உரைகள், கடிதம்

 

அனைத்துக் காணொளிகளும் 

வணக்கம்..

தங்களின் உரைகள் நிறையக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. நடையும் யூடியூப் உரையுமாக அவை பயனுள்ள பொழுதுகள்..

ஒரு வார்த்தை பெரும் தெளிவைத் தந்துவிடுகின்றது.. ஆனந்த மய கோசம் பற்றி தாங்கள் சொன்ன being என்ற வார்த்தை அப்படியே இருப்பு நோக்கி இழுத்தது.. அல்லது இருப்பை அப்படியே இருந்து அனுபவிக்க பயில வழி காட்டியது..

ஒரு சுழலில் நாம் மாட்டிக் கொள்வது.. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன.. குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது போல பழமொழிகள்.. என்றாலும் புதிய காட்டு தரும் விழிப்பு தனிதான்.. கடலில் செல்லும் பொது நீர் சுழலில் மாட்டிக் கொண்டால் முன்னோக்கி பயணம் செய்வது போலவே தோன்றும்.. சுற்றி நீர்ப் பரப்பு என்பதால் சுற்றுகிறோம் என்பதே தெரியாது.. எத்தனை நேரமானாலும் அதே இடத்தில் சுற்றுவோம்.. இந்த உதாரணம் மனதில் தங்கி சுழலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது..

என். டி. ராமராவ் விடிகாலை 3.30 மணிக்கு செப்பு என்பது.. உன்னைப் பற்றி சொல்லு என்பது கம்ப்ளீட்டா வேறு அனுபவம்.. அபி அவர்களின்  உரையொன்றில் அந்தி பற்றி விளக்கியது.. ஒன்று மற்றதாக மாறுவது அந்தி என்பது நீண்ட நேரம் யோசிக்க வைத்தது.

கற்றல் மரபுக்கு இம்மியும் குறையாதது கேட்டல் மரபு.. சுரா வுக்கோ, ஜெயகாந்தனுக்கோ சிறிதும் குறைந்தவர் இல்லை கேட்டல் வழி அறிவு கொண்ட ஒரு தாத்தனோ பாட்டியோ என்ற உங்களின் கட்டுரை வரிகள் நினைவிலிருந்து மேலெழுகின்றன.. கேட்டல் தான் எத்தனை இன்பம்.. கூடவே அறிவும் தெளிவும்..

சிங்களர்கள் தேவையின்றி ஈழத் தமிழர்களின் நினைவிடங்களை போர் முடிவில் தேடி தேடி அழித்தனர்.. அது தேவையற்ற வேலை.. அப்படியே விடப் பட்டிருந்தாலும் 10 , 20 ஆண்டுகளில் அவை வெறும் செல்ஃபி பாயிண்டுகளாக மாறி இருக்கும்.. சமூகத்தின் வரலாற்று உணர்வு அலட்சியத்தை  தோலுரித்துக் காட்டுகிறது மேற்கண்ட செய்தி..

கலை,  இசை இவைகளை விட ஒரு படிமேல் அறிதலில் வரும் இன்பம்.. இதற்கு கூறப்பட்ட நாய் உதாரணம் நினைவகலாது.. இச்செய்தி நிறைய வாசிக்க ஊக்கம் தருகிறது.. அசையும் போதே தோணி.. அசையாத போது தீவு.. தொடர்ந்து தொந்தரவு செய்யும் தேவதேவனின் வரிகள்..

நமது மரபில் நல்ல உதாரணங்கள் புலமையின் அடையாளம்.. அதனால்தான் சங்கக் கவிதைகள் போன்ற பாரம்பரிய பாடல்கள் சிறந்த உதாரணங்களால் கட்டப்பட்டுள்ளன.. ஒரு கருத்தை மிக அருகில் கொண்டு வந்து சேர்ப்பவை நல்ல உதாரணங்கள் தான் என உ. வே. சா. பற்றிய ஒரு நூலில் வாசித்த ஞாபகம்.. சிக்கலான கருத்துகளையும் தெளிவாக புரிய வைக்கும் அருமையான உதாரணங்களால் நிரம்பி வழிகின்றன தங்கள் உரைகள்.. இந்த உதாரணங்கள் முன்பு அறியாத ஒன்றாகவும் இருப்பது தாங்கள் கூறும் கருத்துக்கள்  நீண்டகாலம் நினைவில் நிற்க   காரணமாகிவிடுகின்றன.

முத்தரசு வேதாரண்யம்

அன்புள்ள முத்தரசு

நன்றி

நான் என் உரைகளில் ஒரு சிறு ஆர்வத்தூண்டலையே நிகழ்த்துகிறேன். உண்மையில் அவை உரைகள் அல்ல, சிந்தனைக்கான அழைப்புகள் மட்டுமே.

ஜெ

முந்தைய கட்டுரைமனிதனின் ஆழம் என்பது என்ன?
அடுத்த கட்டுரைவாசிப்புப் பயிற்சி, கடிதம்