அன்புள்ள ஆசிரியருக்கு,
கவனித்தலின் அடிப்படை என்ன? என்ற காணொளியை பார்த்தேன். ஒன்றை படிக்கும் போதோ பார்க்கும் போதோ என் கவனம் தாங்கள் கூறுவது போல புத்தகத்தில் வரும் ஒரு வார்த்தையையோ இல்லை ஒரு கருத்தையோ ஒட்டி என் அறிவில் இருக்கும் பலவற்றுடன் ஒப்பிட்டு திசை மாறி செல்வதுண்டு இதை நான் இளம் வயதிலேயே கவனித்திருக்கிறேன் அதனுடன் முட்டி மோதி இன்று வரை சோர்ந்திருக்கிறேன். “Complete attention” என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர் அனைத்து உரையிலும் பேசும் போது பொரும்பான்மையானோர் கவனச்சிதறலில்தான் இருக்கிறார்கள் என்று தோன்றியது அதை அடைய பயிற்சிகள் இருக்கும் என்று நம்பியதில்லை, அனைவரும் அதை மனித இயல்பு என்று எளிதில் கடந்து செல்கின்றனர். அதற்கான வகுப்புகளை தாங்கள் முன்னெடுப்பது ஒரு ஆகச்சிறந்த காரியம். எனக்கு வயது 26 இன்றும் என்னால் இதை ஒரு பயிர்ச்சி முறை வழியாக சரி செய்ய முடியுமா?
மேக்சின்
அன்புள்ள மேக்ஸின்
முதலில் நமக்குக் கவனித்தலில் பிரச்சினை, அல்லது குறைபாடு உள்ளது என்பதை உணரவேண்டும். அதுவே பெரும்பாலானவர்களிடம் இருப்பதில்லை. அந்த தொடக்கம் நிகழ்ந்தாலே பாதிப்பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதுபோலத்தான்.
நம் கவனக்குறைவு எதனால், எப்படி நிகழ்கிறது என்றும்; நாம் எந்த நிலையில் இருக்கிறது என்றும் நாமே மதிப்பிட ஆரம்பிப்பது இரண்டாவது நிலை.
மூன்றாவதாக அந்தக் காரணிகளைச் சரிசெய்துகொள்ள ஆரம்பிப்பது. அதற்கு ஓர் ஆசிரியர் வழிகாட்ட முடியும். அவ்வழிகளை நாம் உறுதியாக, நீடித்துக் கடைப்பிடிக்கவேண்டும். அப்போது நாமே நமக்குரிய சில வழிமுறைகளையும் கண்டடைவோம். அது நம்மை கூர்கவனம் கொண்டவர்கள் ஆக்கும்
ஜெ