அன்புள்ள ஜெ,
நலமறிய ஆவல்.
சென்ற வாரம் ஆலயக்கலை நண்பர்கள், ஆசிரியர் ஜெயகுமாருடன் சென்று வந்த பயணக்குறிப்பை தங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இந்த மின்னஞ்சல்.
முன்னர் சென்றிருந்த பயணம் முற்கால சோழர்கள் காலத்தைய கட்டிடக்கலையை காண்பதற்கு, விஜயாலய சோழீஸ்வரம், கோரங்கநாதர் போன்ற கோயில்களுக்கு, தற்போது சாளுக்கிய மன்னர்களின் கட்டிடக்கலை அறிய, அடுத்து பாண்டிய மன்னர் காலத்தைய பயணம் திட்டமிட்டிருக்கிறோம். இத்தகைய பயணம் வரலாற்று அறிவை மட்டுமன்றி ஆளுமையையும் செதுக்குகிறது. வரலாறு மேலும் அறிய அறிய சித்திரம் முழுமை அடைந்தே வருகிறது. தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்கள், இதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குப்தர் காலத்தைய கட்டுமானங்கள் இவை அனைத்திற்கும் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்து பிரமிடுகள் இவற்றை எல்லாம் எண்ண எண்ண போலி பெருமிதங்கள் அனைத்தும் அகன்று புறவயமான வரலாற்று பார்வை கிடைக்கிறது.
மெய்யாகவே பயணம் முழுதும் வெய்யோனும் இந்திரனும் பேரன்புடன் இருந்தனர், வேண்டியபோது பொழிந்தும் வாடியபோது பொறுத்தும் அருளினர்.
இத்தனை நல் வாய்ப்பிற்கும், நண்பர் குழுவுக்கும் காரணமாக அமைந்த ஆசான் ஜெயமோகனுக்கும், ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அவர்களுக்கும், கவிஞர் சாம்ராஜ் அவர்களுக்கும், பயணத்தில் கரம் பற்றி, தோள் தட்டி அழைத்து சென்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் அன்பும்
மனோஜ்குமார்