மேற்கத்திய தத்துவம், கடிதம்

வணக்கம்

மேற்கத்திய தத்துவ முகாம் பற்றி விசாரிக்கும் போது, கற்றல் துறையை தாண்டி – இதற்காகவே அர்ப்பணிக்கும் நேரம், கற்கும் சூழல், ஒரே சிந்தனை அலை கொண்ட சக பங்கேற்பாளர்களை பற்றி குறிப்பிட்டு ஜே எழுதியிருந்தார்.

மூன்று நாள் வகுப்பை முடித்து விட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின், இப்பொழுது அந்த மூன்று காரணிகளின் தாக்கமும் மதிப்பும் எனக்கு புரிகிறது.

தத்துவத்தின் அடித்தளம் மற்றும் 2500 வருட பரிணாமத்தின் அறிமுகத்தை நான் இந்த வகுப்பில் பெற்றேன். பாடத்திட்டத்தில் இடம்பெற்ற சில பேச்சுவழக்கில் பிரபலமான தத்துவவாதிகளின் முக்கிய நூல்களை நான் வாசிக்க முயன்று, பல முறை நாற்பது ஐம்பது பக்கங்களில் மூடி வைத்திருக்கிறேன். வகுப்பில் அது போன்ற திணறடிக்கும் பிரம்மாண்டம் இல்லாமல், அதன் கருத்தை உருக்கி செறிவூட்டப்பட்ட வடிவத்தில் ஒரு நிபுணரின் வழியாக எனக்கு அளித்தது போல்  உணர்கிறேன்.

மேற்கத்திய தத்துவத்தை பற்றி எனக்கு இருந்த அதிர்ச்சியளிக்கும் அறியாமயே இந்த வகுப்பில் சேர எனது உந்துதல். கற்க தொடங்க வழிகாட்டுதலும், தொடர்ந்து கற்க எரிபொருளாக ஒரு ஆர்வத்தையும் எதிர்ப்பதே இந்த வகுப்பில் சேர்ந்தேன். அதுவே எனக்கு கிடைத்தது.

என் பொது வாழ்க்கையில், நண்பர்கள் மற்றும் சக அலுவலக பணியாளர்களிடம் –  இலக்கியம், தத்துவத்தை பற்றி உரையாடலை தொடங்குவது கடினம். என் சுற்றத்தின் பொது போக்கிலிருந்து விலகியவனாக தோன்றும். இந்த எண்ணத்தின் பெருக்காக இருந்தது எனது எதிர்பார்ப்பு. முரணாக, ஒத்த எண்ணம் கொண்ட 50 பேருடன், மூன்று நாட்கள், தொலைத்தொடர்பு இணைப்பு இல்லாமல், இயற்கையின் நடுவில் இருந்தது – எனக்கு நானே அளித்த பரிசு போன்று இருந்தது.

வகுப்பு முடிந்ததும், புதிய நண்பர்கள் சிலருடன் வெள்ளோடு ஏரியில் பறவை பார்க்க சென்றேன். அங்கே என் கூட வந்த ஒருவருடன், முந்தைய வெள்ளிமலை முகாமில் அறிமுகம் ஆனா  Ornithology – யில் ஆர்வம் கொண்ட நண்பர்  ஒருவரை எதேர்ச்சியாக சந்தித்தோம். அவர் எங்களுடன் அவர் ஆர்வத்தை பகிர்ந்து கொண்டார். ஆச்சரியமான தற்செயலாக தெரிந்தாலும், இப்பொழுது சிந்தித்துப் பார்த்தால் பொருத்தமான விளைவாகவே தோன்றுகிறது.

மேற்கத்திய தத்துவம் கற்க சென்ற அனுபவத்தில், அதையும் தாண்டி நான் எடுத்துக்கொள்வது – நேரம் , சுற்றம் மற்றும் மனிதர்களின்  தாக்கம்.

புதிய ஆண்டுக்குள் நான் இதயே எடுத்து செல்ல விரும்புகிறேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

விவேக் கண்ணன் 

முந்தைய கட்டுரைஇந்து மதத்தின் அடிப்படை சாதியா
அடுத்த கட்டுரைஒன்று பல, கடிதம்