குருபூர்ணிமா – கடிதம்

அன்புள்ள சார்,

வணக்கம்.  மூன்றாமாண்டு குரு பூர்ணிமா நிகழ்வு. மூன்றாண்டுகளும் ஆசிரியர் உடனிருக்கும் நல்லூழ்

சனி மாலைபுத்தர், சாரதையை வணங்கி விட்டு திறந்த வெளியில் நிகழ்வைத் தொடங்கலாமென்றீர்கள். அரங்கினருகிலேயே அந்த எழில் கொஞ்சும் பசுமையினூடாக அனைவருக்கும் உங்கள் முகம் தெரிய அமர்ந்து நிகழ்வு தொடங்கியது.

ஜமீலா குரு பினா பாடலை பாடினார். நிகழ்வுக்கு பொருத்தமான இனிய பாடல்

அடுத்து குரு பற்றிய தங்கள் உரைகுரு என்பவர் யார் என்பதற்கு குரு நித்யா கொடுத்த விளக்கத்திலிருந்து தொடங்கினீர்கள். காலங்காலமாய் தொடரும் அறிவுச் செயல்பாடுகளின் வழி அடைந்த முழு மெய்மையையும் கொண்ட அவரே தனியான தனிமனிதருக்குரிய  நிறைகுறைகளை கொண்டுள்ளவரென்றும் விளக்கினீர்கள்

தாய்மையும், குருத்துவமும் இங்கிருப்பவற்றில் இயல்பானதென உவமைகளுடன் எடுத்து விளக்கினீர்கள்

அறிந்தவுடனேயே அறிவிக்கவும் எழும் துடிப்பை துலங்க வைத்தீர்கள்.குரு தகுந்த கலத்திற்காக ஏங்கி தேடிக்காத்திருப்பதை ராமகிருஷ்ணர் விவேகனாந்தர் வாழ்வின் நிகழ்வுகளை காட்டி அறியச் செய்தீர்கள்.

மிகச்சிறப்பான அரிய உரைகண்ணில் நீர்மையுடன் உளவெழுச்சியுடன் அமர்ந்து உரை  கேட்டது வாழ்வின் உச்ச தருணங்களிலொன்று.

தகுந்த கலம் தேடித் தேடி நிறைத்து கொண்டிருக்கும் உங்களின் தவிப்பையும், தேடலையும் ,கொடையையும் உரையினூடாக உணர்ந்தேன்.

அதன்பின் இரு அணிகளாக பிரிந்து வெண்முரசு சார்ந்த கேள்வி பதில் நிகழ்வுகடலூர் சீனு மற்றும் ஈரோடு கிருஷ்ணன் தலைமையில் இரு அணிகள். நான் சீனு அணி….

முணுமுணுப்பாக சத்தமின்றி விவாதித்து   வினாக்கள் தயாரிக்கையிலேயே கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. பின்னர் மாறி மாறி கேட்டு பதில் சொல்லும் நிகழ்வு. வெண்முரசில் ஊறித் தோய்ந்திருந்த உள்ளங்கள். வினா முடியும் முன் எழுந்த விடைகள். வினாக்களும் விடைகளும் நுட்பமானவை,கதை மாந்தரின் ஆளுமையை துலங்கச் செய்பவை, முக்கிய தருணங்களை தொட்டு செல்பவை, பெருந்தரிசனங்களை உள்ளடக்கியவை

ஜனமேஜயன் வேள்வியில் ஆஸ்திகன்  பெருஞ்செயலாற்றூகையில் எந்த மெய்மையைக்  கொண்டு விளக்குவான் என்பதற்கு சாங்கியமென்று சட்டென்று பதிலளித்த இளைய முகம்,

விடையை உறுதிசெய்ய அந்த முனையிலிருந்து தாவிவந்து கலந்து விட்டு மீளதாவி சென்று அவரிடத்தில் நின்று பதிலளித்த அந்தியூர் மணியண்ணன் , விடை தெரிந்த வினாக்களால் எழுந்த குதூகல முகங்கள் , தெரியாத வினாக்களால் வாசிப்பை  செம்மையாக்க தென்பட்ட உறுதியான முகங்கள்  என காட்சிகளாகவும்  உள்ளே நிறைந்திருக்கிறது அந்நிகழ்வு. கர்ணன் ஏன் துரோணரால் நிராகரிக்கப்பட்டான் போன்ற சிறந்த  கேள்விகளுக்கு வேறு வேறு சொற்களால் வந்த நுண்மையான விடைகளுடன்உங்களின் மேலதிக சொற்களும் இணைந்து  திறப்புகளை, தரிசனங்களை காட்டின

இறுதியில் சீனு அணி மதிப்பெண் கூட பெற்றிருக்க, மதிப்பெண் அதிகம் பெற்ற அணியிலிருந்து தகவல்களை அடிப்படையாக அமைந்த கேள்விகளே அதிகமாக இருந்ததென்றும் ,அதற்கு இணையம் போதுமென்றும் வெண்முரசு தேவையில்லையென்றும் ஈரோடு கிருஷ்ணன் சார் வாதாடி, அதனால் வெற்றி தோல்வியின்றி அப்போட்டி முடிந்ததாக தீர்ப்பையும் வழங்கினார். எப்பொழுதும் போல கிருஷ்ணனின் சொல்லிற்கு நீங்கள் கட்டுபட்டீர்கள்.

