பௌத்தம்,விபாசனா- கடிதம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

 வணக்கம்.

கடந்த வாரம் நடந்த பெளத்த மெய்யியல் விபாசனா வகுப்பில் கலந்து கொண்டேன்.உண்மையில் மனது நிதானத்தை அடைந்திருக்கிறது. எந்த எண்ணமும் பின் தொடராத ஓர் அற்புத மனநிலையை உணர்ந்தேன். அதன் அனுபவத்தை உங்களிடம் இந்த சிறு கடிதம் மூலம் பகிர்ந்து கொள்ளகிறேன்.

விபாசனா என்ற வார்த்தையை 2013‍ம் ஆண்டு கேட்டதில் இருந்து எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும்அதன் தன்மை எப்படி இருக்கிறது என்று உணரவேண்டும் என்று மனது ஏங்கிக்கொண்டே இருந்தது. 

2015ம் ஆண்டு சென்னை திருநீர்மலைக்கு அருகில் உள்ள விபாசனா மையத்தில் பதிவு செய்து பிறகு விடுமுறை கிடைக்காமல் விட்டுவிட்டேன்நூற்பின் பயணம்  ஆரம்பித்த பிறகு விபாசனா  சென்ற  நண்பர்களின்  அனுபவங்களை  கேட்கும் வாய்ப்பு  கிடைத்ததுஅவர்களின்  அனுபவங்கள்  கொடுத்த  பயத்தினால்  போகவேண்டாம் என்று முடிவெடுத்திருந்தேன்.

ஒரு வருடம் முன்பு ரமணாஸ்ரமம் வாசலில், ஜென் துறவி திக் நியாட் ஹன் பற்றி சிவராஜ் அண்ணாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அமலன் ஸ்டான்லி அண்ணாவை பற்றியும் அவரது பயணங்கள் பற்றியும் பகிர்ந்துகொண்டார். அன்றே அவருடன் தொலைபேசியில் உரையாடினேன். அந்த உரையாடலில்மனவிழிப்பு நிலைபுத்தகத்தை அமலன் அண்ணா அறிமுகம் செய்தார். அதை படித்தாலே ஏதோ ஒரு பிடி கிடைக்கும் உங்களுக்கான பாதை உருவாகும் என்று சொன்னார்.

தமிழினியில் இருந்து அந்த புத்தகத்தை வாங்கி படித்து முடித்தேன்.  அன்றில் இருந்து, ஜென் சார்ந்த வகுப்புகள் தமிழில் இருந்தால் உதவியாக இருக்கும்  என்று மனது ஏங்கிக்கொண்டே இருந்தது. அப்படியொரு தருணத்தில் உங்களுடைய தளத்தில் அமலன் அண்ணாவின் வகுப்பு பற்றி அறிவிப்பு வந்ததும் மிகவும் மகிழ்வடைந்தேன். உடனே பதிவும் செய்தேன். நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டேன். அந்த அற்புத தருணம் கடந்த வெள்ளியன்று கிடைத்தது.

முதல் நாளில் இருந்து மூன்று நாட்களும் வகுப்புகள் செய்முறை பயிற்சிகளாகவே இருந்தது. பயிற்சிகளுக்கு இடை இடையே பெளத்தம் பற்றியும் ஆசிரியரது  பயண அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்துகொண்டார். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. புத்தர் பற்றியும் புத்தமதம் பற்றியும் அதன் உட்பிரிவுகள் பற்றியும் மற்றும் சங்கற்பங்களையும் அறிந்து கொண்டேன். இது பள்ளியில் இருந்து இப்பொழுது வரை படித்த புத்தரில் இருந்து வேறு ஒரு பார்வையை அளித்துள்ளது. வாழ்வில் இத்தனை வருடங்களில் மூச்சை மட்டுமே தனியாக கவனித்தது கிடையாது. அதுவும் மூன்று நாட்கள் மூச்சுடன் கவனம் செலுத்தியது பேரின்ப அனுபவம்.

