இசைநாட்கள்

அன்பு ஜெ,

நலமென்று நம்புகிறேன்கடந்த வாரம் நடந்த முதல் கர்நாடக இசை வகுப்பில் பங்கேற்றிருந்தேன். மூன்றாம் நிலை உபநிஷத் தத்துவ வகுப்பில் பங்கேற்க ஈரோட்டில் இறங்கிய அதிகாலை  தளத்தில் அறிவிப்பை பார்த்தேன்அப்போதே மின்னஞ்சல் அனுப்பி பதிலும் வந்தது. உடனே பதிவு செய்திருந்தேன்.

ஆலயக்கலை ஆசிரியர் நண்பர்களுடனான பயணங்களில் கோயிலிலும், இரவு உரையாடிலின்போதும் சில பாடல்கள் பாடுவார். அறிந்த சினிமா பாடல்களை கேட்கும்போது வரும் மகிழ்ச்சியும் பரவசமும் திருமுறை, பிரபந்த பாடல்களை பண்ணோடு பாடும்போது எதையோ இழப்பது போன்ற உணர்விற்கும். கர்நாடக சில நண்பர்கள் ராகத்தை அறிந்தும் அதே ராகத்தில் அமைந்த சில பாடல்களை சொல்லியும் ரசித்து கேட்டுக்கொண்டிருப்பர்.    

ரயில் நிலையத்தில் குழுமியபோதே இனியதொரு மன நிலைக்கு வந்திருந்தோம். நித்தியவனம் அடையும் வரையில் உற்சாகமாக உரையாடிக்கொண்டு சென்றோம்கர்நாடக இசை அறிமுகம் உள்ள சில நண்பர்களும், யோகி அண்ணா தவில், விக்னேஸ்வரன் மிருதங்கம், அட்சயா மற்றும் நிரஞ்சன் புல்லாங்குழல் என்று அறிந்த பல இசை கலைஞர்களும் பெயர் அறியாத சில கலைஞர்களும் வகுப்பில் இருந்தனர்.

வெள்ளி காலை புத்தர் வாக்தேவி வழிபாட்டை தொடர்ந்து முதல் வகுப்பை இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் என்று திருப்பள்ளியெழுச்சி பாடி தொடங்கினார். பண் முறை குறித்தான வரலாற்று அறிமுகத்தையும் அது வளர்ந்து வந்த விதத்தையும் விவரித்தார், திருமுறைகளும் பிரபந்தங்களும் கூட இசையோடு பாடப்பட்டவை, பாடப்படுபவை என்பதை குறிப்பிட்டார். சில பாடல்களிலேயே ஆலாபனை, பல்லவி, அனுபல்லவி, சரணம், நிரவல் கல்பனஸ்வரம் தனிஆவர்தனம் என்று பிரித்துணர முடிந்தது.  

சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஷ்யாமா சாஸ்திரிகள் மற்றும் தமிழிசை மூவர் முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சல கவிராயர் ஆகியோர் பணிகளை விளக்கினார்.  

பின்னர் ஸ்வரஸ்தானங்கள், ஸ்வர ஆவளி வரிசை, ஜண்ட வரிசை, தாட்டு வரிசை, அலங்கார வரிசை, ஸ்வர ஜதி ஆகியவற்றை விளக்கினார். மாயாமாளவகௌளை ராகத்தின் ஆரோகணம் அவரோகணத்தை விளக்கி சில பாடல்களை கேட்கச்செய்தார்சஞ்சய் சுப்ரமன்யம் அவர்களின் On that note தொடரில் அவர் குறிப்பிடும் கலைச்சொற்கள் ஒவ்வொன்றாக முகிழ்க்கத் தொடங்கினமதியம் உணவிற்கு பின் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்

மாலை வகுப்பில் மோகனம் ராகத்தையும், ஆதி,ரூபக, மிஸ்ர சாபு தாளங்களையும் பற்றி பேசினார். JKவின் கலாக்ஷேத்ரா அனுபவங்களையும் பாலமுரளி கிருஷ்ணா போன்ற மாமேதைகளின் கச்சேரிகளில் நிகழ்ந்த சம்பவங்களையும் குறிப்பிட்டார். ஒவ்வொரு ராகத்திலும் நாதஸ்வர இசையை கேட்டோம். ராஜா Sir ஒரு கச்சேரியின் பொது நாதஸ்வரமும், வீணையும் சிவன் சொத்து, ஒருநாளும் அழியாதது என்று சொல்லியிருப்பார். நமது ஆலயங்களின் நீண்ட வளாகங்களில் ஒலிக்கும் நாத இசை கொடுக்கும் அனுபவம், கருவறை தெய்வத்தை ஸ்பரிசிப்பதற்கு நிகரானது. இனி அந்த இசை இன்னும் பரிச்சயமானதாக இருக்கும். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மதுர மரிக்கொழுந்து வாசம் பாடல் மாயாமாளவகௌளை ராகம் என்று சொல்லி ஒலிக்கசெய்தபோது புதிதாக ஒன்று திறந்தது. சில ராகங்களுக்கு திரைப்பாடல்களையும் ஒப்பிட்டு விளக்கினார்.