இரவு உணவருந்தி வந்த பின் வெண்முரசில் பிடித்தவொன்றை பற்றி ஒவ்வொருவரும் ஐந்து நிமிடங்கள் பேசி பகிரும் நிகழ்வு. மாண்டூக ஒலிப் பின்னணியில்  ஓடை விளிம்பருகே  நின்றவாறு முழு நிலவொளியில் ஒவ்வொருவரும் வெண்முரசு குறித்து பகிர்ந்தவை  உணர்ச்சியும், அறிவும் பிணைந்தமைந்திருந்தது. பகிர்வுகள் எண்ணத்தை எதிரொலிப்பதாகவும், தவறவிட்ட நுட்பத்தையும் உணர்வையும் துலங்க வைப்பதாகவும் கலவையாக அமைந்திருந்தன

தண்ணிலவின் குளுமையுடனான அந்த இனிய நிகழ்வில் பகிரப்பட்ட ஒன்றிலிருந்து தொடங்கி வியாச மௌனம் குறித்து விளக்கினீர்கள். வியாச மௌனம் எவ்வாறு வெண்முரசில் விரிவாக்கப்பட்டு   விடையளிப்பதாக அமைந்ததென சில இடங்களை சுட்டி காட்டினீர்கள். வெண்முரசிலும் அவ்வாறான மௌனங்கள் உண்டென்று விளக்கினீர்கள்.

ஜய வெண்முரசாக வளர்ந்ததை  தொகுத்து அளித்த சித்திரம் சிறப்பாக இருந்தது.

வெண்முரசும் கடக்கப்பட்டு வளருமென்றும் குறிப்பிட்டீர்கள்.

முன்னதாக சனி  அதிகாலை நெல்லையிலிருந்து கிளம்பி மதுரையில் ஜமீலாவை, ஈரோட்டில் கீதாவை கூட்டிக் கொண்டு மூவரும் வெள்ளிமலையில் வாசிப்புபயிற்சியில் இருந்த விஜியுடன் இணைந்து கொண்டோம்பசுமையான மலைவெளியில், பிடித்தமான வெண்முரசென்ற சிறகணிந்து பறப்பது போன்றவுணர்வு. நிகழ்வுகளைப் பற்றிய உரையாடலுடன் வெடிச்சிரிப்பில் மூழ்கியவாறே துயில்.

காவியம் ஏன் என்ற உரையுடன் துவங்கியது ஞாயிறு  நிகழ்வு.

காவியம் அதுவரை வந்த அனைத்து இலக்கியங்களின் உச்சமாக எவ்வாறு அமைகிறதென்று விளக்கினீர்கள். பண்பாடு முதலியன   காவியத்துள் பொதிந்துள்ள தன்மையை சுட்டி காட்டி காவியத்தின்  உன்னதத்தை விளக்குவதான உரை.

அதன்பின் வெண்முரசு பற்றிய ஐயங்களுக்கு விடையளித்தீர்கள்.

தருமன் அறத்தின் மூர்த்தியல்ல, அறத்தின் பொருட்டு துயரடைந்தவன் என்று அவனின் ஆளுமையை விளக்கியது பெரிய திறப்பாக இருந்தது. கிருஷ்ணன் எவ்வாறு பெரு வெற்றி பெற்ற  மனிதனாக,அரசனாக வெண்முரசில் மிளிர்கிறானென எடுத்து விளக்கி , தெய்வத் தன்மையுடன்   இணைந்ததை தொட்டு பேசியது பெருந் தரிசனமாயிருந்தது

அதன்பின் ஜெயராம், நவீன்,தாமரைக் கண்ணன் ஆகியோர் வெண்முரசு குறித்து உரையாற்றினர்.

ஜெயராம் ஆற்றிய உரையில் வெண்முரசின் வடிவம் குறித்து பேசியவொன்று மிக கவர்ந்தது. பதினைந்து முதல் இருபது நிமிடங்களில் வாசிக்க சாத்தியமான ஒரு அத்தியாயம் தனக்குள் கொண்டுள்ள முழுமை, சிறு பொழுதில் வாசித்த அது அந்நாள் முழுதும்வாரக்கணக்கில், மாதம், வருடமாக தொடங்கி வாழ்நாள் முழுமையும் திளைத்திருக்கும் ஒன்றாக மாறுகிறது என்றது அருமை

நவீன் ஆதியன்னையுடன் வெண்முரசின் அன்னை கதாபாத்திரங்கள் சிலவற்றை தொடர்புறுத்தி இணைத்த சித்திரத்தை குறிப்புணர்த்தினார்

தாமரைகண்ணன் பீஷ்மரின் ஆளுமையை மூன்று பகுதிகளாக பிரித்து  தெளிவான ஒரு உரையை வழங்கினார்.

