ஒன்று பல, கடிதம்

ஜெ,

உங்களுடையஒன்றெனவும் பலவெனவும்உரை கேட்டேன். கேட்டபின் சட்டெனக் கடந்து செல்ல இயலாத, உங்கள் எழுத்துக்கு  இணையான, வசீகரமான, ஆழமான பேச்சு. ஆட்கொள்கிறீர்கள்

நவீன இலக்கியம் வாசித்தே பழகிய எனக்கு புனைவுக்கு வெளியே (non-fiction)ஒரு புத்தகம் வாசிக்கத் தூண்டிய முதல் உரை.

சோதனை முயற்சியாக உக்கடம் பழைய புத்தகச் சந்தையில்இந்திய தத்துவ ஞானம்என்ற புத்தகம் வாங்கி வாசித்தேன்.

சொல்லவே கூச்சமாக இருக்கிறது

டாக்டர். இராதாகிருஷ்ணன் ஏதோ பள்ளி ஆசிரியர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் என்பதே என் இதுநாள் வரையிலான புரிதல்.

நான் சார்ந்த மத்துவ வேதாந்தம், இதுநாள் வரையில் எனக்கு ஒரு சாதியின் உட்பிரிவாகவும் அனுஷ்டானமுமாக மட்டுமே அறிமுகமாகி இருந்திருக்கிறது போலும். அது இந்தியத் தத்துவத்தின் ஒரு அங்கம் என்ற அறிவு பள்ளியிலும் வீட்டிலும் கூட புகட்டப்படவில்லை

ஒரு தத்துவத்தை ஏற்கிறோமா மறுக்கிறோமா என்பது இரண்டாம் பிரச்சனை. முதலில் அது ஒரு தத்துவம் என்ற அறிமுகம் பெறுவது அல்லவா சரியான பாதையாக இருக்கும்.

(இது என் தனிப்பட்ட அறியாமையோ என்ற ஐயம். எனக்கென்னவோ குருகுலக் கல்வி அந்த அறிமுகத்தைக் கொடுத்திருக்கும் என யூகமும் கூட. என்னளவில் ஒரு புள்ளிவிபரம் சேகரித்து பின்பு வருகிறேன்.)

பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விக்கவிதை கீழே இருப்பது. எழுத ஆரம்பித்த புதிதில் ஏற்பட்டதொரு முற்போக்கு சம்பிரதாயம் போல

(தோன்றியவற்றை எழுத நானே வைத்துக் கொள்ளும் வழக்கம் எனக்கு)

தத்துவம் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாத காலத்தைய என் எழுத்துக்கள் அவை

இப்போது அடைந்த துளி‌ அறிமுகம் , இந்தக் கேள்விக்கு பல விடைகளைத் தருகிறது. ஏன் , கேள்வியையே கூட மறுக்கிறது.

முடிவிலிப் பிரபஞ்சத்தில் வெளிப்பட்ட

முப்பரிமாணப் புள்ளிகளில் இரண்டு

தங்களுக்குள்  வாதிட்டன..

ஒன்றுஅதுஇல்லை என்றது

ஒன்றுஅதுஉண்டு என்றது 

துணை சேர்ந்தன

அதனோடு சில புள்ளிகள் ..

இதனோடு சில புள்ளிகள் .. 

எண்ணற்ற வினாக்கள்

எண்ணற்ற விடைகள் 

முக்கால் நூற்றாண்டு வாதமிட்டு

மூப்பெய்திக் களைத்தபின்

மீண்டும் முடிவிலிக்குள் சென்று மறைந்தன,

ஆதி இரண்டு புள்ளிகள்…!

அவை விட்டுச் சென்ற  

விடையற்ற வினாக்களுடன்

வாதத்தைத் தொடங்கின

மீதி இருந்த புள்ளிகள்…!

இப்போது துணைக்கு

மேலும் சில புள்ளிகள்,

அதனோடு சில 

இதனோடும் சில ..

முடிவிலியாய் நீண்டுகொண்டிருக்கின்றன

வினாக்களும்

விடைகளும்!

சத்தமில்லாமல் பிரபஞ்சமும்…!

அதுஉண்டா இல்லையா…!!!!!?

இப்போதைக்கான பதில்களில் ஒன்று தத்வமஸி

நாகராஜ்

கோவை

முந்தைய கட்டுரைமேற்கத்திய தத்துவம், கடிதம்
அடுத்த கட்டுரையோகக் கையேடு