கமல் 70

நான் சம்பிரதாய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதில்லை. எந்த எழுத்தாளரின் பிறந்தநாளைப் பற்றியும் எழுதுவதில்லை. சுந்தர ராமசாமி, ஜெயகந்தன், ஆற்றூர் ரவிவர்மா, ஞானி எவரைப்பற்றியும். குரு நித்யாவின் நூறாவது பிறந்த ஆண்டு இது. அதைப்பற்றியும் எழுதவில்லை.

இன்று கடலூர் சீனு அழைத்து இன்று கமல் எழுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் தெரியுமா என்று கேட்டார். எனக்கு அப்போதுதான் தெரியவந்தது. சட்டென்று நினைவுகள் உருவாகி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்.

1979 ல் என் 17 வயதில் கன்யாகுமரி என்ற மலையாள சினிமா வழியாக கமல் எனக்கு அறிமுகமானார். 1972ல் வெளிவந்த கன்யாகுமரியில் நடிக்கையில் அவருக்குப் 18 வயதுதான் இருக்கும் என நினைக்கிறேன். கன்யாகுமரியில் அவர் என்னைப்போலவே இருந்தார். மிக எளிதாக நான் அவருடன் என்னை அடையாளம் கண்டேன்.

1980 ல் நான் அவருடைய ஒரு பேட்டியை மலையாள இதழான நாநாவில் வாசித்தேன். அதில் எம்.டி.வாசுதேவன்நாயர், ஓ.வி.விஜயன், பெரும்படவம் ஸ்ரீதரன், வி.டி.நந்தகுமார் பற்றி அவர் பேசியிருந்தார். அந்த் பேட்டி என்னை இன்னும் கிளர்ச்சிகொள்ளச் செய்தது. அழகன்,அறிவுஜீவி. அதுதான் நான் கனவுகண்ட என் வடிவம்.

பின்னர் அவரை அணுக்கமாகத் தொடர்ந்துகொண்டிருந்தேன். சிற்றிதழ்கள் மட்டுமே இலக்கியம் பேசிக்கொண்டிருந்த காலம். அன்று அவர் பேரிதழ்களில் தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், ஞானக்கூத்தன் என்று பலரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவர் அன்று என்னை தமிழுக்குள் ஈர்த்த முதன்மைக் குரல். பின்னர்தான் நான் சுந்தர ராமசாமியைக் கண்டுகொண்டேன்.

இப்போது கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. இன்றும் கமல் எனக்கு அகக்கிளர்ச்சியூட்டும் ஆளுமையாகவே இருக்கிறார். எப்போதும் என் பெருங்கனவுகளை முதலில் பகிர்ந்துகொள்ளும் சிலரில் ஒருவர் கமல். அக்கணமே மிகுந்த ஊக்கத்துடன் அதை முன்னெடுக்கத் தொடங்குபவர். ஒருபோதும் எதிர்மறையான எதையும் சொன்னதில்லை. முழுமையறிவு என்னும் இக்கனவு உட்பட எல்லாமே அவரிடம் முதலில் பகிர்ந்தவை. சிலசமயம் அவரிடம் பேசும்போது அக்கணம் உருவானவையும்கூட. அவர் அப்படி ஓர் ஊக்கமூட்டும் ஆளுமையாக அன்றுமுதல் இருந்து வருகிறார்.

கமல் இன்று என் நண்பர். நான் சந்தித்த மகத்தான உரையாடல்காரர்களில் ஒருவர். இனிய நட்புநாட்கள் அவருடன் என்னுள் உள்ளன. அந்த அணுக்கத்திலும் அவரை அகத்தே கொஞ்சம் விலக்கி பழைய ரசிகனாக என்னை நிறுத்தி பார்த்துக்கொள்கிறேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைபதாமி பயணம்
அடுத்த கட்டுரைபயணம் என்பது அறிதலே