சில வினாக்களை கேட்டு புத்தகம் பரிசளித்தீர்கள். கேள்வியெழுந்தவுடன் பல பேர் கரமுயர்த்த அவர்களில் ஒருவரை தேர்வு செய்து பதில் கூற வைத்தீர்கள். எப்படியாவது பதில்  கூறிவிட துடித்தபடியிருக்கையில்சித்ராங்கதனுடன் போரிட்ட கந்தர்வன் யார் என்ற கேள்விக்கு கேள்வியிலேயே பதிலிருந்த  எளிய விடையை கூறும் வாய்ப்பு கிடைத்தது. குருபூர்ணிமா அன்று உங்கள் கரங்களால் எழுதழல் . எழும் நிறைவும் உவகையும்  முழு வாழ்நாளுக்கானது.

உணவு இடைவெளிக்கு பின் பூபதியின் உரை. திருதிராஷ்டிரன் குலத்தின் பெருந்தந்தையாகவும் குருதித் தந்தையாகவும் இரு குணநலன்களில் விளங்கும் தன்மையை, அவரின் அலைக்கழிதல்களை பேரன்பை காட்டுவதாக அமைந்த உரை.

கடலூர் சீனு காவியம் குறித்து அவரின் சொற்களில் அவரது கோணத்தில் உரை நிகழ்த்தினார். ஒரு வகையில்  உங்கள் உரையின் தொகுப்பாகவும், அவரின் தனிப்பட்ட அனுபவங்களின் அறிதல்களாலானதாகவும் அவ்வுரை சிறந்திருந்தது

நீங்கள் காவியங்கள் நாடகமாக்கப் படுதல் பற்றி கூறினீர்கள். உடை பற்றிய பொருட்டின்றி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இசையுடன் வெளிப்பட்டு நீங்கள் பார்த்த சிறந்த காவியத் தருணங்களை பகிர்ந்து கொண்டீர்கள். காவியத்தின் பகுதியை  அவ்வாறு பாடி உரையாக மேடையில் நிகழ்த்தலாம்  என்று நீங்கள் கூறியதும் நாங்கள் சிலிர்த்து கொண்டோம். ஜமீலா மழைப்பாடலின் ஒரு பகுதியை பாடி பயின்று வந்திருந்தார்.

ஏதுவாகவே பிடித்த  அந்த பகுதி கம்பனை வாசித்த பின் மேலும் இறுக்கமாய் என்னை ஆட்கொண்டது. இம்பர்வாரியனாய் நாம் அப்பகுதியை எடுக்கலாம் என்ற என் கோரிக்கையை ஜமீலா ஏற்றிருந்தார். காவியத்தை நாடகமாக்குவது பற்றிய உரைக்குபின் பின் அச்சிறு நிகழ்வு அமைந்தது. ஜமீலா பாட சில பகுதிகளை  கீதாவும் நானும் வாசித்தோம் . அணில் எடுத்த கல்லாய் அமைந்த நிகழ்வுடன் குருபூர்ணிமா வெள்ளி மலை நிகழ்வு நிறைவுற்றது

வெள்ளிமலையிலிருந்து கிளம்பி செல்லும் வழியில் யானையை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது மகிழ்ச்சியின் எடையைக் கூட்டியது. பெருந்தலையூர் யான் அறக்கட்டளை ஜனநாயக வெற்றி விழாவில் கலந்து கொண்டோம். பின்னர் ஈரோட்டில் விஷ்ணு புர அலுவலகத்தில் நீங்கள் கலந்து கொண்ட Zoomல் நேரடியாக கலந்து கொள்ளும் நல்வாய்ப்பும் அமைந்து   குருபூர்ணிமா நிறைந்தது. மொத்த நிகழ்வுகளும் முழுநிலவாய், நிறையொளியாய் உள்ளே நிறைந்தது

திங்கள் காலை கீதாவுடன்  நட்டாற்றீஸ்வரர் கோயில் சென்றதால் இனிமை தொடர்ந்தது. நடுக் காவிரியில் அமைந்திருந்த எழில் கொஞ்சும் ஆலயச் சூழல். வியாசனுடன், அகத்தியரையும் அணுக நேர்ந்தது பேறு

முழுநிறைவுடன் இனிமையால் ததும்பியவாறு ஒளிபொருந்தி இல்லம் வந்தடைந்தேன்.

வாழ்நாள் முழுமைக்குமான காவியமும் தந்து, இணையுள்ளங்களலான நட்புச் சுற்றத்தையும் நல்கி கொண்டாட எழில் சூழலான மலைத் தங்குமிடமும் தந்திருக்கும் ஆசிரியரை  இத்தருணத்தில் வணங்குகிறேன்.

அன்புடன் 

ரா.சிவமீனாட்சி செல்லையா

முந்தைய கட்டுரைமரபிலக்கியம் பயில…
அடுத்த கட்டுரைகவனம், கடிதம்