உளச்சோர்வின் ஊற்றுக்கண்

மரியாதைக்குரிய ஜெமோ,

சிறு வயது முதலே பெற்றோரின் அரவணைப்பும் பாதுகாப்பும் இல்லாததால்(வறுமை மற்றும் பெற்றோரின் சண்டைகள்), எனது பதின்பருவதிலிருந்தே, மகிழ்ச்சி,இன்பம்,அமைதி, பாதுகாப்பு உணர்வு ஆகியற்றை உணர முடியாத நிலைக்கு மனம் வந்து விட்டது. நான் அரசு பொறியியல் கல்லூரியில் scholarship மூலமாக படித்து வறுமையில் இருந்து விடுபட்டு, திருமணம் முடிந்து, குழந்தைகள் பெற்று அனைத்தும் நடந்துவிட்டது.

ஆனால் எதுவுமே இன்பத்தையும் நிறைவையும் தரவில்லை. மனம் முழுக்க பயமும், பதாட்டமுமே இன்னும் உள்ளது (childhood truma is still haunting me)

இதை நான் 15 வருடங்களுக்கு முன்பே உணர்ந்து மனநல மருத்துவர்களை சந்தித்து மருந்துகள் எடுத்து எதுவுமே நிரந்தர பலன்களை கொடுக்கவில்லை.

சந்தோசம், உற்சாகம், எதையும் செய்யும் ஆர்வம்  என என்னளவில் கடந்த 20 ஆண்டுகளில் (எனக்கு வயது 42) உணந்ததே இல்லை. அனைத்தையும் எனது கடைமையை நிறைவேற்றவே செய்து கொண்டு இருக்கிறேன்.

anhedonia சொல்லப்படும் நிலை தான் எனது. அதைவிட மோசம் என்னவெனில் மனது நிறைந்த பயமும் பதட்டமும்

இதை எழுத காரணம் தங்களை போன்ற ஆசான்களின் வழிகட்டலோ, அலோசனயோ ஏதோ ஒருவகையில் ஒரு ஒளியை தரலாம் என்ற ஒரு நம்பிக்கை தான். தங்களின் முழுமை அறிவு முன்னெடுப்பு தான் எனக்கு தங்களை தொடர்பு கொள்ள ஒரு தூண்டலக அமைந்தது. என்னால் நான் நினைத்த அனைத்தையும் எழுத முடியவில்லை ,ஆனால் நீங்கள் ஓரளவு எனது சிக்கலை புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன்.

தங்களின் வழிகாட்டல் வேண்டி

அன்புடன்

ஆர்

அன்புள்ள ஆர்,

மிகச்சுருக்கமாக ஒன்றைச் சொல்கிறேன். கடுமையான உளச்சோர்வு, நம்பிக்கையிழப்பு, தனிமை ஆகியவற்றில் இருப்பவர்கள் இரண்டு வகை. முதல்வகையினர் மெய்யாகவே ஏதேனும் உடற்கூறியல் சிக்கல்கள் உள்ளவர்கள். அவற்றை மருத்துவர்களே சரிசெய்ய முடியும்.

ஆனால் அவர்கள் மிகக்குறைவான சதவீதம்தான். எஞ்சிய மிகமிகப்பெரும்பாலானவர்கள் உள்ளத்தை தவறாக மீட்டி மீட்டி  தங்கள் இருட்டைப் பெருக்கிக் கொண்டவர்கள்.

அத்தகையவர்களை நான் சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். அனேகமாக வாரம் இரண்டுபேர். ஏனென்றால் இந்த தலைமுறையில் அத்தகையவர்களே மிகுதி. அவர்களின் உண்மையான சிக்கல் அவர்களில் மட்டும் இல்லை. மொத்தமாக இந்தக் காலகட்டத்தில் உள்ளது.

