது அகவயமான ஓர் அனுபவம். ஒட்டுமொத்தமாக அது நேர்நிலையானது. ஒருவர் தன் சாதி-மத-இன அடையாளங்களைக் கடந்து சென்று, தன்னுடைய சொந்த அச்சங்கள் ஐயங்கள் குழப்பங்கள் பிடிவாதங்கள் ஆகியவற்றைக் கடந்து சென்று, தன்னுடைய எல்லா அடையாளங்களையும் கடந்துசென்று, அறுதியாக தன்னுடைய தன்னிலை (self) என்பதையும் கடந்துசென்று அடையக்கூடிய ஒரு பெருநிலை உண்டு, அதுவே ஆன்மிகம்

ஆனால் அது அரிதானது ஒன்றுமல்ல. அனைவருமே ஓரிரு தருணங்களிலேனும், ஓரிரு நிமிடங்களிலேனும் அதைத் தற்செயலாக அடைந்திருப்பார்கள். அதை அறிவார்ந்து அணுகிச்சென்று அடைவதையே ஆன்மிகப்பயிற்சி என்கிறேன். அது பறக்கும் அம்பு இருக்கும் நிலை. இலக்கடைவது வரை பயணம்தான் அதன் வழி. முன்னது ஊஞ்சல். சென்றவழியே திரும்பி வரும், அச்சு தேய்வதே முக்தி என நினைக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைதொழில்நுட்பர்களுக்கு தத்துவம் எதற்காக?
அடுத்த கட்டுரைஇந்துமதத்தை பாரசீகர்கள் உருவாக்கினார்களா?