அன்புள்ள ஜெ,
நானும் என் கணவரும் இந்த மாதம் (நவம்பர்) 6,7,8 தேதிகளில் நித்யவனத்தில் நடைபெற்ற நவீன மருத்துவ அறிமுக வகுப்பில் பங்கேற்றோம்.
இந்த வகுப்புக்கு வரும் எண்ணம் முதலில் எனக்கு இருக்கவில்லை. எதற்காக எனக்கு மருத்துவம் பற்றி அதுவும் அலோபதி பற்றி தெரிய வேண்டும். ஓரளவு தெரிந்தது போதும். உடம்பு சரி இல்லையென்றால் மருத்துவரிடம் போகிறோம், மருந்து அல்லது சிகிச்சை அளிக்கிறார். இதில் நான் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது என்று தான் எண்ணினேன். அதனால் தான் முந்தைய முகாமில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் சென்ற முகாமில் கலந்து கொண்ட குக்கூ நண்பர்கள் மிக சிறப்பாக இருந்தது என்று கூறி எங்களையும் கலந்து கொள்ள பரிந்துரை செய்தனர். எனவே வகுப்பிற்கு பதிவு செய்தோம். நன்றாக இருந்தது என்று அறிந்தது தவிர தளத்தில் இந்த வகுப்பு பற்றி வந்த வேறெந்த கடிதங்களையும் படிக்காததால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி கலந்து கொண்டோம்.
முந்தைய நாள் மாலையே நித்யவனம் போய் சேர்ந்ததில் இயற்கையுடன் கூடிய அருமையான தனிமை கிடைத்தது. ஏதோ எங்கள் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வு. இப்போதெல்லாம் நித்யவனம் எங்கள் வீடு போன்ற உணர்வு தருகிறது.
மறுநாள் காலை முதல் இரண்டரை நாட்கள் மருத்துவர் மாரிராஜின் வகுப்பு தந்த பிரமிப்பில் இருந்தோம். நம் உடற்கூறுகளை அவர் விவரித்தது, ஒற்றை உயிரணுவில் தொடங்கி மனித உடற்கூறுகளை அவர் விவரித்து விளக்கியது எங்களை ஆழ்ந்த பரவசத்துக்குள்ளாக்கியது. பள்ளியில் வேதியியல் மற்றும் உயிரியலை விருப்பமில்லாமல் மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. இவர் போன்ற நல்ல ஆசிரியர் அப்போது இருந்திருந்தால் இன்னும் கூட கொஞ்சம் சிறப்பாக படித்திருக்கலாம்.
முதலில் மருத்துவத்தின் வரலாற்றில் தொடங்கி, கடலில் உருவான முதல் உயிரணுவில் தொடங்கி நிலத்துக்கு குடிபெயர்ந்த உயிர்களின் வளர்ச்சி, அவை உருப்பெற்ற விதம், அவற்றினுள் வெவ்வேறு பாகங்கள், அமைப்புகள் தேவையின் அடிப்படையில் உருவான விதம், அவை இடைவிடாமல் இயங்கும் விதம், நாம் உண்ணும் உணவு நம் உடலை என்ன செய்கிறது அல்லது நம் உடல் உணவை என்ன செய்கிறது ஆகியவற்றை அவர் விளக்கிய விதம் மிகச் சிறப்பு. எந்த மருந்துகளையும் குறிப்பிடாமல், பிற மருத்துவ முறைகளை பழிக்காமல் நவீன மருத்துவம் எப்படி அறிவியல் சார்ந்து செயல்படுகிறது என்பதை விளக்கியது சிறப்பு. நோய்களின் வகைகள், அவை உருவாகும் காரணங்கள், அவற்றை கண்டறியும் விதங்கள் ஆகியவற்றையும் சிறப்பாக விளக்கினார்.
பொதுவாக வகுப்புகளில் விளக்கப்படுவது போலில்லாமல் உடற்கூற்றைக் கூட, அறிவியலைக் கூட ஆன்மீக நோக்கில் விளக்கியது பிரபஞ்ச படைப்பின், இயக்கத்தின் மீது பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த படைப்புகளுக்கு இயக்கத்துக்கு தான் கடவுள் என்று பெயரோ என்று தோன்றியது.
நித்யவனத்தின் வகுப்புக்களின் சிறப்பு அவற்றை ஆசிரியர்கள் வடிவமைக்கும் விதம் தான். தேவையான இடைவெளியுடன் பங்கேற்பவர்களுடன் ஒரு உரையாடலாக தான் வகுப்புகள் நடைபெறுகின்றன. எனவே வகுப்பில் சோர்வு, தூக்கம் ஆகியவை தோன்றுவதில்லை. மேலும் கவனக்குவிப்பிற்கு சுற்றியுள்ள இயற்கையின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு வகுப்பின் போதும் நான் உணர்வது, “இதுவல்லவா கற்கும் இடம்!” என்று தான். இத்தகைய இடத்தை ஏற்படுத்தி, இத்தகைய சிறந்த வித்தியாசமான வகுப்புகளை நடத்தும் உங்களின் இந்த முயற்சிக்கு எங்களின் நன்றிகள் போதாது.
இந்த வகுப்பிற்குப் பின் நான் தினமும் மந்திரம் போல் டாக்டர் மாரிராஜ் சொன்ன வாசகத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறேன், “Quantity is Quality”.
எந்த உணவானாலும் உண்ணும் அளவு தான் உடல் எடையையும் ஆரோக்கியத்தையும் பேணும் என்று அவர் சொன்னது என்றும் நினைவில் இருக்கும்.
நன்றியுடன்,
மீனாட்சி ரவீந்திரன்