அன்புள்ள ஜெ
வணக்கம். முதற்கண் வெள்ளிமலை வகுப்புகளை நடத்தி ஒரு அறிவுசார் இயக்கமாக அதை வளர்க்கும் உங்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும்!
சமீப காலங்களில் நான் உங்களை வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். உங்கள் எழுத்து மொழி எனக்கு பிடிபட வில்லைதான். இன்னும் தயக்கம் உண்டு. ஆனால் சமீபத்தில் நான் எனது ஆன்மீகத் தேட்டத்தில் பல விஷயங்களை, நூல்களை பரிட்சயம் கொள்ள ஆரம்பித்தபோது உங்களது புத்தகங்கள் அதில் ஊடு பாவாக மிக அருமையாக பின்னிப் பிணைந்து கொண்டது. போன வருடம் கோவையில் தங்களுடன் கிடைத்த சந்திப்பு என்னை இன்னும் ஆட்கொண்டு வேகத்தோடு உங்களை வாசிக்க வைத்தது. உங்களது இணைய தளத்தின் கட்டுரைகள் மேலும் எனக்கு ஒரு பெரிய திறப்பை கொடுத்தது! திறப்பு என்று நீங்கள் சொல்லும் அழகே தனி!
என் அலுவல் பணி தொடர்ந்து கொடுக்கும் உடல், மன ரீதியான குறைகளுக்கும் மற்றும் இந்த புதிய வாசிப்பு பழக்கத்திற்கும் ஒரு முன்னெடுப்பாக தில்லை செந்தில் அவர்களின் தியான வகுப்பு ஒரு நல்ல துவக்கமாக இருந்தது. அதில் இருந்து அடுத்த கட்டமாக தத்துவ வகுப்புகள் பங்கெடுக்க வேண்டும் குறிப்பாக இந்திய மதங்கள் சார்ந்த தத்துவ வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவலில் கடந்த வாரம் வெள்ளிமலையில் திரு குமார சாந்தி அடிகள் அவர்களில் சைவ சித்தாந்த வகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் முந்திய வகுப்புகள் பற்றி நீங்கள் பகிர்ந்து இருந்தாலும், நான் என்னளவில் ஒரு clean slate மனப்பான்மையில் தான் சென்றேன்.
வெள்ளிமலைக்கு இது ரெண்டாவது முறை. நல்நிகழ்வாக மலைச்சாலை நன்றாக இருந்தது. வெள்ளிமலை தற்போது எனக்கு மிகவும் அணுக்கமான இடமாக மாறி விட்டது. இப்படி ஒரு சூழலில் எந்த ஒரு கல்வி சார்ந்த முன்னெடுப்பும் செயலும் நன்றாக நடக்கும் எனபதில் மாற்று கருத்து இல்லை. அலைபேசி அசைவுகள், இரைச்சலால நகர்ப்புற இடைஞ்சல்கள், திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட வாழ்க்கை முறைகள் எதுவும் இன்றி அந்த இடத்தில் காலம் பின்னோக்கி சென்று விட்டதா என்று எண்ணுவது ஒரு நகை முரண். எந்த வியாபார தொந்தரவும் இல்லாமல், எந்த சமரசமும் இல்லாமல் நான் இருக்க முடிந்தது. அனிச்சை செயலாக என் அலைபேசியை சில தடவை பார்த்தும் முடிவாக வைத்து விட்டேன். ஒரு resigned state of mind நான் வர முடிந்தது. மிக இயல்பாக அழகான குருகுல கல்வி முறையை அதே நேரத்தில் தேவை படும் அளவிற்கு ஏற்ப தொழில் நுட்பங்களை வைத்து நடக்கும்மூன்று நாள் கல்வி அமைப்பு முறை – மிக சிறப்பு. கற்பனைகள் சில நேரங்களில் நிஜமாவது உண்டு!!
