வாசிப்புப் பயிற்சி, கடிதம்

 

வணக்கம்.. கடந்த ஏப்ரல் கடைசியில் நடைபெற்ற வாசிப்பு சில புரிதல்கள் பயிற்சியில் கலந்து கொண்டேன்.. அது வாசிப்பு தேங்கி மெல்ல நகர்ந்து கொண்டிருந்த காலம்.. இப்பயிற்சி வழியொன்று திறக்கும் என எண்ணியே வந்தேன்..

தங்கள் பயிற்சி வழி இதுவரையில் 30 கட்டுரைகள் வாசித்து குறிப்பெடுத்துள்ளேன்.. வாசிப்பு மாற்றம் கண்டுள்ளதை அறிகிறேன்.. ஆழ உழுகிறேன் என்பதை உறுதியாக சொல்வேன்..

இப்பயிற்சி நான் ஃபிக்ஷன் வாசிப்பு பற்றியதென கூறி துவங்கினீர்கள்.. நாளொன்றுக்கு ஒரு கட்டுரை.. வருடம் 300 கட்டுரைகள் வாசித்து விட்டால் உம் துறையில் நீங்கள் எக்ஸ்பெர்ட் என்ற வாக்கியம் சாலையொன்றை அமைத்து தந்தது.. அக்கணமே வாசிப்பில் நல்ல இலக்கு கிடைத்துவிட்டது.  எனது துறை சார்ந்தே மேற்சொன்ன 30 கட்டுரைகளும்..

உங்கள் அப்பா சொன்னதாக கூறி யதை எங்களுக்கு சொன்ன தாரக மந்திரங்கள்.. பயிற்சி நெகிழ்வானப் பகுதி இது.. தோளில் கைப்பட்டு பேசும் நட்பு போல் நெருக்க மாக இருந்தது..தொழில் கூடாது,  பொம்பளையிடம் கவனம், குடி கூடவே கூடாது நல்ல தெளிவை தந்தது..

அதிலும் ஸ்கொயர் மேன் விளக்கம்.. அந்த ஸ்கொயர் ஒரு படிமமென  பதிந்து விட்டது.. நான் சந்தித்த ஸ்கொயர் மேன்கள் எல்லாம் நினைவில் ஓடி வந்தார்கள்..

கட்டுரை பேசும் தளம், கன்குலூசன் காணல் இரண்டும் எனக்கு சோர்வு தருகிறது அல்லது கடினமாக உள்ளது.. பயிற்சி முடியும் தருவாயில் ஒரு கட்டுரையை 50 லிருந்து100 வார்த்தைகளாக.. ஸ்நாப்சிஸ்.. மாற்ற முடிகிறதா.. அது சிறப்பு.. ஸ்நாப்சிஸ் மிக முக்கியம் என்ற தங்கள் சொற்றொடர் செய்தி ஊக்கம் தந்து கொண்டிருக்கிறது.. ஆனால் இதுவரையில் வாசித்த கட்டுரைகள் ஒவ்வொன்றும் 150 வார்த்தைகள் வரை இழுத்துச் சென்றுவிடுகின்றன..

ஒரு மாதம் முன் வாசித்து எழுதிய வார்த்தைகள் அவை குறிக்கும் கருத்துகளை சரளமாக நினைவில் மேலெடுக்கின்றன.. பொதுவாக வாசிக்கும் கட்டுரையின் முக்கிய ஒன்று இரண்டு செய்திகள் மட்டுமே நினைவில் இருக்கும்.. பல கட்டுரைகளுக்கு அதுவும் உறுதியாக சொல்ல முடியாது.. இந்த ஸ்நாப்சிஸ் வார்த்தைகள் காலம் கடப்பினும் கட்டுரையின் பெரும் பகுதியை மீட்கும் எனத் தோன்றுகிறது.. மூளை மறந்தாலும் அந்த வார்த்தைகள்  தூண்டிலென கட்டுரை களம் நோக்கி ஞாபகத்தை இழுத்து வரும்..

டிகோடிங், ரீகன்ஸ்ட்ரக்ஷன் எனும் இவ்விரண்டு வாசிப்பு சார்ந்த கோட்பாடுகளும் வாசிப்பை  ஒரு படி கூடுதலாக புரிந்து கொள்ளவும்,   விளக்க இயலா ஒரு ஊக்கத்தையும் தருகின்றன.. தினசரி வாசிக்க புத்தகத்தை ப் பிரிக்கும் போது அதிலே புதையலைத் தேட போகிறேன்.. டிகோடிங்.. அதுவும் கிடைக்கப் போகிறது எனும் எண்ணம் அல்லது உண்மை அன்றைய வாசிப்பைச் சிறக்க செய்விக்காது போகுமா என்ன..

