கிறிஸ்தவ மெய்யியல் – கடிதம்

மலைத்தங்குமிடத்தில் இரவு அருகிலிருந்த மரங்கள் உயர்ந்த மலையை  மெல்லிய நிலவொளியில் பார்த்த பொழுது மோசஸ் கேட்ட குரலை உணரமுடிந்தது,”I am who I am”. ஜெயமோகன் அவர்கள் அடிக்கடி கூறும் கற்றலுக்கான சூழலின் முக்கியத்துவத்தை உணரமுடிந்தது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக என்னிடத்தில் ஒரு பைபிள் உள்ளது.மிக மிக கடினமான ஒரு காலத்தில் என் மன அமைதிக்காக வாசிக்க என் சகோதரனால் கொடுக்கப்பட்டது. பல முறை ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். மேலும்  கான்வெண்ட் பள்ளியில் பயின்றதால் சில பல வாசகங்கள்,கதைகள் அறிந்திருக்கிறேன்.

ஒருகாலகட்டத்தில் மதங்கள் பற்றிய அறிதல் வேண்டுமென்ற ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அது தொடர்பான வாசிப்பைத் தொடர்ந்தேன். அதனால் பைபிள் வகுப்பில் மிக ஆர்வமாக கலந்துகொண்டேன். மிக்க பயனுள்ள ,சுவாரசியமான அமர்வுகள். சிறில் சார் ஒரு ஆசிரியர் போலன்றி ஒரு சகோதரர் போல ,நண்பர் போல வகுப்புகளை சிரிப்புடனும் சிந்தனையுடன் கையாண்டார்.

பழைய ஏற்பாடு  முழுவதும் மனிதனின் நீண்ட வரலாற்று,பண்பாட்டுப் பதிவுகளைக் காண முடிந்தது.ஆதாம் ஏவாளில் ஆரம்பித்த  இனம் பெருகி தனக்கான ஒரு நிலத்தை,அரசை சட்டங்களை உருவாக்கும் பல நூற்றாண்டுப் பயணம் மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது.

ஆதியாயாகமம் மற்றும் கில்காமேஷ் இரண்டுக்குமான ஒற்றுமைகளை விளக்கினார்.  எகிப்தில் அடிமையாக வாழும் யூதர்களின் மீட்பரான மோஸஸ் பிறக்கும்பொழுது புதிதாய்ப்பிறந்த ஆண்குழந்தைகள் கொல்லப்படுவது கிருஷ்ணனின் பிறப்போடு ஒப்பிடப்பட்டது. பின் அவர் பெட்டியில் வைக்கப்பட்டு ஆற்றில் விடப்படுவது கர்ணன் கதையுடன் தொடர்புடையதாக இருந்தது. இதுபோல பல இடங்களில் கீழைப்புராணம்,தத்துவங்கள் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

மோஸசின் விடுதலைப்பயணம் மனிதர்களின் நிலையற்ற மனதை மீண்டும் மீண்டும் உணர்த்தியது. தொடர்ந்து தம்மக்களைக் கைவிடாமல் வழிகாட்டும் ஆண்டவர்,அவர்கள் தவறு செய்யும் போதெல்லாம் கண்டிக்கும் தந்தையாக இருக்கிறார். இறைவனுக்கும் மனிதருக்குமான  தந்தை – மகன் உறவு நூல் முழுமையும் உள்ளதை ஆசிரியர் விளக்கினார். பல இடங்களில் எனக்கு ஆண்டவருக்கும் மனிதருக்குமான உரையாடல் எனக்கு மனசாட்சியின் உரையாடலாகத் தோன்றியது.

பத்து கட்டளைகள் ,இறைவாக்கினர் போன்றவற்றை விளக்கி வரிகளை எப்படி பொருள்கொள்ள வேண்டும் பின்னால் வருபவற்றுடன் இணைத்து எப்படிவாசிக்க வேண்டுமென்று விளக்கினார். மாறுபட்ட விளக்கங்களையும் விவரித்தார்.பாஸ்காவிருந்து,மன்னா,சபாத், விருத்த சேதனம் போன்ற அம்மக்களின் பண்பாட்டு சடங்குகள் பற்றியும் அறிந்துகொண்டோம்.

மோஸஸுடன் விடுதலைப்பயணம் மேற்கொண்ட மக்கள் 40 வருடங்கள் பாலைவனத்தில் வாழ்ந்தனர். அங்கே கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அச்சட்டங்களை.ஹமுராபியின் சட்டங்களோடு ஒப்பிட்டு விளக்கினார். குறிப்பாக நீதி தொடர்பான சட்டங்கள் உருவாகக் காரணமான மோசஸின் மாமனார் ஒரு யூதரல்ல என்றும் குறிப்பிட்டார்.

யூதர்கள் 12 இனங்களாகப்பிரிந்து கானானை வடக்கு மேற்காகப் பிரித்து ஆள்வது,யூதர்கள் வீழ்ச்சி,அலெக்ஸாண்டர் படையெடுப்பு ,ஹெலனிஸம் தோற்றம்,கிரேக்க நாகரிகத்தின் சிறப்பு ,யூதப்புரட்சி,ரோமானியர் உதவியுடன் தன்னாட்சி பெறுதல் போன்ற பல வரலாற்றுச்சம்பவங்களை அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் சாலமன் கூடாரமாக அமைக்கப்பட்டிருந்த வழிபாட்டுத்தலத்தைக் கோவிலாகக் கட்டியது,அது மீண்டும் மீண்டும் இடிக்கப்பட்டு இன்று ஒற்றைச்சுவராக நிற்பதையும் விளக்கினார்.