கிட்டத்தட்ட வாழ்வில் பாதி வயது கடந்த பிறகு ஞான வேட்கையில், வரும் மெய் தேடலுக்கு தத்துவ வகுப்புகள் போக வேண்டும் என்ற எண்ணம் வந்த போது வெள்ளிமலை அறைகூவல்கள் எனக்கு சரியாக இருந்தது. குருபிரானை கண்டடைந்த எனக்கு , சமயங்களின் தத்துவங்கள், சித்தாந்தம் என்ன சொல்கிறது என்கிற எண்ணம் கொஞ்சம் பின்னூட்டமாக இருந்தாலும் எனது புரிதலுக்கும் சிந்தனைக்கும் தேவை என்று பட்டது. திரு குமார சாந்தி அடிகள் அவர்களின் வகுப்பே எனக்கு முதல் அறிமுகம்.
ஒரு நல்ல தொடக்கமாகவே அது அமைந்தது எனக்கு மகிழ்ச்சியே! சுவாமிகள் சைவ சித்தாந்தத்தை ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தில் எளிமையாக ஆனால் ஒரு இலக்கிய வகுப்பு போல கொடுத்தது மிகவும் சுவாரசியமாக இருந்தது. நான் பெரிதும் உவக்கும் அபிராமி அந்தாதி மூலம் உரை தொடங்கியது எனக்கு அவர்கள் மேல் அணுக்கத்தை கொடுத்தது. அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டும் அல்லாமல், தொடரும் ஒரு பரிமாண சந்திப்பாக சுவாமியிடம் எனது உரையாடல் இருந்தது இயல்பாக அமைந்தது. புத்தம், சமணம், வைஷ்ணவம் என்று எல்லா சமய மார்க்கங்களும் கூறும் உட்கருத்து அதில் எப்படி சைவ சமய நெறிகளும் மேலதிகமாக உள்ளது என்பதை எடுத்து விளக்கினார்.
தத்துவம் என்றால் என்ன, philosophy என்ற வார்த்தையின் உள்ளீடு என்ன தர்க்கம் , மரபியல், அழகியல், அறவியல், காட்சி அனுமானம், மீவியற்பியல் போன்ற கூறுகளை அழகாக எடுத்து சொன்னபோது கால இயந்திரத்தில் ஏறி 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று கல்லூரி பருவத்தினை கீறி சென்றது. – ஆனால் இப்படி ஆரம்பித்தவுடன் இந்த அளவு ஆதாரமான துவக்கம் தேவையா என்ற வினா அனைவருக்கும். அதை அவர்கள் ஒரு புரிதலுக்கு மட்டும் சொல்லி வைத்து மிக வேகமாக தத்துவங்களில் அடிப்படை கோட்பாடுகள் எவ்வாறு ஒவ்வொரு சமயங்களிலும் அடிநாதமாக இருந்து அதை திருவள்ளுவர், தொல்காப்பியர், கபிலர், கணியன் பூங்குன்றனார், உமாபதி சிவம் ( அவருக்கு மிக காதலாக உள்ள), அருள் நந்தி போன்றோர் இலக்கணமாகவும், இலக்கியமாகவும் கூறி வைத்து உள்ளார்கள் என ஒரு takeoff போன்று வரப்போகும் மூன்று நாட்களும் எப்படி இருக்க போகிறது என்று காட்டினார்கள்.
தத் துவம் – என்ற வடமொழி சொல் – அதன் தன்மை என்கிற விளக்கமும் – அது என்பது இறையே என்கிற உணர்வும், சுத்த அறிவே சிவம் என்ற ஞானமும் , உண்மையான மெய்ப்பொருள் செம்பொருள் எது என்று காண்பதே சித்தாந்தகள் எடுத்து வைக்கும் இறுதி முடிவுகளாக உள்ளது என்றும் , ஒவ்வொரு தத்துவமும் சித்தாந்தமும் தோற்றுவிப்பவரில் தொடங்கி எப்படி வெவ்வேறு பரிமாணங்கள் கொண்டு , விரிந்து – ஒரு அறிவாக மாறி அதன் மூலம் இன்னும் எப்படி அறிந்து கொண்டார்கள் ( அறிவை கொண்டு அறிவது ) என சுவாமிகள் சுவாரசியமாக வகுப்பு எடுத்தது – நான் தற்போது இருக்கும் குரு மரபின் விஷயங்களின் ஒரு பின்னூட்டமாக கண்டேன். என்னால் அந்த கணத்தில் இருக்க முடிந்தது.