இந்த பயிற்சி சொன்ன வழியில் வாசிப்பது முன்பை விட quantity ஐ குறைநத்து விட்டது எனினும் quality  அதிகம் என்பதை உணர்கிறேன்.. ஒரு கட்டுரையை முக்கிய வார்த்தைகளாக நினைவில் மீட்கும் வண்ணம் உடைப்பது.. பிறகு அவ்வார்த்தைகளை எழுதுவது என இரு முறை பயணம் கட்டுரையில் நிகழ்கிறது.. நேரத்தை எடுத்து கொள்ளும் வாசிப்பு எனினும் நீண்ட காலம் நிற்கும் நிற்கப் போகும் வாசிப்பு இது.. தற்போது வாசிக்கும் புத்தகங்களெல்லாம்  முக்கிய  சொற்களால் நிறைந்த ஏ4 தாளைக் கொண்டுள்ளன..

இந்த பயிற்சி எனக்கு வாசிப்பில் நல்ல நுட்பங்களையும்,  வாசிப்பு இலக்கையும் தந்தது..

[முன்பொரு  கட்டுரையில் குறிப்புகளை முழு வாக்கியமாக எடுப்பதே சிறந்தது எனக் கூறியிருப்பீர்கள்.. அதையும் பயன்படுத்தி பயன் பெற்றுள்ளேன்.. தற்போது வார்த்தைகளாகக் குறிப்புகள் என்பது முரண்படுவதாகத் தோன்றுகிறது..

எனது துறை கல்வி.. தற்போது சேகரம் செய்து வாசித்துக் கொண்டிருக்கும் நூல்கள்.. சுரா வுடனான  பல்கலை துணை வேந்தர் உரையாடல் தமிழகத்தில் கல்வி.. வகுப்பறை வன்முறை.. காந்தியக் கல்வி சிந்தனை.. உட்பட பத்து நூல்கள்.. மிக சீரியஸான கட்டுரைகளை வாசிக்கச் சொன்னீர்கள்.. நூல்களின் தேடல் தொடரும்.. நன்றி..

முத்தரசு

வேதாரண்யம்

அன்புள்ள முத்தரசு

வாசிப்பை இப்படி உருவகம் செய்துகொள்ளுங்கள். மின்சாரம் ஒரு பொருள்வழியாகக் கடந்துசெல்வதுபோல.

மிகக்குறைவாக தடை (ரெசிஸ்டென்ஸ்) கொடுக்கும் பொருள் வழியாக அது எளிதில் கடந்துசெல்லும். மிக அதிகமாக தடை அளிக்கும் பொருளில் வெப்பமாகவும் வெளிச்சமாகவும் வெளிப்படும். டங்ஸ்டன் போன்றவை அதிக தடை கொண்ட பொருட்கள்.

நாம் ஒரு நூலை வாசிக்கும்போது நம் மூளையும் கற்பனையும் வேலைசெய்யாமல், அணைந்த நிலையில் இருந்தால், எளிதில் வாசித்து கடந்துசெல்வோம். அந்நிலையில் நிறைய வாசிக்க முடியும்.

அப்படி வாசித்துத்தள்ளும் நூல்கள் பெரும்பாலும் மேலோட்டமானவையாக, நமக்குத் தெரிந்த உள்ளடக்கம் கொண்டவையாக இருக்கும். சிலர் அவ்வாறல்லாமல் எல்லா நூல்களையும் அப்படியே மேலோட்டமாக வருடிச்செல்வார்கள். தீவிரமான நூல்களைக்கூட தடையின்றி வாசிப்பார்கள்.

அவர்களை கவனியுங்கள். நூல்களின் எளிய தரவுகளையே அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அதை மட்டுமே சொல்வார்கள். மிக எளிமையான, மாறாத ஒரே அளவுகோலை எல்லா நூல்கள்மேலும் போடுவார்கள். பலர் நாவல்களை கதைச்சுருக்கமாக மட்டுமே நினைவில் வைத்திருப்பார்கள். கதையாக மட்டுமே மதிப்பிடுவார்கள்.

நல்ல வாசிப்பு என்பது ஒரு நூல் உங்களை எப்படி மாற்றுகிறது என்பதன் அடிப்படையிலேயே முடிவாகிறது. நீங்கள் அளிக்கும் தடையைப் பொறுத்தது உங்களுக்கு நிகழ்வது. ஒளியோ வெப்பமோ. அந்த தடை என்பது நூலை உள்வாங்குதலின் தடை, சிந்தனையின் தடை.

அந்தத் தடைதான் இப்போது நிகழ்கிறது. ஆகவே நூல்கள் உங்களுக்குள் ஆழமாகச் செல்கின்றன. உங்களை பாதிக்கின்றன. உங்களை மாற்றுகின்றன. ஆகவே வாசித்துக் குவிக்க முடிவதில்லை. ஆனால் வாசித்தவை அழுத்தமாக நீடிக்கின்றன

வாழ்த்துக்கள்

 

ஜெ

முந்தைய கட்டுரைகிறிஸ்தவ மெய்யியல் – கடிதம்
அடுத்த கட்டுரைதிறமைக்கும் அறிவுக்கும் என்ன வேறுபாடு?