தனிமையையே பேசுகிறேனா?

ஜெ

இந்த காணொளிகளில் நீங்கள் திரும்பத்திரும்ப தனிமை, தயக்கம், இணைய அடிமைத்தனம், செயலின்மை ஆகியவற்றுக்கே விளக்கம் அளித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒட்டுமொத்தமாக இவற்றை செயலின்மைக்கு எதிரான காணொளிகள் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.பயணம் பற்றிய காணொளிகளில் கூட உள்ளடக்கம் என்பது இதுதான். எனக்கு இவை மிக உதவியானவை என்றாலும் திரும்பத் திரும்பப் பேசுவதுபோல் படுகிறது.

ரா.கிருஷ்ணன்

 

அன்புள்ள கிருஷ்ணன்,

உண்மைதான். இந்தக் காணொளிகளின் நோக்கம் ஒரு குறிப்பிட்ட கருத்தை பரப்புவதே. செயலின்மை, தனிமை, உளச்சோர்வு ஆகியவற்றுக்கு மாற்றாக கலையிலக்கியம், தத்துவம் ஆகியவற்றில் கல்வி, சரியான சுற்றம் ஆகியவற்றை அமைத்துக்கொள்ளமுடியும். அதற்காகவே முழுமையறிவு என்னும் அமைப்பு செயல்படுகிறது.

திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கும் கேள்விகளும் இதே பிரச்சினையைச் சார்ந்தவைதான். ஒவ்வொன்றும் நுணுக்கமாக வேறுபடுகின்றன. சிலருக்குத் தனிமை ஒரு வதை. சிலர் அதை தத்துவப்படுத்தி வைத்திருக்கின்றனர். சிலருக்கு வெளியேற விழைவு, ஆனால் தயக்கம். சிலருக்கு தனிமையை வெல்வதற்கு ஆர்வமுள்ளவற்றில் ஈடுபடுவதே வழி என்றுகூடத் தெரியாது. ஆகவே சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.

ஒரே பதிலை திரும்பச் சொல்வதில்லை. ஒவ்வொரு பதிலும் ஒரு புதிய விஷயமும் உள்ளது. அது தேவையானவர்களுக்காக.

ஜெ

முந்தைய கட்டுரைசிறுமகிழ்வுகள், கடிதம்