சென்றநூற்றாண்டு வரை நம் சமூகத்தை ஆட்கொண்டிருந்த உயர்ந்த இலட்சியக் கனவுகள் இன்று இல்லை. இன்று இருக்கும் அரசியல் முழுமையாகவே வெறுப்பும் எதிர்மறைத்தன்மையும் கொண்டது. அது உளச்சோர்வை உருவாக்குவது, உளச்சோர்வாளர்கள் சென்றுசேரும் இடமும் கூட.

இன்று இளமையிலேயே ஒவ்வொருவரிடமும் ‘வாழ்க்கையில் முன்னேறுவது’ பற்றி மட்டுமே சொல்லி வளர்க்கிறோம். அது முக்கியம்தான். ஆனால் அது தன்னை மையமாக்கி, தன் இன்பங்கள் வெற்றிகள் என்று மட்டுமே சிந்திக்க ஒவ்வொருவரையும் பழக்கிவிடுகிறது. பெருங்கனவுகள் ஒவ்வொருவரிடமும் உருவாகின்றன. அவற்றில் சிலவே நிறைவேறுகின்றன. ஏனென்றால் அதுவே யதார்த்தம். விளைவாக நிறைவேறாக் கனவுகள் பெருகி உளச்சோர்வு நோக்கிச் செல்கிறார்கள்.

தன்னை மையமாக்கிய பார்வையின் விளைவாக ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு உறவிலும் தன்னலத்தை வெளிப்படுத்துகிறார்கள். தன் நியாயத்தையே பார்க்கிறார்கள். எல்லா உறவுகளையும் தனக்காகப் பயன்படுத்திக்கொள்ள, தன்பொருட்டு வளைக்க முயல்கிறார்கள். விளைவாக உறவுச்சிக்கல்கள் உருவாகி ஆழமான உளச்சோர்வு உருவாகிறது.

நான் பார்த்தவரை, உளச்சோர்வுக்கு ஒரே மருந்து இலட்சியவாதம்தான். பெருங்கனவுகளுடன் சமூகப்பணியில், அறிவியக்கப்பணியில், ஆன்மிகப்பணியில் ஈடுபடுதல். ஊழின் விளைவாக மாபெரும் இழப்புகளைச் சந்தித்தவர்கள்கூட அவ்வாறு மீண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.

‘பெற்றுக்கொள்ளும்’ உளநிலையும் வாழ்க்கையும் கொண்டவர்கள் எவரும் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது. ஏனென்றால் பெற்றுக்கொள்ளும் விழைவை நிறைவுசெய்யவே முடியாது. அகங்காரம் புகைந்தபடியே இருக்கும். நான் நான் என்றே உள்ளம் அரற்றும். பிறர் தங்களுக்கு தரவேண்டியவை, தங்களிடம் நடந்துகொள்ளவேண்டியவை பற்றி மட்டுமே கணக்கு பார்க்கும். அசையாப்பாறை போல வாழ்க்கை கிடக்கும்.

‘அளிப்பவர்கள்’ மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் எதையும் கணக்குநோக்காமல் அளிப்பவர்கள். அதன்பொருட்டு தனக்கான களம் ஒன்றை கண்டடைந்தவர்கள். அங்கே தன்னை மறந்து பணியாற்றுபவர்கள். உளச்சோர்வுக்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. வாழ்க்கை பறந்துகொண்டிருக்கும்.

நீங்கள் நாங்கள் நடத்தும் யோகம்- தியானம் சார்ந்த வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். உங்களை நீங்களே பார்க்க அவை உதவும். உங்களுக்கு என்னதான் வேண்டும் என்று பாருங்கள். உங்கள் களம் ஒன்றை கண்டடைவீர்கள். முழுவீச்சுடன் அதில் செயல்புரிவது ஒன்றே மீளும் வழி. அளிப்பவர்களே வெல்பவர்கள். அளிப்பவர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சி

இதைச் சொல்ல என் தகுதி ஒன்றுண்டு, நான் உங்கள் நிலையில் இருந்து, மீண்டவன்

ஜெ

முந்தைய கட்டுரைமரபு எதற்காக?
அடுத்த கட்டுரைகவனம், கடிதம்