மரபிலக்கியம் என்னும் மகிழ்வு

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

வெள்ளிமலை சென்று திரும்பி இன்றோடு ஆறு நாட்கள் ஆகின்றன. இம்முறை மரபிலக்கிய வாசிப்பு. இங்கிலாந்து சென்று திரும்பி ஒரு வருட இடைவெளிக்குப் பின் பங்குகொள்ளும் வகுப்பு. முன்னர் பங்குபெற்ற இரு வகுப்புகளும் ஒரு மாத இடைவெளியில் கலந்து கொண்டவை. வெள்ளிமலை சென்று திரும்பும் நாட்கள் மனதில் மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் ஒர் சிறிய தாழ்வு மனப்பான்மையும் உண்டாகி இருக்கும். அங்கு வரக்கூடிய நண்பர்களின் அனுபவங்கள் அவர்கள் படித்த புத்தகங்கள் என்று தொடங்கி அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் தொடர் வாசிப்பில் இருப்பதும் அதைத் தாண்டி தங்களை அறிவு தளத்தில் ஈடுபடுத்திக் கொண்டு இருப்பதும் எனக்கு என்னைக் குறித்த கேள்விகளை எழுப்பும். தொடர் வாசிப்பில் ஈடுபடாமல் வெறும் ஏக்கமாக மட்டுமே நிரப்பி வைத்துள்ளேன் என்று உணர வைக்கும். பிறகு ஒரு சிலநாட்கள் வாசிக்க முயல்வது பின் தடைபட்டு விடுவது என்ற கதைதான். முன்னர் பங்கு கொண்ட உளக்குவிப்பு மற்றும் சைவத் திருமுறை வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக உணர்ந்தாலும் அதில் என்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ள எதோ ஓர் தடை. அவற்றில் முதல் மற்றும் முக்கியமான தடை நான் என்று அறிவேன். இருந்தாலும் எப்போதாவது முன்முடிவுகள் இன்றியும் வாழ்வை அந்த கனத்தில் வாழ வேண்டும் என்றும் மனம் பல அறைகள் கொண்ட மாளிகை என்ற குரு தில்லை அவர்களின் வார்த்தைகளும் திருமுறைப் பாடல்களை கவனித்து அதில் மூழ்கும் போதும் சற்று வெள்ளிமலை சென்று திரும்புவேன். தினமும் எதோ ஒரு வகையில் திருமுறைகள் கேட்டுக் கொண்டும் இருக்கிறேன். இவை என்னை நானே சமாதானம் செய்ய மனம் கையாளும் யுக்திகள் என்று தோன்றுகிறது. என்றாலும் தொடர்வாசிப்பு திருமுறைகள் படிப்பது தியான பயிற்சிகள் மேற்கொள்வது என்று எண்ணங்கள் எழுந்து எழுந்து வந்தாலும் அதனை என் முயற்சியின்மையால் வீழ்த்திக்கொண்டு இருந்தேன்.

இம்முறை மரபிலக்கிய வாசிப்பு ஒரு இடைவெளிக்குப் பின் சென்றாலும் இந்த நினைவுகளை அசை போட்ட படியே தான் தொடங்கியது. மூன்று நாட்களும் பல்வேறு பாடல்கள் பாடிய படியே வகுப்பு. மரபின் மைந்தன் அவர்களின் எளிய அணுகுமுறை, திருமுறைகள் மரபுப் பாடல்கள் போன்ற முன்பு கேட்டு புரியாத அல்லது எளிதில் அணுக தடையாக இருக்கும் விடயங்களை போகிற போக்கில் கூட்டிச் செல்வதாக தோன்றும். கண்ணதாசன் பாரதியார் என்று தொடங்கி கம்பராமாயணத்தில் மூழ்கி சங்க இலக்கியம் தொட்டு வந்தது பெரும் நிறைவாக இருந்தது. ஒரு பெரும் சமுத்திரத்தின் கரையில் நின்று அதன் விரிவையும் ஆழத்தையும் அறிவது போல. எந்த ஒரு படைப்பை அறியும் போதும் வாசித்த பின்பும் நான் இன்னும் எவ்வளவு படைப்புகள் படிக்க வேண்டும் என்ற பிரம்மிப்பு கூடவே வீணடித்த நாட்களின் நினைவுகளும் எழுகிறது.

இந்த வகுப்பில் நண்பர்கள் சிலரும் கமல தேவி அவர்களை சந்தித்ததும் இனிமையான அனுபவம். முதலில் அவர் ஓர் எழுத்தாளர் என்ற அறிமுகம் இல்லாமல் தான் இருந்தேன். மரபின் மைந்தன் அவர்கள் சங்கப் பாடல்கள் குறித்த அகமும் புறமும் நூலைக் குறித்து கூறிய போதே அவர் ஓர் எழுத்தாளர் என்று அறிந்தேன். பின்பு ஈரோடு நோக்கி ஒரே காரில் பயணித்த போது தான் பேச நேர்ந்தது. மனதுக்கு மகிழ்ச்சியும் தொடர் வாசிப்பில் ஈடுபடாமல் இருந்த சோர்வும் நீங்கும் ஓர் உரையாடலாக அமைந்தது. அவர்கள் எழுதத் தொடங்கியது சிறு வயதில் இருந்து நூலகம் சென்று வாசித்த அனுபவங்கள் புத்தகம் பதிப்பித்தது குறித்த அனுபவங்கள் என்று பயணம் முடியும் வரை அவர்களுடன் பேசியது நிறைவை அளித்தது. எழுதுதல் என்பது அதுவே நிகழும் என்று அவர்கள் கூறியது மிகசரியாகப் பட்டது. அம்பை மற்றும் லோகமாதேவி குறித்த அறிமுகம் கிடைத்தது. சேலத்திற்கு பேருந்து ஏறிய உடனே கமல தேவி அவர்களின் வலைப் பூவை தேடி படித்தேன். இப்படி ஒரு எழுத்தாளர் உடன் பயணித்து உரையாடிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எண்ணி அக மகிழ்ந்தேன். விடைபெறும் போதுதொடர்ந்து வாசிங்கஎன்று அவர்கள் கூறியது மனதில் பதிந்து விட்டது.

வெள்ளிமலை இதுவரை எனக்கு இத்தகைய அனுபங்களையே அளித்துள்தாக உணர்கிறேன். வகுப்புகள், அங்கு கற்றுக் கொள்பவை என்று மட்டும் இல்லாமல் மரபின் மைந்தன், குரு தில்லை என்று தொடங்கி இன்று கமல தேவி உள்ளிட்டோரும் அங்கு சந்திக்கும் நண்பர்கள் என்று இவையே என்னை பாதித்துள்ளது என்று தோன்றுகிறது. ஒரு விசையை அளிப்பதாக உணர்கிறேன். தொடர் வாசிப்பு மற்றும் முழுமை அறிவு நோக்கிய விளைவையும் கொடுக்கிறது

வேலை, பொருள் ஈட்டுதல், அன்றாடம் இவை கடந்து வாசிப்பு நோக்கி என்னை என்றும் ஈர்க்கும் ஆதாரமாக இருக்கும் தங்களுக்கு நன்றி

அன்புடன்,

ஹரிதங்கம்

முந்தைய கட்டுரைமரபும் கவிதையும்
அடுத்த கட்டுரைவகுப்புகள் மீண்டும் மீண்டும்…