அன்புள்ள ஜெ
தாவரவியல் வகுப்பு, ஆயுர்வேத வகுப்பு பற்றிய செய்திகளைப் பார்க்கிறேன். இந்த துறைகளை அறிந்துகொள்வது ஓர் அவசியம் என்பதை உணர்கிறேன். அன்றாடவாழ்க்கையில் அவை பயனுள்ளவை. ஆனால் ஒரு சிந்தனையாளனுக்கு அவை உதவுமா? அவற்றை கற்றுக்கொள்வது சிந்தனைத்துறையில் ஈடுபாடு கொண்டு உழைத்து வருபவனுக்குக் கூடுதல் சுமையாக ஆகுமல்லவா? உதாரணமாக நான் இன்று இலக்கியம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருக்கிறேன். எனக்கு இவை எந்தவகையில் முக்கியமானவை?
ராஜன் குரு
அன்புள்ள ராஜன்,
எந்த அறிவுத்துறையும் தனக்கான ஓர் அறிதல்முறை கொண்டுள்ளது. அந்த அறிதல்முறைக்குரிய தத்துவ நோக்கும் அதற்கு உண்டு. அந்த தத்துவநோக்கை அறிமுகம் செய்துகொள்வதென்பது எந்தச் சிந்தனையாளனுக்கும் மிகப்பெரிய ஒரு திறப்பாக அமையும். அவனுடைய தத்துவப்பார்வை புதிய களத்தை கண்டடைந்து விரியும்.
உதாரணமாக லோகமாதேவியின் தாவரவியல் வகுப்பு அரிஸ்டாடிலின் பகுப்பு, தொகுப்பு, அட்டவணை என்னும் அறிதல்முறை கொண்டது. அதன் தரிசனம் இப்பிரபஞ்சத்தை ஒன்றுக்குள் ஒன்றென விரிந்து செல்லும் பலகோடி அலகுகளாகக் காண்பது. சுனீல் கிருஷ்ணன் நடத்தும் ஆயுர்வேதம் இப்பிரபஞ்சத்தை ஒற்றைப்பெருகிநிகழ்வெனக் காண்பது. மனித உடலை இயற்கையின் ஒரு பகுதியாக மதிப்பிடுவது. இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபடுபவை.
இக்கொள்கைகளை அறிந்துகொள்வது வேறு, அவற்றை ஒரு துறை நடைமுறையாகக் கொள்வதை நேரில் அறிவது முற்றிலும் வேறு. ஓர் அறிதல் மிக எளிய செய்தி அல்லது தரவுதான். அதன் நடைமுறைதான் அந்த அறிதலின் மெய்யான தரிசனத்தை அளிக்கும்.
அதற்கப்பால் ஒன்றுண்டு. வெவ்வேறு அறிதல்களங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களும், செய்திகளும் நமக்குள் உருவகங்களாகவும் படிமங்களாகவும் ஆகிக்கொண்டே இருப்பவை. தத்துவமும் இலக்கியமும் இப்படி வெவ்வேறு களங்களில் இருந்தே படிமங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அப்படிமங்கள் வழியாக மட்டுமே அவை செயல்படவும் முடியும்.
ஜெ