வாசிப்பதன் பிரச்சினைகள்

அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள் வெளியிட்ட வாசிப்பைப் பயிலமுடியுமா என்ற காணொளியைக் கண்டேன். என்னுடைய வாழ்க்கையை நானே சமூகவலைத்தளங்கள்- காணொளிகள் வழியாக அழித்துக்கொண்டவன். நல்ல மாணவனாக இருந்தேன். ஆய்வுமாணவனாக இருக்கும்போது எனக்கு  அரசியலார்வம் வந்தது. அதன் விளைவாக சமூக வலைத்தளங்களில் புகுந்து சர்ச்சைகளில் ஈடுபட ஆரம்பித்தேன். காணொளிகளைக் காண ஆரம்பித்தேன். ஒரே ஆண்டுதான். என்னால் எதையுமே படிக்க முடியாது என்பதைக் கண்டுகொண்டேன். ஒரு பக்கம்கூட படிக்க முடியாது. மனம் நிலைகொள்ளாது. விறுவிறுப்பாக எதையாவது படிக்கலாம் என்றாலும்கூட படிக்க முடியாது. காணொளிகளையே ஓட்டி ஓட்டி பார்ப்பேன். இப்போது மணிக்கணக்காக ஷார்ட்ஸ் பார்க்கிறேன். ஆய்வு அப்படியே நின்றுவிட்டது. ஒரு சின்ன வேலைக்குச் சென்று வருகிறேன். உங்கள் காணொளி ஒரு அடி விழுந்ததுபோல நான் எந்நிலையில் இருக்கிறேன் என்பதை எனக்குக் காட்டியது.

ஆர்.

அன்புள்ள ஆர்,

இந்த விஷயத்தை முன்னரே சொல்லிவந்திருக்கிறேன் என்றாலும் இப்போது தீவிரமாகச் சொல்லி வருவதற்கான காரணம், ஏராளமான உதாரணங்களை நான் இப்போது கிட்டத்தட்ட அன்றாடமென காண்கிறேன் என்பதுதான். நான் இப்போது சொல்வதை ஓஷோ 1970களில் டிவி வந்ததுமே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். நக்கலாகவும் இடக்காகவும்கூட சொல்லியிருக்கிறார்.

இன்று அன்றாட வாழ்க்கை காணொளி ஊடகம் சார்ந்ததாக மாறிவிட்டிருக்கிறது. காணொளியின் இயல்பு நம் மூளை அதற்கு எதிர்த்திசையில், (அல்லது பக்கவாட்டில்) ஓடிக்கொண்டே இருப்பது. அதைப் பிடித்து நிறுத்தவேண்டுமென்றால் காணொளிவிறுவிறுப்பாகஇருக்கவேண்டும். மனதை விட வேகமாக ஓடவேண்டும். ஆகவேதான் அதிரடிக் கருத்துக்கள், நையாண்டிகள், வசைகள், சண்டைகள் என செய்கிறார்கள். அந்தடோஸ்கூட்டிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் ரசிகன் விலகிவிடுவான். சினிமாவிலும் மற்ற தயாரிக்கப்பட்ட நிகழ்வுகளிலும் ஷாட் வேகமாக மின்னிச் செல்லும். ஆனால் தனிப்பட்ட காணொளிகளில் அது இயலாது. ஆகவே பேச்சை முடிந்தவரைகாரசாரமாகஆக்கிக்கொள்கிறார்கள். 

இதற்குப் பழகிய மனங்களால் நிதானமாக எதையும் பார்க்கவோ வாசிக்கவோ முடியாது. சினிமாவைக்கூட நிதானமாகப் பார்க்க முடியாது. ஏதாவது பரபரப்பாக இருந்தாகவேண்டும். மனம் பரபரவென்று, சிதறிப்பரவியபடியே இருக்கும். அத்தகைய தன்மை கொண்டவர்கள் வாசிக்க முடியாது. ஆய்வு செய்ய முடியாது. மூளையுழைப்புகளில் ஈடுபட முடியாது.  அது ஓர் அழிவு.

வாசிப்பு என்பது நம் மனம் வாசிப்பவற்றில் மூழ்கி நிகழ்வது. அதற்கு முறையாக பயிற்சி எடுக்கவேண்டும். தானாக அது அமையாது. வாசிப்பதற்கான தகுதியை இழந்தவர்கள் இரட்டிப்புப் பயிற்சியை எடுத்தாகவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைநீங்கள் ரஜினியா கமலா?
அடுத்த கட்டுரைவிபாசனா, கடிதம்