அன்புள்ள ஜெ
உங்கள் பயிற்சி வகுப்புகள் பற்றிய காணொளிகளைக் காண்கிறேன். என்னுடைய கேள்வி ஒன்று உண்டு. இந்தவகையான வகுப்புகளால் ஒட்டுமொத்தமான பயன் என்ன என்று நினைக்கிறீர்கள்? இதனால் பெரும்பாலான மக்கள் ஏதேனும் ஆர்வம் கொள்வார்கள் என நம்புகிறீர்களா?
இதில் கல்வி உள்ளது. நம் மக்களுக்கு எதையாவது கற்றுக்கொள்வது என்றாலே கடுமையான ஒவ்வாமை உள்ளது என்பது என் அனுபவம். மிகக்குறைவான அளவிலே அறிவுக்கு வேலை இருந்தால் மட்டும்தான் அதில் ஆர்வம் கொள்வார்கள். நீங்கள் மேலைத் தத்துவம் கீழைத்தத்துவம் என்றெல்லாம் பேசுவது அவர்களுக்கு எரிச்சலைத்தான் அளிக்கும் என நினைக்கிறேன். என் நண்பர்கள் அந்த எரிச்சலைத்தான் காட்டுகிறார்கள்
எஸ்.ராதாகிருஷ்ணன்
அன்புள்ள ராதாகிருஷ்ணன்
நான் 30 ஆண்டுகளாக தமிழ்ச்சூழலில் புழங்குபவன். எனக்கும் இது தெரியும். தமிழ்ச்சூழலில் லட்சத்தில் ஒருவருக்கே எதையாவது புதியதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அதற்கான முயற்சியும் இருக்கும். எஞ்சியோர் ஏற்கனவே தங்களுக்கு எல்லாம் தெரியும், இயல்பாகவே எல்லாம் தெரியவருகிறது, சமூகவலைத்தளங்களும் வாட்ஸப்புமே போதுமானவை என நினைப்பவர்கள். எதுவும் தெரியாமல் எல்லாவற்றையும் விமர்சிக்கவும் நையாண்டி செய்யவும் முன்வருபவர்கள். அறிவார்ந்த எந்த முயற்சிக்கும் எதிரானவர்கள்.
ஆனால் அவர்கள் அப்படி இருப்பதுதான் இந்த முன்னெடுப்புக்கே காரணம். அப்படி இருக்கும் சூழலைக் கண்டு உருவான ஏக்கமும் பொறுமையின்மையுமே இதை தொடங்கி நடத்தத் தூண்டுதலாகின்றன. தடை மிகப்பெரியதென தெரியும். ஆனால் அதைக்கண்டு உளச்சோர்வு கொள்பவர்கள் உண்டு. ஊக்கம் அடைபவர்களும் உண்டு. நான் இரண்டாவது ரகம்.
விளைவுகளை நீண்டநோக்கில் திட்டமிடுவதில்லை. அதில் பொருளில்லை. ஒவ்வொரு நாளும் எண்ணியது நிகழவேண்டும். சீராக முறையாக நம் பணியை ஆற்றவேண்டும். விளைவை மாடுமேய்ப்பவன் பார்த்துக்கொள்ளட்டும்
ஜெ