பைபிள் காலப் பெண்கள் நிலை பற்றியும் அறிந்துகொண்டோம்.முதல் பெண் தீர்க்கதரிசி மரியா,தாவீதின் மூதாதையர்களில் முக்கியமான 5 பெண்கள் என்று தமார்,ராகாப்,பெத்ஷீபா,ரூத்,மரியா ஆகியோர் பற்றி சிறு அறிமுகம் கிடைத்தது.

ரூத்தின் கதையின் மூலம் அக்காலகட்டத்தில் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் முறையிருந்ததை அறியமுடிகிறது.காலம்,நிலப்பரப்பு போன்றவற்றையும் தெளிவாக புரிய வைத்தார். அப்பின்னணியில் வாசித்தலின்  அவசியத்தையும் உணர்த்தினார்.       சங்கீதத்தில் வரும் பாடல்களை வாசிக்கும் முறையை விளக்கினார்.சாலமனின் கீதங்கள் நாயகன்,நாயகி பாவத்தில் பாடப்பட்டது.

இயேசுவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம். “Hero entry ” என்ற கிண்டலுடன் புதிய ஏற்பாட்டை ஆரம்பித்தார்.      நூறு சதவீதம் இறைவன்,நூறு சதவீதம் மனிதன் என்று அறிமுகப்படுத்தப்பட்டார். இயேசு,மத்தேயூ, மாற்கு, யோவான், லூக்கா ஒவ்வொருவர் விவரிப்பிலும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் உணர்த்தப்பட்டது.

பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறியிருக்கின்றன என்பதையும் பார்க்க முடிந்தது. இயேசுவின் வாக்குத்திறமையை சிரில் சார் ரசித்து ரசித்து விவரித்தார். நான் அறிந்திருந்த பல பைபிள்கதைகளை அதன் மறைப்பொருளுடன் கேட்டது நல்ல அனுபவம்.                     காந்தியின் அஹிம்ஸைக் கொள்கைகளுக்கான ஊற்றாகத் தோன்றியது.

இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டதின் பின் உள்ள அரசியல்,எதிரிகளின் தந்திரம் ,அனைத்தையும் விவரித்தார்.அப்போஸ்தலர்கள் இயேசுவின் செய்திகளை எவ்வாறு பரப்பினார்கள்,என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்று இறுதிப்பகுதியை சுருக்கமாக் கூறினார்.

பரிச்சயமில்லாத மனிதனுக்கு உதவிசெய்த மனிதனைப்பற்றிய கதையைக் கூறிவிட்டு இப்படிப்பட்ட காட்சிகளைத் திரைப்படத்தில் பார்த்தால்கூட அழுதுவிடுவேன்,என்று கூறியபொழுது அவருக்குள்ளிருந்த குழந்தைத்தனத்தைப் பார்க்க முடிந்தது.

உணவு இடைவேளையின் போது ஒரு நண்பர் பாவமன்னிப்பு அவசியமா? என்று கேள்வி எழுப்பினார். சிரில் அவர்கள் உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரே ஒரு மனிதன் உண்மையாக உணர்ந்து மன்னிப்பு கேட்டு மனம் திருந்தினால் அதுபோதும்.அதற்காக அந்த சடங்கு இருக்கட்டுமே,என்று விளக்கியபொழுது சொல்லமுடியாத ஒரு உணர்ச்சியில் நெகிழ்ந்து போனோம்.

எஞ்சிய பகுதிகளை அவர்கூறிய முறையில் வாசித்து அறிந்துகொள்ள வேண்டும். முக்கியமான பகுதிகளை வாசித்து ஆங்காங்கே விளக்கங்களையும்,அது தொடர்பான செய்திகளையும் விளக்கினார். கிட்டத்தட்ட 1500 பக்கங்கள் உள்ள நூலை இரண்டரை நாட்களில் முடிப்பது அசாத்தியமானது. ஆனால் சரியான முன் தயாரிப்புடன் நூலின் சாரத்தை முழுமையாகக் கடத்திய சிரில் அவர்களின் திறமைக்கும் ஆர்வத்திற்கும் நன்றிகள்.

இறுதியாக பவுலின் அன்பு பற்றிய வாசகங்களை வாசித்தார்.மிக நெகிழ்ச்சியான  தருணம். அத்துணை அருமையான வரிகள். அவற்றைக்கேட்டபின் மனதின் மூலையில் ஒரு வருத்தம்.எத்தனை மகான்கள் அன்பை போதித்தாலும் மனிதர்களுக்கு ஏன் இத்தனை வன்மம்?  நித்ய சைதன்ய யதியின் சொற்கள் நினைவுக்கு வந்தது. ” it’s human”.

நன்றி!

ஷீலா

 

 

முந்தைய கட்டுரைநவீனவாசகனுக்கு பக்தி இலக்கியம் அளிப்பது என்ன?
அடுத்த கட்டுரைவாசிப்புப் பயிற்சி, கடிதம்