அடித்தள மக்களும் யோகமும்

அன்புள்ள ஜெ,

அன்றாடம் உழைத்து உண்ணும் ஒருவருக்கு யோகம், தியானம் ஆகியவை தேவையா? அண்மையில் ஓர் உரையாடலில் ஒருவர் ‘அன்றாடக் கூலிவேலை செய்யும் எவராவது யோகமோ தியானமோ செய்து பார்த்ததுண்டா?’ என்று கேட்டார். யோகம், தியானம் போன்றவை தின்றசோறு செரிக்காமல், வேலைசெய்யாமல் அமர்ந்திருக்கக்கூடியவர்களுக்கு உரியவை என்று சொன்னார். உங்கள் கருத்து என்ன?

மா.சிவக்குமார்

அன்புள்ள சிவக்குமார்,

நேரடியாகப் பார்த்தால் அது உண்மைதான். ஓர் அன்றாடக்கூலி உழைப்பாளி, மிகக்கடுமையாக உடலால் உழைப்பவர், தியானமும் யோகமும் செய்ய முடியாது. அதற்கான பொழுது அவருக்கு இருக்காது. அதற்கான உளநிலையும் உடல்நிலையும் அவருக்கு இருக்காது. 

உணவுண்டு, இனம்பெருக்கி வாழ்வது என்பதுதான் உயிர்கள் அனைத்திற்கும் அடிப்படையான போராட்டம். மனிதர்களுக்கும் அப்படியே. அந்தப் போராட்டமாக மட்டுமே வாழ்வு அமைந்தவர்கள் பலகோடிப் பேர் இப்புவியில் உண்டு. அவர்களுக்கு அது அன்றி வேறேதும் முக்கியம் அல்ல. அதை முழு உயிர்விசையாலும் அவர்கள் செய்தாகவேண்டும். அவர்களிடம் அந்த அடிப்படைத் தேவையை கைவிடவேண்டும் என எவரும் சொல்லமுடியாது. யோகம் அல்லது தியானம் அவர்களுக்குரியதாக எப்போதும் இருந்ததில்லை, எவராலும் அப்படி பரிந்துரைக்கப்பட்டதுமில்லை.

ஆனால், இந்த பூமிமேல் இன்றுள்ள தத்துவம், கலைகள், இலக்கியம், அறிவியல், மெய்யியல் எல்லாமே உண்டு, இனம்பெருக்கி வாழ்தல் என்னும் அடிப்படைத் தேவையை கடந்து மேற்கொண்டு தேடல் கொண்டவர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டவை. இங்குள்ள சமூகம், மதம், அரசு ஆகியவையும் அந்த அடிப்படைத்தேவையைக் கடந்து மேற்கொண்டு விழைவு கொண்டவர்களால்தான் நடத்தப்படுகின்றன. அடிப்படைத்தேவை கொண்டவர்களின் நலனுக்காகச் சிந்திப்பவர்களும், போராடுபவர்களும்கூட அந்த அடிப்படைத் தேவையை கடந்து மேற்கொண்டு அறம்சார்ந்த உணர்வுகளை அடைந்தவர்கள்தான்.

உயிர்வாழ்தல் என்னும் அடிப்படைத்தேவைக்கு அப்பால் தங்கள் தேடலுக்காகவும், தங்கள் விழைவுக்காகவும் செல்லும் அந்த வட்டத்தை நோக்கியே எல்லாச் சிந்தனைகளும், எல்லா கலைகளும் முன்வைக்கப்படுகின்றன. அந்த அடிப்படைத் தேவைக்காக முழுநாளும் போராடும் மக்களிடம் எவரும் சிந்தனைகளையோ, கலைகளையோ கொண்டுசெல்ல முடியாது. அந்த மக்களால் அவற்றை கவனிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. அதற்கான நேரமோ, மனநிலையோ அவர்களுக்கு இருக்காது.

ஆகவே ஒருவர் மானுட இனத்துக்கே சிந்தனைகளும், கலைகளும் தேவையில்லை என்று சொல்வாரா என்ன? அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் மக்களின் நலனுக்காக, அவர்களின் விடுதலைக்காகச் சிந்திப்பவர்களே கூட அச்சிந்தனைகளை அம்மக்களிடம் விரிவாக எடுத்துரைக்க முடியாது.  இங்கே அடிப்படைத்தேவைக்காக உழலும் மக்களின் நலனுக்காகச் சிந்தித்த்தவர்கள், அல்லது சிந்திப்பவர்கள் எவரும் தங்கள் அடிப்படைத்தேவைக்காக நாள் முழுக்க உழைத்தவர்கள் அல்ல. அவர்களில் பலர் கல்வியாளர்கள், முழுநேரச் சிந்தனையாளர்கள், முழுநேர களப்பணியாளர்கள்.

அடிப்படைத் தேவைக்காக உழலும் எளிய மக்கள் தியானம் செய்வதில்லை, ஆகவே அது தேவையில்லை என ஒருவர் சொல்கிறார் என்றால் அவர் ஒரு போலி அல்லது அசடு. அடிப்படைத்தேவைக்காக உழலும் மக்களின் வாழ்க்கையைத்தான் அவர் வாழ்கிறாரா என்ன? அவர்கள் செய்யாத எதையும் அவர் செய்வதில்லையா என்ன? தன்னுடைய சோம்பல், சுயநலம், காழ்ப்புகள் ஆகியவற்றுக்கு அடித்தள மக்களை சான்றுக்கு இழுப்பது ஒரு போலி அரசியல்பாவனை மட்டுமே

இப்படிச் சொல்லலாம். எவரை நோக்கி சிந்தனைகளும், கலைகளும் முன்வைக்கப்படுகின்றனவோ அவரை நோக்கித்தான் யோகமும், தியானமும் முன்வைக்கப்படுகின்றது.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரையோகம் மதம் சார்ந்ததா?
அடுத்த கட்டுரைஎதிர்நிலைகள், கடிதம்