முழுமையறிவு, கடிதம்

அன்புள்ள ஜெ

முழுமையறிவு பர்றிய உங்கள் விளக்கம் கண்டேன். இந்தவகையான முன்னெடுப்புகள் எல்லாவற்றிலும் பொதுவாக எழும் எல்லா ஐயங்களுக்கும் பதில் சொல்லியிருக்கிறீர்கள். பொதுவாக, ஒரு நபரை அல்லது ஒரு குறிப்பிட்ட கருத்தை முன்வைக்கும்பொருட்டுத்தான் இந்தவகையான முன்முயற்சிகள் எல்லாம் செய்யப்படுகின்றன. நிதியும் அதற்கே அளிக்கப்படுகிறது. அது காலப்போக்கில் ஓர் அதிகாரமாகவும் ஆகிறது. நீங்கள் உங்களையோ, உங்கள் தரப்பையோ, உங்கள் குருநாதரையோகூட முன்வைக்கவில்லை என்று சொல்கிறீர்கள்.

அது சிறந்த ஓர் வழிமுறைதான். ஆனால் ஒரு சிக்கல் உண்டு, இந்தவகையான கல்வி என்பது மையமில்லாமல் சிதறிப்பரந்துபோகலாம். காலப்போக்கில் இந்த கல்வியின் பயன் என்பது கண்கூடாகத் தெரியாமலும் ஆகலாம். அதேபோல, முரண்பட்ட சிந்தனைகள் கொண்ட அமைப்பு உள்விவாதங்களால் காலப்போக்கில் உடைந்து பலவாக சிதறவும் வாய்ப்புண்டு.

கே.ராகவன்

 

அன்புள்ள ராகவன்,

நீங்கள் சொல்லும் இரண்டுமே உண்மையாக இருக்கலாம்.

ஒன்று, நான் இதன் விளைவுகள் கண்கூடாக இருக்கவேண்டும், அவை என் கணக்கில் வரவு வைக்கப்படவேண்டும் என்று நினைக்கவில்லை. அவை நிகழ்ந்தால்போதுமானது

இரண்டு, இந்த அமைப்பு ஒரே கட்டுமானமாக இருக்கவேண்டும் என்றும் நினைக்கவில்லை. சிதையக்கூடாது, ஆனால் பலவாகப்பிரிந்து செயல்பாடுகளை முன்னெடுக்கும் என்றால் நன்று

இப்போது இதற்குள் உள்முரண்கள் தனிப்பட்ட மோதல்களாக ஆகாமல் பார்த்துக்கொள்வதொன்றே நான் செய்யக்கூடுவது

ஜெ

முந்தைய கட்டுரைசம்ஸ்கிருதம், கடிதம்
அடுத்த கட்டுரைமரபை இனிமையென அறிதல்