சனி காலை, காலை நேரத்திற்குரிய ராகங்களான பூபாளம், பௌலி ராகங்களை பற்றியதாக இருந்தது, மாயப்பொன்னின் வரியை துணைக்கழைத்தால் இரண்டிற்கும் ஒரு மல்லிகை பூவுக்கும் இன்னொரு மல்லிகை பூவுக்குமான வேறுபாடு. நுண்ணிய ஸ்வரபேதம்.

பின்னர் மேளகர்த்தா ராகங்கள் அவற்றில் உள்ள சுத்த மத்யமம், பிரதி மத்யம ராகங்கள், கமகம் மற்றும் சங்கதி குறித்தும் வகுப்பு அமைந்தது. மதிய உணவிற்கு பின் கவிஞர் சாம்ரஜ்ஜிற்கு உரை தலைப்பு கொடுத்துவிட்டு தயாரிக்கவிடாமல் மாலை வகுப்பு தொடங்குவது வரை பிடித்து வைத்து பேசிக்கொண்டிருந்தோம். இருந்தும் நினைவிலேயே தொகுத்து பிரச்சாரத்திற்கு கலைக்குமான வேறுபாட்டை குறித்து இரவு செறிவான உரை நிகழ்த்தினார். கவிஞரின் சிறந்த உரைகளில் ஒன்று.  

மாலை சங்கராபரணம், கரகரப்ரியா, ரசிகரஞ்சனி ராகங்களில் 1st speed, 2nd speed சரளி வரிசைகளை பாடினோம் அல்லது பாட முயற்சித்தோம்.  சரளி வரிசை பாடியே மூன்று நாட்களும் தொட்டில் கொம்பன் வராமல் பார்த்துக்கொண்டோம்ஞாயிறு காலை ஷண்முகப்ரியா மற்றும் கல்யாணி ராகங்களை வகுப்பு அமைந்தது

ஷேர்தலா ரங்கநாத சர்மா, செதலபதி பாலசுப்ரமணியம், TV சங்கரநாராயணன், மதுரை மணி ஐயர், வேம்பு ஐயர், Tiger வரதாச்சாரி, BV ராமன், BV லக்ஷ்மணன், DK ஜெயராமன், மகாராஜபுரம் சந்தானம், விஸ்வநாத ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் போன்ற மேதைகளும், பாகனேரி பில்லப்பன், மயிலை கார்த்திகேயன், இடும்பவனம் பிரகாஷ் இளையராஜா என்ற கலைஞர்களும் அணுக்கமாகியிருக்கிறார்கள். இது போதும் இனி குடவாயில் sir, nagaswamy sir போன்று இவர்களும் எப்போதும் உடன் வருவார்கள். தீக்ஷிதர் உருவாக்கிய, சிக்கில் குருசரன் குரலில் கேட்ட கமலாசன வந்தித பாடல் அனைவர் நாக்கிலும் ஒட்டிக்கொண்டது

நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்வது போன்ற ஒத்த சிந்தனை ரசனையுடைய சுற்றம் இப்போது வைத்திருப்பது நல்லூழ். தீபாவளியின் அடுத்த நாள் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு நாட்கள் எண்ணத்தொடங்குவதுபோல் அடுத்த பயணத்தை சந்திப்பை எதிர்நோக்கியிருக்கிறேன்

வாழ்வின் மகத்தான மூன்று நாட்களை சாத்தியப்படுத்திய உங்களுக்கும், ஆசிரியருக்கும், கவிஞருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் மாறா நன்றியும் அன்பும்

மனோஜ் 

திருச்சி 

முந்தைய கட்டுரைமாயாமாளவகௌளை எனும் மாயக்கரம்
அடுத்த கட்டுரைதெய்வம், கடிதம்