அன்புள்ள ஜெ,
முழுமையறிவு காணொளிகள் இப்போது ஐம்பதுக்கும் மேல் ஆகியிருக்குமென நினைக்கிறேன். ஒரு டிவி சேனல் போலவே ஆகிவிட்டிருக்கிறது. இவை கூடுமானவரை திரும்பத் திரும்ப ஒரே விஷயம் இல்லாமல் இருப்பதே ஒரு சாதனை என நினைக்கிறேன். நான் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இத்தனை காணொளிகளை வெளியிடுவது உங்கள் கொள்கையுடன் முரண்படவில்லையா? நீங்கள் முதன்மையாக எழுத்தாளர். எழுத்துவடிவ ஞானத்தையே முன்வைப்பவர். அதனால் கேட்கிறேன்.
சங்கர் கிருஷ்ணசாமி
அன்புள்ள சங்கர்
இந்தக் காணொளிகள் முழுமையறிவு நிகழ்வுகளுக்கு மேலும் புதியவர்கள் வரவேண்டும் என்பதற்காகவே. குறைந்தது 1000 பேர் தொடர்ச்சியாக வெவ்வேறு நிகழ்வுகளுக்கு வந்தால் மட்டுமே இந்நிகழ்வு தொடர்ச்சியாக முன்செல்ல முடியும். என் தளத்தின் வாசகர்களில் தமிழகத்தில் உள்ளவர்களில் இருந்து மட்டுமே அந்நிகழ்வுகளில் பங்கெடுப்போர் வரமுடியும். அவர்களின் எண்ணிக்கை அளவுக்குட்பட்டதே.ஆகவே மேலும் புதியவர்களை உள்ளே கொண்டுவரும்பொருட்டு இந்த காணொளிகள் வெளிவருகின்றன. அந்த முயற்சி பயனும் அளிக்கிறது.
நீங்கள் சொல்வது சரி, இந்த வகுப்புகள் வாசிப்பு உடையவர்களுக்கு உரியவை. ஆனால் காணொளி வழியாக வருபவர்களும் மெல்ல வாசிப்புக்குள் வருவதையே காண்கிறோம். வெவ்வேறு வகுப்புகள் நிகழ்கின்றன. யோக வகுப்புக்கு வருபவர்கள் நவீன இலக்கிய வகுப்புக்கும் வரத் தொடங்குகிறார்கள். பைபிள் வகுப்புக்கும் அவர்களே பின்னர் வருகிறார்கள். ஆகவேதான் காணொளிகள்.
இங்கே அறிவுக்கு, அதுசார்ந்த முயற்சிகளுக்கு எதிரான பொதுமனநிலை உள்ளது. மிகமிக வலுவானது அது. பொதுச்சமூகத்தின் புறக்கணிப்பு ஒரு மாபெரும் கரும்பாறை. போலி அறிவுஜீவிகளின் காழ்ப்பும் கசப்பும் நையாண்டியும் சில்லறை விமர்சனங்களும் இன்னொரு பக்கம். அரசியல் சார்ந்த எதிர்ப்புகள் இன்னொரு பக்கம். ஆகவே இலக்கியம், அறிவியக்கம் சார்ந்த எந்நிகழ்வும் தமிழகத்தில் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளை கடந்து நீடித்ததே இல்லை. ஆனால் விஷ்ணுபுரம் அமைப்பு 15 ஆண்டுகளாக நீடிக்கிறது. தமிழ் விக்கி, முழுமையறிவு என மேலும் மேலும் விரிவடைகிறது. எல்லா செயல்களும் இதுவரை வெற்றியில் இருந்து மேலும் வெற்றிநோக்கியே செல்கின்றன.
காரணம், எங்கள் நன்னம்பிக்கை. எதிர்மனநிலைகளையும் வம்புச்சழக்குகளையும் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் எங்கள் கனவுகளை மட்டுமே முன்னெடுப்பது. சலிக்காத தொடர் முயற்சி. ஒவ்வொருநாளுமென செயலாற்றுதல். கூடவே தெளிவான புறவயமான திட்டமிடல். ஒரு வணிகருக்குரிய தெளிவுடனேயே இவற்றை முன்னெடுக்கிறேன். வெறுமே கனவுகள் கண்டு, பின்னர் அவை நிறைவேறவில்லை என புலம்பி நிற்பதில்லை. நான் என் செயல்களில் தோல்வி என்பதை அறிந்ததே இல்லை. ஏனென்றால் கனவுகளை விண்ணில் வைத்திருந்தாலும் திட்டங்களை மண்ணில் வைத்துள்ளேன்.
ஜெ