விபாசனா, கடிதம்

ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்.

பௌத்த மெய்யியல் விபாசனா வகுப்பில் கலந்து கொண்டேன். மூன்று மாதங்களுக்கு முன்பு நவீன மருத்துவம் வகுப்பில் கலந்து கொண்டு நற்பயன்களை அடைந்து வருகிறேன். மூன்று மாதம் தொடர் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு என்று இப்படியாக 5 கிலோ எடை குறைந்து உள்ள நிறைவோடு இருந்தேன்.

இந்த தருணத்தில் தங்கள் தளத்தில் விபாசனா தியான வகுப்பு அறிவிப்பை கண்டேன். உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுத்தாயிற்று. அடுத்து மன ஆரோக்கியம் என்று தோன்றியது அந்த அறிவிப்பை கண்ட நிமிடம்.

நான் சென்னை குன்றத்தூரில் வசித்து வருகிறேன் என் வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தான் திருமுடிவாக்கம் விபாசனா பயிற்சி மையம். அதைப் பற்றிய பேச்சு ஊருக்குள் நிலவும் .5 வருடங்களுக்கு முன்பில் இருந்து எனக்கு ஒரு ஆவல் அங்கு சென்று பத்து நாட்கள் பயிற்சி செய்ய வேண்டும் என்று .ஒரு நாளில் 15 மணி நேரம் பேசாமல் அமர்ந்து என் மூச்சை நானே கவனிக்கும் பயிற்சி எனக்கு கைகூடுமா என்று என்னை நானே பரிசோதித்துப் பார்க்கும் அவா அது. வீடு அதற்கு அனுமதிக்கவில்லை. சரி பத்து நாட்கள் தான் இல்லை இதே வகுப்பு மூன்று நாட்கள் தானே என்று என் விருப்பம் கருதி என் கணவர் என்னை அனுமதித்தார் .பதிவு செய்த அன்றே ஆசிரியர் அமலன் ஸ்டான்லி சார் பற்றி தமிழ் விக்கியில் படித்து தெரிந்து கொண்டேன். அவரின் மன விழிப்பு நிலை புத்தகத்தை தமிழினியில் ஆர்டர் செய்து வாங்கி மீண்டும் மீண்டும் படித்தேன். ஒரு சிறிய அறிமுகத்தோடு பயணத்தை தொடங்கினேன்.

மீண்டும் நித்திய வனம். இம்முறை நடைபாதை கூட பசுமை. முதல் நாள் வகுப்பு அறிமுகம் மற்றும் செய்முறை பயிற்சியோடு தொடங்கிற்று. யோகா மற்றும் தியானம் இவற்றின் பயிற்சியோடு வந்த பலர் இருப்பினும் தியானத்தின் அறிமுகமே இல்லாத என் போன்றோரும் பயிலும் வண்ணம் வகுப்பை தொடங்கினார் ஆசிரியர் .

உணவு இடைவேளைக்குப் பிறகு பயிற்சி தொடங்கிற்று. மெல்ல மெல்ல தொடங்கிய மழை பேரிறைச்சலோடு கொட்டிக் கொண்டிருக்க ஆசிரியர் சென்றதோ

பெரு அமைதிக்கு .கண்கள் திறந்து அவர் கூறியது இந்த இடம் , “நித்திய வனம் “இதற்கு நான் என்னை ஒப்பு கொடுத்து விட்டேன் ,அதை உடைத்து தான் உங்களுக்கு நான் பாடம் எடுக்க வேண்டும் என்று.

புத்தர் ,புத்த மதம் ,புத்தரின் சீடர்கள், வகுப்பு நடக்கும் இடங்கள், புத்தரின் வாக்குகள் என்று இதுவரை வாட்சப் மற்றும் முகநூல் புத்தரிலிருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட புத்தரை அறிமுகம் செய்தார் ஆசிரியர் .

நடை தியானம், மூச்சை கவனித்தல் ,உடலை கவனித்தல், உட்சென்று உடலை கவனித்தல், நம் கவனமின்மையை கவனித்தல் என்று பல பயிற்சிகளை எளிமையாகவும் கனிவாகவும் ஆசிரியர் விளக்கினார். இடையே அவரின் தனி வாழ்வு,

குடும்ப வாழ்வு, ஆசிரியர் பணி, அவரின் அன்றாட பயிற்சிகள் இவற்றை பகிர்ந்து கொண்டார். பெண்கள் மட்டும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ஒரு குழந்தையின் புன்னகையோடு இணைந்து கொண்டார் .

திருடனை காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றிய பாதிரியாரின் கதையோடு வகுப்பை முடிவு செய்தார் ஆசிரியர் அமலன் ஸ்டான்லி அவர்கள். மனம் திருந்திய அந்த மனிதன் இனி உண்மையோடு மல்லுக்கட்ட நேரிடும்.  அதுபோலத்தான் இங்கு கற்பிக்கப்பட்ட நல்லொழுக்கம் மற்றும் இந்த பயிற்சியோடு சிரமம் மேற்கொண்டாலும் அது உங்கள் நல்வழிக்கே என்று முடித்தார் ஆசிரியர்.

ஆசிரியரை அணுகி பயிற்சி சார்ந்த என் சந்தேகங்களை கேட்டபோது அவர் கூறியது, இப்போதுதான் அ எழுத கற்றுக்கொண்டு பயிற்சி செய்கிறீர்கள். இப்போது அது வெறும் சத்தம்தான் .ஒருநாள் அது “அன்பு” என்றாகி வரும் என்று.ஒரு குருவின் வாக்கு அது.

ஒரு நாளின் துவக்கம் மற்றும் உணவு இடைவேளை முடிந்து வகுப்பை புத்துணர்வோடு துவங்க ஆசிரியர் அமலன்சார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிறு சிறு யோகப் பயிற்சிகள் பயிற்றுவித்த யோகா ஆசிரியர் செல்லதுரை அண்ணா அவர்களுக்கும், வழக்கம்போல சோர்வே அடையாத மணி சார் அவர்களுக்கும்,புத்தரின் கொள்கைகளில் ஒன்றான ஈகையை இயல்பாகவே கொண்டிருந்த வெங்கட் ப்ரீத்தா தம்பதியினர் சென்னை வரை என்னை அழைத்து வந்து சேர்த்தனர் அவர்களுக்கும், சமையல் அம்மா சரஸ்வதி மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்த மல்லிகா அம்மா அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .

நிகழ்வை ஒருங்கிணைக்கும் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்..

நிர்மலா

குன்றத்தூர்

முந்தைய கட்டுரைவாசிப்பதன் பிரச்சினைகள்
அடுத்த கட்டுரைஅரசியல் கடந்த கல்வி ஏன்?