பதில்கூறக்கூடாதவை!

அன்புள்ள ஜெயமோகன்

உங்களுக்கு சென்ற பிறவி அடுத்த ஜென்மம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளதா? உள்ளது என்று நீங்கள்ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கற்ற அறிவு,அடைந்த ஞானம் ஆகியவை அவன் இறப்போடு அழிந்துவிட கூடியவையா?” என்பது போல் எழுதிய வரியில் நான் புரிந்து கொள்கிறேன்.சில சமயங்களில் நம்மால் எல்லாம் முடியும் என்று நினைக்கும் போது நம்மை மீறி ஊழ் என்றோ பிரபஞ்ச விதி என்றோ நம் முன் பல்லை காட்டி சிரிப்பது எது? அந்த விதியை நம் செயல்களால் நாமே உருவாக்கி கெள்ளவதா?அப்படி மானுடர்க்கு தத்தம் விதியை  தாமே நல்லதுகளாலும் அல்லதுகளாலும் உருவாக்கி கொள்ள அனுமதி உள்ளதா? அவனை மீறி ஒரு விசை எல்லாவற்றையும் இயக்குவதென்றால் அந்த செயலின் பொறுப்பு அவனை எப்படி சேரும்? அது தான் எல்லாம் என்றால் அது நமக்கு கொடுத்த அறிவின் பொருள் இந்த பெரும் களியாட்டின் முன் என்ன?

(இக்கேள்விகளை வெளியே பகிர்ந்து கொண்டது இல்லை. பதிலுக்கு எந்த நூல்களையும் ஆராய்ச்சி செய்ததும் இல்லை.அதை செய்யாமல்  நேரடியாக உங்களிடம் கேட்பதற்கு மன்னியுங்கள்

நான் உங்கள் படைப்புகளில் சிலவற்றை வாசித்துள்ளேன் சமீபத்தில்

அந்த முகில் இந்த முகில் வாசித்தேன். அப்படைப்பு உங்களை என் நெருங்கிய நண்பனை போல் உணரசெய்தது.

பிரகதீஸ்வரன்

அன்புள்ள பிரகதீஸ்

நாம் எல்லாவற்றையுமே தர்க்கபூர்வமாக அறியமுடியும், விவாதிக்க முடியும், புறவயமாக நிரூபிக்க முடியும் என நம்புகிறோம்

ஆனால் உண்மையில் தர்க்கபூர்வமான, புறவயமான விஷயங்களை மட்டுமே அப்படி விவாதிக்கவும் நிறுவவும் முடியும். நம் வாழ்க்கையில் அப்படி அல்லாத விஷயங்கள் ஏராளமாக உள்ளன. தர்க்கம் என நாம் உருவாக்கிக்கொண்டிருப்பது நம் மூளைக்கு எட்டிய ஒரு சிறு வட்டம். இது நமக்கு இங்கே ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு வாழ்வதற்கு உரியது. மொத்தப்பிரபஞ்சத்தையும் புரிந்துகொள்வதற்கு உதவியானது அல்ல.

அன்பு, பாசம், காதல் என எல்லா அடிப்படை உணர்வுகளும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. நாம் ஏன் இங்கே வாழ்கிறோம், எதன்பொருட்டு மானுடம் அறிவைச் சேமிக்கிறது, இயற்கையில் நம் இடம் என்ன, இயற்கை என்னும் நிகழ்வின் நோக்கம் என்ன என்னும் கேள்விகளெல்லாமே தர்க்கத்துக்கு முற்றிலும் அப்பாலுள்ளவை

அந்தக் களத்தைச் சேர்ந்த கேள்வி நீங்கள் கேட்பது. நான் மறுபிறப்பு, கர்மவினை ஆகியவற்றைநம்பவில்லைஅவை உள்ளன என்றுஅறிந்திருக்கிறேன்அந்த வேறுபாடு முக்கியம். ஆனால் நான் அவற்றை பொதுவெளியில் விவாதிக்க மாட்டேன். மறுப்பவர் முன் பேசவே மாட்டேன்

ஜெ

முந்தைய கட்டுரைகோயில்கள் வெறும் கலைச்செல்வங்களா?
அடுத்த கட்டுரைதத்துவ வகுப்பு, கடிதம்