ஆசிரியருக்கு,
நவீன மருத்துவ அறிமுக வகுப்பில் கலந்து கொண்டேன். வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என்னுடைய உயிரியல் பாட அறிவு பத்தாம் வகுப்புடன் முடிந்துவிட்டது. அப்புறம் இன்ஜினியரிங் Diploma, Degree என்று போனது. மனித உடலியல் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. மூன்று நாட்கள் வகுப்பில் நவீன மருத்துவ வரலாறு, உடலியல் மற்றும் உடற்கூறியல், நோயியல், நுண்ணுயிரியல், மருத்துவ சோதனை, உடற்பயிற்சியின் நன்மை ஆகியவை பற்றி ஒரு ஒட்டுமொத்த idea கிடைத்தது.
செல் கடலில் உருவாகி கடலில் இருந்து உணவை பெற்றுக் கொண்டது. பரிணாம வளர்ச்சியில் உருவான உடலில் உள்ள செல், இரத்தம் என்னும் கடலில் இருந்து தனது உணவை பெற்றுக் கொள்கிறது. கடல், இரத்தமென்பதாகி உடலுக்குள் வந்துவிட்டது என்றது பிரம்மிப்பாக இருந்தது.
ஆசிரியர் மிக எளிமையாக மிக கடினமான பகுதிகளை அவ்வப்போது நகைச்சுவை கலந்து விளக்கினார். என்னுடைய குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களை அழைத்து வந்திருக்கலாமே என்றுதான் நினைக்கத் தோன்றியது. மறுமுறை நிகழும்பொழுது குடும்பத்தினரை அழைத்து வர உத்தேசித்திருக்கிறேன்.
அன்புடன்
என்.சொக்கலால்