ஆசிரியருக்கு,
சைவத்தில் சச்சிதானந்தம் போல ,ஆனந்தம் தான் மகிழ்ச்சி.அழகுணர்ச்சியை அனுபவிக்கும் மனநிலைதான் இந்த ஆனந்தம்.தாங்கள் தனிமையாக அனுபவித்த ஆனந்தத்தை பகிர்ந்த போது என்னை நானே கண்டு கொண்டேன்.குடும்பம் என்ற சமூக அமைப்பு தனிமை விரும்பி(Introvert) களை கண்டு என்றும் அஞ்சியிருக்கிறது காரணம் குடும்பத்தலைவனை குடும்ப அமைப்பு சார்ந்துயிருப்பதால்தான்.ஆங்கி லத்தில் Rendezvous என்பார்கள், நம்முடைய குமரி பாஷையில் ஈட்டான் என்பார்கள்.அவனை பார்க்க வேண்டுமானல் அவன் ஈட்டானில் போய் பார்க்க வேண்டும்.அது மாடிப்படியோ அல்லது கோயில் திண்ணையோ.ஆனால் அதுதான் ஆனந்தம் விளையாடும் இடம்.நான் கல்லூரி நாட்களில் வகுப்பறைகளை விட நூலகங்களில் செலவிட்ட காலம் அதிகம்.நல்ல மாணவனாகவும்,நல்ல வாசகனாகவும் இருந்திருக்கிறேன்.நல்ல குடும்பம் நல்ல நூலகத்திற்கு சமம்.திண்ணைகளே பள்ளிக்கூடங்களாக மாறியது.என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற தாயுமானவ சுவாமிகள் தன்னுடைய சச்சிதானந்த சொரூபத்தை கண்ட பிறகு ஆனந்தமே பிறவிப்பயன் என்பதே அல்லாது வேறோன்றும் அறியேன் பராம்பரமே என்றார்.பரபரக்க வேண்டாம் என்கிறது சிவஞானபோதம்.அறுபது வயதில் ஆதங்கப்படுவது தன்னைத்தானே பணத்திற்காக மறந்து இழந்த கடந்த கால வாழ்க்கையினாலேயே.வருங்கால தலைமுறை ஆனந்தத்துடன் வாழ நம்முடைய தலைமுறை சின்னச்சின்ன ஆனந்தங்களை அனுபவித்தால்மட்டும் சாத்தியம்.கடமை என்பது குடும்பத்திற்காக பணம் சம்பாதித்தல் மட்டுமல்ல,குடும்பம் ஆனந்தமாக இருக்கவும் தான்.நல்ல குடும்ப தலைவன் தன்னையும் தன் குடும்பத்தையும் ஆனந்தமாக வைத்திருப்பான்.இதை என் திண்ணையிலிருந்து மகிழ்ச்சியாக தட்டச்சு செய்கிறேன், கட்டன் சாயாவுடன்.மகிழ்ச்சி.
தா.சிதம்பரம்.