வாழ்க்கையைப் பற்றிக்கொள்ளுதல்

அன்புள்ள ஜெயமோகன்

உண்மையில் உங்களுடைய காணொளி என் வாழ்க்கையை அப்படியே காட்டியது. இன்றைக்குள்ள வாழ்க்கை என்பது 60 வயதுக்குள் தீர்ந்துவிடுகிறது. முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு இன்று லௌகீக வாழ்க்கை சவால் நிறைந்ததாக இருக்கிறது. முன்பும் போராட்டம் இருந்தது. ஆனால் இன்று முழுநேரமும் அதிலேயே கிடக்கவேண்டியிருக்கிறது. என் அப்பாவும் அரசூழியர்தான். ஆனால் அவருக்கு ஊர்லைப்ரரி வேலை, தொழிற்சங்கப்பணிகள் என பல வேறு உலகங்கள் இருந்தன. நான் பெங்களூரில் இருந்தேன். காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை என் குடும்பத்தையும் வேலையையும் கவனிக்கவே சரியாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பு என்பது அப்படி ஒரு பெரும் பொறுப்பு. இரவு கூட நிம்மதியாகத் தூங்க முடியாது.

ஆனால் அவர்கள் எனக்கு 57 வயது இருக்கும்போது வேலைக்குப்போய்விட்டார்கள். அவ்வளவுதான் அதற்குமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை. செத்துப்போ என்றுதான் சமூகம் சொல்கிறது. ஆனால் இன்னும் எப்படியும் கால்நூற்றாண்டுக்கால வாழ்க்கை மிச்சமிருக்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. புதியதாக எதிலுமே ஈடுபாடு உருவாகவில்லை. நானே வலிய என்னென்னவோ செய்து பார்த்தேன். எதுவும் ஈர்க்கவில்லை. ஒவ்வொரு நாளும் நாலைந்து மணிநேரம் சமூக வலைத்தளங்களில் செலவிடுகிறேன். அதனால் தூக்கம் கம்மியாகி பல பிரச்சினைகள். உடல்நலம் சீரழிந்துகொண்டே செல்கிறது. என்னை நானே பார்க்கும்போது பயனில்லாத ஒரு டப்பா போல உணர்கிறேன். ஒரு பேக்கிங் மெட்டீரியல்தான் நான். எனக்கு என்று எந்த அர்த்தமும் இல்லை.

ஆர்.ரங்கன்

 

அன்புள்ள ரங்கன்

அதற்காகவே நாங்கள் வகுப்புகள் நடத்துகிறோம். ஒருவருக்கு தான் இருக்கும் நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும் என மெய்யாகவே எண்ணமிருந்தால் மாற்றிக்கொள்ள முடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைஆதித்தகரிகாலன் கொலை, கடிதம்