வீடும் வகுப்பும், கடிதம்

அன்புள்ள ஜெ

நான் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வருபவள். என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இப்போது பயிற்சி வகுப்பு மாறிவிட்டது. என் வாழ்க்கை ஒருவகையில் அர்த்தமற்ற ஒன்றாக எனக்கு 35 வயது முதல் தோன்ற ஆரம்பித்தது.

நான் அதை உங்களுக்கு ஒரு கடிதம் வழியாக தெரிவித்தபோது ’நுண்ணுணர்வும் அறிவாற்றலும் கொண்ட எந்தப்பெண்ணும் குழந்தைகளுக்காக வாழ முடியாது’ என்று எழுதினீர்கள். அது எனக்கு பெரிய அதிர்ச்சி. ஒரு பெண் குழந்தைகளுக்காக வாழவேண்டும், தியாகம் செய்யவேண்டும் என்றுதான் எனக்குச் சொல்லப்பட்டுள்ளது. நானும் அதையே நம்பியிருந்தேன். வாழ்க்கையும் அப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தது. என்னுடைய பிரச்சினையே அதுதான் என அந்த வரிதான் காட்டியது.

எல்லாரும் தாய்மையை புகழ்கிறார்கள். தாய் தியாகத்தின் உருவம் என்கிறார்கள். அதெல்லாம் சரி என்றாலும் அது மட்டுமே நான் என எனக்கு தோன்றவில்லை. அதுதான் எனக்கு நிறைவில்லாமல் இருந்தது. அந்த வரிதான் என்னை விடுவித்தது. என் நிறைவுக்காக வாழ்வது என்பது ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணத்தை உருவாக்கியது. பிள்ளைகளுக்கு ஒரு காலம் கடந்தால் அம்மா ஒரு அடையாளம் மட்டும்தான். தேவையான அடையாளம், ஆனால் அவர்களின் வாழ்க்கையில் அம்மா கிடையாது.

அம்மா தனக்காக வாழாவிட்டால் அவள் பிள்ளைகளிடமும் கணவரிடமும் தன்னை மதிக்கும்படி கெஞ்சிக்கொண்டே இருக்கவேண்டும். தனக்கு நேரம் ஒதுக்கும்படி கெஞ்சவேண்டும். இல்லாவிட்டால் அவமானப்பட்டு புண்பட்டுக் கொண்டே  இருக்கவேண்டும். அந்தவாழ்க்கையே எனக்கிருந்தது. அதை கடக்க அந்த வரி உதவியது. தியாகம் செய்யவேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம் என்றும் அதற்குத்தான் இந்த தாய் டெம்ப்ளேட் என்றும் படுகிறது. தாய்க்கு கடைசியில் ஒன்றும் மிஞ்சுவதில்லை. இழந்த வாழ்க்கை மட்டும்தான்.

பயிற்சி வகுப்புகளுக்கு வந்தபோது எனக்கான இடமும், எனக்கான சுற்றமும் உருவாகியது. என் அறிவுக்கு உரிய ஒரு களத்தை கண்டுகொண்டேன். அதில் என்னால் என்னென்ன செய்ய முடியும் என்று கண்டுகொண்டேன். ஆரம்பத்தில் திணறலாகத்தான் இருந்தது. நீண்ட இடைவேளை ஆகிவிட்டது. புதியதாக எதையும் கற்க முடியவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வாசல் திறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த சந்தோஷம்தான் வாழ்க்கையின் அர்த்தமாக உள்ளது.

ஆனால் நம்மைச் சார்ந்தவர்களுக்கு அப்படி ஒரு வாழ்க்கையும் மகிழ்ச்சியும் நமக்கு இருப்பது அவ்வளவாக பிடிக்கவில்லை. அவர்களிடமிருந்து விலகிவிட்டிருப்பதாக நினைக்கிறார்கள். நீ முன்னைமாதிரி இல்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நீ அன்பாக இல்லை என்றும் சொல்கிறார்கள். அந்த இமோஷனல் பிளாக்மெயில்தான் பிரச்சினை. அதைத்தான் கடக்கவேண்டியுள்ளது

எஸ்

அன்புள்ள எஸ்,

நீங்கள் சொல்வது ஒரு சின்ன விஷயம்தான் என்று போகப்போக புரிந்துகொள்வார்கள். எந்த மாறுதலும் அன்றாடவாழ்வில் ஒரு சிறிய நிலைகுலைவை உருவாக்குகிறது. பெரும்பாலானவர்களுக்கு அதை புரிந்துகொள்ள முடிவதில்லை. அந்த மாறுதலால் பெரிய இழப்பு ஏதும் உருவாகாது என்று அவர்களுக்கு தெரிய வைத்தால்போதும். அன்பு, பொழுது எதுவும் குறையாது என தெரியவைக்கவேண்டும்.

(பலசமயம் பெண்களே மிகையாக பேசி அந்த அச்சத்தை பிறரில் உருவாக்கிவிடுகிறார்கள். இனி நான் அப்படி, இப்படி என்றெல்லாம் பேசிவிடுவார்கள். அது பிழையானது)

பிறரில் அவர்களுக்கான அன்பு பணிவிட எதிலும் குறையிருக்காது என்னும் உளப்பதிவை உருவாக்கவேண்டும். அதேசமயம் பிறரால் தீர்மானிக்கப்படுவதாக என் வாழ்க்கையை வைத்துக்கொள்ள மாட்டேன் என்னும் தெளிவையும் உருவாக்கவேண்டும்

ஒருவரை ஒருவர் கவ்விக்கொண்டு வாழும் வாழ்க்கை எப்படியோ உளச்சோர்வு, அதன் விளைவான வன்முறைக்குக் கொண்டுசெல்லும். இயல்பான விலக்கம் கொண்ட வாழ்க்கையே உகந்தது

ஜெ

முந்தைய கட்டுரைமேற்கத்திய கலைமரபு (ஓவியம், புகைப்படம்) ஏ.வி.மணிகண்டன்  -அறிவிப்பு
அடுத்த கட்டுரை‘யமுனை துறைவனிடத்தில் சரணாகதி’ – பிரபந்த வகுப்பு