“புலம் வென்ற புன்மை இல் காட்சியவர்…” என்ற திருக்குறளும் மகாவீரருக்கு எதனால் அந்த பெயர் வந்தது – வீரம் என்பது தன்னை வெல்வது புலன்கள் வெல்வது என்ற போது என்னை குருவின் வாசம் தொட்டு சென்றது. மெய் உணர்தலே எல்லா வேதங்களும் , உபநிடதமும் , திருமுறைகளும் சொல்கின்றன, அதை எழுதியவர்கள் நேரடியாகவோ , மறைபொருள் ஆகவோ புரிய வைக்கின்றார்கள் – அதற்கு குருவின் அருளும் அருகாமையும் வேண்டும் என்ற போது என்னால் அதை காட்சி படுத்த முடிந்தது. தத்தாத்ரேயர் எப்படி 24 குருக்கள் மூலம் ஞானம் பெற்றார் என்பது சுவாரசியமாக இருந்தது. காரியம், காரணம் என்ற தர்க்க விளக்கத்தையும் அழகாக இயம்பினார்கள்.
திருக்குறளை ஒரு மெய் ஞான பார்வையுடன் அணுகி எடுத்து கூறியது அற்புதம்.. (இடைச்செருகல்கள் என்று சொல்லியே எப்படி அரசியல் வாதிகளின் மூட அறிவில் அது அழகு இழந்து நிற்கிறது என்பதை சொன்னதும் வருத்தம் தான் வந்தது.) திருக்குறள் ஒரு மெய்ஞானம் பகரும் நூல் என்ற என் அனுமானத்திற்கு ஏற்றார்போல் அவரும் ஒத்திசைவாக எடுத்து சொன்னது சுய சிந்தனைக்கு கிடைத்த வெற்றி என நினைத்து கொண்டேன்.
தமிழ் இலக்கணம் எப்படி பாடல்களில் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற தெளிவும் கொடுத்தார். குறித்து சொல்ல, மூன்று நாட்களில் ஆயிரம் விஷயங்களை சுவாமிகள் அள்ளி வீசினார். மிகவும் ஆவலாக அனைத்தும் என் குறிப்பேட்டில் செய்து கொண்டேன். இயல்பாக எனக்கு கவனம் சற்று குறைவு என்பதால் கல்லூரி நாட்களுக்கு பிறகு இவ்வளவு பக்கங்களுக்கு குறிப்பு எடுத்து கொண்டது இப்போதுதான்!
உபநிடதங்கள், திருமுறைகள், ஆகமங்கள் அனைத்தும் முடிவாக சொல்வது ஒன்றே ஒன்றுதான்– இருமையில் ஒருமை, ஒருமையில் இருமை என்ற தெளிந்த விளக்கமும் அற்புதமாக இருந்தது. எப்படி சிறந்த ஆளுமைகள் ஒவ்வொரு சமயத்திற்கும் சிந்தனை ஊற்றுகண்ணாக இருந்து அறிவொளி வீசியது என சொல்லி சுத்த அறிவே சிவம் என என்னுள் ஆழ்ந்து கொண்டது இந்த வகுப்பு எனக்கு கொடுத்த ஆக சிறந்த கொடை!
இது நான் உங்களுக்கு எழுதும் முதல் முயற்சி. பிழை இருந்தால் கடந்து விடுங்கள். தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். குருவே சரணம்
அன்புடன்
அரவிந்தன்.
கோவை.