முன்பெல்லாம் மனது கேள்விகளால் நிறைந்து முடிவெடுக்க இலயாத சூழல் வரும்பொழுது குக்கூ காட்டு பள்ளிக்கு சென்று அங்குள்ள மண் கட்டிடத்தில் வெறுமனே கண்களை மூடி அமர்ந்து கொள்வேன். ஒரு தருணத்தில் அதற்கான விடை அங்கு கிடைக்கும். அந்த விடை கிடைத்த தருணம் மனது அவ்வளவு ஆனந்தம் அடையும். அதே மனநிலையை இந்த மூன்று நாட்களும் நித்திய வனத்தில் வகுப்பில் உள்வாங்கினேன்.

வகுப்பில் மூச்சை கவனித்தல், மூச்சின் ஓட்டத்தை கவனித்தல், நடைதியானம்,  புத்தக அறிமுகங்கள் மற்றும் புதிய பெளத்த அறிஞர்களின் அறிமுகம் என யாவும் சிறப்பானதாக இருந்தது. அத்தனை பேருடைய சந்தேகங்களுக்கும் மிகவும் பொறுமையாகவும் அதே நேரத்தில் ஆழமாகவும், ஆசிரியர் தனது அனுபவங்களோடு பதிலளித்தார். பயிற்சியில் அருண்மொழி அம்மாவை சந்தித்தது கூடுதல் மகிழ்வாக இருந்தது. நிறைய புதிய நண்பர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தருமபுரியில் இருந்து பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் கெளதம் தனது மாணவர்களை அழைத்து வந்திருந்தார்

பொறியியல் ஆசிரியர் மாணவர்களுக்கு தனியாக டியூசன் எடுத்து அவருடைய அறையிலேயே தங்கவைத்து அவர்கள் வேலைக்கு செல்லும் வரை உதவி செய்கிறார். அத்தோடு அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுத்து வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார். அவருடன் வந்திருந்த மாணவர்கள் படித்து முடித்து அரசு வேலையில் இப்பொழுது இருக்கிறார்கள்.

அவர் சொன்னது, இப்பொழுது பசங்க வேலைக்கு போயிட்டாங்க. கொஞ்சம் தடம் மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். கொஞ்ச நாளுக்கு நம்ம சொல்பேச்சு கேட்பாங்க. அதனால்தான் வகுப்புகளுக்கு அழைத்து வருகிறேன். இப்பவே இந்த மாதிரி சுவைக்கு பழகிட்டாங்கனா தடம் மாறி போகாமல் நல்லபடியாக வந்திடுவாங்கனு சொன்னார். அவருடனும் மாணவர்களுடனும் உரையாடியதில்  நம்பிக்கையை உணர்ந்தேன்.

மனதில் எப்பொழுதுமே ஏதோ ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே  ஒரு அழுத்தத்தோடு ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டே இருக்கும். என்னால் அதனை ஒடுக்கவும் முடியவில்லை அந்த மனநிலையில் ஒடுங்கவும் மனது இடம் கொடுக்கவில்லை. தியான வகுப்பிற்கு எல்லாம் சென்றிருக்கிறேன். அன்றாட செயலில் நிறைவு கிடைத்தாலும் மனதிற்கு ஏதோ ஒன்று தேவைப்பட்டுக் கொண்டே இருந்தது.

என் மனதில் ஒரு திறப்பு நிகழ்ந்திருப்பதையும் அது செயலில் வெளிப்படுவதையும் முழுமையாக உணர்கிறேன். பெரும் ஞான தேடலுக்கான விதையினை ஆசிரியரிடம் இருந்து பெற்றிருக்கிறேன். இது வாழ்விற்கும், நூற்பின் அடுத்தகட்ட பயணத்திற்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். 

பல்லாயிரம் ஆண்டுகளாக எத்தனையோ குருமார்களால் கைமாறி வந்த தியானத்தை , தானும் செய்துகொண்டே எங்களுக்கும் கற்றுக் கொடுத்த ஆசிரியர் அமலன் ஸ்டான்லி அவர்களுக்கும், இத்தருணத்தை பரிசளித்த உங்களுக்கும் மற்றும் விஷ்ணுபுர நண்பர்களுக்கும் வாழ்வின்  என்றென்றைக்குமான நன்றியை சிரம் தாழ்த்தி மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பும்… பிரார்த்தனைகளும்
சிவகுருநாதன்.சி

www.nurpu.in

முந்தைய கட்டுரைகாணொளிகளின் பயன்
அடுத்த கட்டுரைநீங்கள் ரஜினியா கமலா?