அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்த வாரம் நடைபெற்ற பிரபந்த வகுப்பில் கலந்து கொண்டேன். வைணவ மரபை சேர்ந்தவர் ஆயினும் குடும்பத்தில் சில சடங்குகளை கடைப்பிடிப்பதை தவிர வைணவத்தை பற்றி ஒன்றும் தெரியாதவராய் தான் இருந்தேன். சிறுவயதில் பொருள் தெரியாது மனனம் செய்து திருப்பாவையினால் ஆண்டாள் மீது தீராத ஈடுபாடு. எப்படி அதை மேலும் அறிந்து கொள்வது, வளர்த்துக் கொள்வது என்பது பற்றி தெரியவில்லை. மார்கழியில் பிறந்த எங்கள் மூத்த பெண் குழந்தைக்கு ‘ஆண்டாள்’ என்று பெயர் சூட்ட கோவில் அர்ச்சகர் சொன்னபோதும், இரண்டாம் பெண் குழந்தையும் அதே மார்கழியில் ‘ஆண்டாள்’ போல பிறந்த போதும் தான் திருப்பாவையும் ,பெரியாழ்வாரும் ,ஆண்டாளும் எனக்கு இன்னும் நெருக்கமாகி தான் இருக்கிறார்கள் என்று அறிந்தேன்.
ஆர்வத்தினால் கடந்த ஏழு ஆண்டுகளாக எங்கள் வீட்டு கொலுவில், அந்த நாராயணனை தான் வைகுந்தன் ஆகவும், சித்திரை அழகர் ஆகவும், ஆண்டாளாகவும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த மனநிலையில் தான் பிரபந்த வகுப்பில் தெரிந்து கொள்ள போகும் வைணவ மரபை குறித்து குதூகலமாக இருந்தேன். மூன்று நாள் வகுப்பு ஒரு வைணவ திருவிழாவாகவே இருந்தது. ஆசாரமாக இருக்கும் வைணவரிடம் கேட்கத் தயங்கும் எல்லா கேள்விகளுக்கும் இந்த வகுப்பில் எனக்கு பதில் கிடைத்தது. ‘நாதமுனிகளில்’ தொடங்கிய வகுப்பை ஜ .ராஜகோபாலன் அவர்கள் கொண்டு சென்ற விதம் மூன்றாவது நாளின் முடிவில் எல்லோரும் ‘சரணாகதியில்’ வந்து நின்றோம்.
பக்தி இலக்கியம் உருவான காலகட்டமும் ,எளியவரும் இறைவனை அடையலாம் என்று நம்பிக்கையும் கொடுத்த பக்தி இலக்கியத்தை விரிவாக எடுத்துரைத்தார் ஆசிரியர். வைணவ தத்துவங்களான சித்-அசித்,பரமாத்மா ஜீவாத்மா, நித்தியசூரிகள், ஆழ்வார்கள், அவர்கள் வரலாறு என்று விரிவடைந்து கொண்டே போன வகுப்பில் இலக்கியங்களையும், இன்றைய வாழ்வியல் நடைமுறைகளையும் எடுத்துக்காட்டி ஜாஜா அவர்கள் விளங்க வைத்ததில் அங்கு இருந்த எல்லோருமே மூழ்கி போனோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் பிரபந்தத்தில் பாசுரங்களை ஆசிரியர் விளக்கம் சொல்ல சொல்ல தமிழின் சுவையை மேலும் மேலும் அனுபவித்தோம். ‘என் சிறு குட்டன்’ என்று கண்ணனை விதவிதமாக வர்ணித்து பாராட்டி சீராட்டி அமுதூட்டிய பெரிய ஆழ்வாரில் தொடங்கிய விளக்கம் அங்கு இருந்த அனைவர் மனதிலும் தாயின் கனிவை கொண்டு வந்தது. இனி எந்த குழந்தையை பார்க்கும் போதும் கணியமதனின் நினைவு தான் வரும். ‘நப்பினை காணில் சிரிக்கும்’ என்று அடுத்த பருவத்தை தாண்டிய பாசுரத்தின் போது கிருஷ்ண லீலைகளை கண்முன்னே கொணர்ந்தார் ஆசிரியர். கூடவே ‘சாய்த்து பருகிட்டு போந்து நின்ற’ சாரங்கனையும் அழகாக விவரித்தார
‘பின்னும் ஆளும் செய்வேன்’ என்ற தலைப்பில் நாச்சியார் திருமொழி பாடல்களில் ஆண்டாள் பெருமாளுக்கு மட்டுமே தன்னை ஒப்படைப்பேன் என்பதில் எவ்வளவு உறுதியாக இருந்தாள் என்பது புரிந்தது. கொஞ்சம் மாறினும் விரசமாகும் அளவுக்கு இருந்த பாடல் வார்த்தைகளை, அவள் எப்படிப்பட்ட சரணாகதி நிலையில் இருந்து சொல்லி இருப்பாள் என்று மிகவும் அழகாக விளங்கச் செய்தார்.
அடுத்தடுத்த கவிதை தலைப்பான ‘ஒன்று இலதா மாயையாய்’, ‘பாதியும் உறங்கிப் போகும் ‘தலைப்புகளில் வாழ்வின் எல்லை வாசல் சென்று சேர்வதற்கு முன்னமே ‘நமோ நாராயணாய’ என்ற வர்த்தகத்திடை கைகளை கூப்பு முக்கியத்துவம் புரிந்தது
‘கூனல் பிறை வேண்டி‘ தலைப்பில் கோவர்தன கிரி காட்சியையும் ,களிற்றிக்கு கவளம் கொடுக்கும் காட்சியையும் ஒப்பிட்டு கண் முன்னே கொண்டு வந்தார் ஜாஜா. ‘என்னையும் உன்னில் இட்டேன்‘ என்ற தலைப்பில் திருமாலின் குழலுக்கு கட்டுப்பட்டு ஆயர் சிறுமியர் போல குதூகளித்து உடல் உள் அவித்து எங்கள் காவல் கடந்து கயிறு மாலையாகி அந்த ஆதிசேஷன் முன் கவிழ்ந்து நின்றோம் அனைவரும்.
கடல் போன்ற வைணவத்தின் ஆழ்வார்களையும் தத்துவத்தையும் பிரபந்தத்தையும் துளியேனும் தெரிந்து கொண்டு சுவையான அக்கார அடிசல் சாப்பிட்ட மன நிறைவுடன் கிளம்பினேன்.
இதை தெரிந்து கொண்ட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த தங்களையும், இனிமையாகவும், எடுத்துக்காட்டுடனும், பரமாத்வாவை விளங்க வைத்த ராஜகோபாலன் அவர்களையும், அனைத்து ஏற்பாடுகளையும் முன் நின்று உதவிய அந்தியூர் மணி அவர்களையும் என்றும் நன்றியுடன் நினைத்துக் கொள்வேன்.
எங்கள் வீட்டு கொலுவின் வைகுந்தனின் அலங்காரத்தையும், கள்ளழகரின் அலங்காரத்தையும் இணைத்துள்ளேன்.
நன்றி
சசிகலா