அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
நீண்ட காத்திருப்புக்குப்பின், தங்களுடைய தத்துவ வகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது. தத்துவம் பற்றிய நிறைய காணொளிகளை பார்த்து ஒன்றும் விளங்காமல் தங்களுடைய ‘இந்து மரபில் ஆறு தரிசனங்கள்‘ வாசித்தப்பிறகுதான் தத்துவம் என்றால் என்ன? தரிசனம் என்றால் என்ன? போன்ற அடிப்படை கேள்விகளுக்கான விடையும் ‘ஆறு தரிசனங்கள்’ மற்றும் ‘ஆறு மதங்கள்’ பற்றிய விளக்குமும் கிடைத்தது. தங்கள் வகுப்பில் கலந்துகொண்ட பிறகு என்னுடைய மனச்சித்திரத்தில் கூடுதல் தெளிவும் விளக்கமும் கிடைக்கப்பெற்று என்னுள் ஒரு முழுமையை உணர்ந்தேன். ஆனால் தாங்கள் இறுதியில் கேட்ட 100 வினாக்களின் போது சில குழப்பங்கள் வந்ததை தவிர்க்க முடியவில்லை. தத்துவத்தின் வாயிலை அடைவதற்கே இன்னும் சில தூரம் கடக்க வேண்டும் என்பதையும், மீண்டும் மீண்டும் மனனம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தேன். .
மற்ற சில ‘முழுமையறிவு‘ வகுப்புகளில் கலந்துகொண்டவர்களிடம் உரையாடியதிலுருந்து நான் தெரிந்துகொண்டது, இந்த வகுப்புகள் அனைத்தும் மனித வாழ்க்கையின் அறிவுத்தேவைகளை ஒன்றை ஒன்று இட்டு நிரப்பி முழுமையறிவை வளர்த்தெடுக்கும் முறைமைககைள் வழங்குகின்றன. அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு மேலோங்கி நிற்கிறது.
இந்த தத்துவ வகுப்பின் மூன்று நாள் நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்தன, அதிலும் ‘சிருஷ்டி கீதம் முதல் சிகாகோ வரை’ என்ற அளவில், அந்த சிவந்த வானத்தின் பின்னணியில் தாங்கள் வழங்கிய உரை ஏற்படுத்திய மெய்சிலிர்ப்பு இன்னும் அடங்கவில்லை. ஒரு கல்ட் கிளாசிக் புத்தகத்திற்கான உணர்வும் உள்ளடக்கமும் அந்த உரையில் உள்ளது என நினைக்கிறேன். அந்த சூழலில் தாங்கள் எங்களுக்கு வழங்கிய ஞான உரையும் ‘தங்கத்தட்டில் வழங்கிய மதுரம்தான்’.
என்றென்றும் அன்புடன்,
நடராஜன் பா
பாண்டிச்சேரி