அன்புள்ள ஜெ,
சைவ ஆகமங்களைத் தமிழர்கள் தான் வடமொழியில் எழுதியதாக ஒரு வாதம் உள்ளது. அதைப் போல வேதங்கள் மற்றும் உபநிஷத்துகள் போன்றவற்றைச் சமஸ்கிருதம் அறிந்த தமிழர்கள் தான் இயற்றினர் என மறைமலையடிகள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததாகப் படித்தேன். வெற்றுப் பெருமிதப் பார்வைக்கானச் சாத்தியங்களை அறிகிறேன். ஆனால் ஆகமங்கள் பற்றிய கூற்று உண்மையோ எனத் தோன்றுகிறது.
இங்கிருந்த முறையான சாதிய அடுக்கு முறைகளைப் பார்த்து வியந்து ஆரியர்கள் அந்தக் கோட்பாட்டை பூர்வக்குடி மக்களிடமிருந்து கற்றுக் கொண்டதாக ராகுல் சங்கிருத்யாயன் குறிப்பிடுகிறார்.
உங்கள் கருத்தை அறிய விழைகிறேன்.
அன்புடன்,
கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி
இந்தவகையான ஊகங்கள் பல அறிஞர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன. சாதியடுக்குமுறை என்பது பழங்குடி இனங்களின் மேல்கீழ் அடுக்கு. அந்த அடிப்படையிலான சாதி அடுக்குமுறை தெற்கில் இருந்தே வடக்குக்குச் சென்றது, வடக்கில் இருந்த வர்ண அமைப்புக்கு ஏற்ப அது மறு அமைப்பு செய்யப்பட்டது என்பது ஓர் ஊகம். பலர் அதை எழுதியுள்ளனர். இத்தகைய ஊகங்களுக்குப்பின்னால் செல்வது என் வழக்கம் அல்ல, இலக்கியவாதியாகவும் மெய்யுசாவியாகவும் அதனால் எனக்குப் பயனேதுமில்லை. இருக்கலாம், இல்லாமலுமிருக்கலாம். இதில் நம்முடைய அரசியல்முன்முடிவு கலக்காமல் ஆராய நம்மால் எளிதில் முடியாது.
ஆகமமுறை தெற்கிலிருந்தே உருவானது என்பது என் எண்ணம். ஆலயம் என்னும் அமைப்பே தெற்குக்கு உரியதுதான். பின்னாளில்தான் அது வைதிகமரபுடன் இணைவுகொண்டது. ஆலயவழிபாட்டின் பல்லாயிரம் வழிமுறைகளை ஒருங்கிணைக்க, வகைப்படுத்த ஆகமங்கள் உருவாக்கப்பட்டன. அன்றைய இணைப்புமொழி சம்ஸ்கிருதம் என்பதனால் அவை சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. வடக்கே இன்றும் பெரும்பாலும் ஆகமங்கள் புழக்கத்தில் இல்லை.
ஜெ