சிந்திப்பதன் இறுக்கம்.

ஜெ,

ஒவ்வொரு புத்தக வாசிப்பின் முடிவிலும் ஏனோ எனக்குள் ஒரு கர்வம் உறுவாகிறது. இவ்வாறு வசிப்பின் வழியே எனக்கு நானாக உருவாக்கி கொண்ட கர்வச்சுமை என்னை இறுகியவனாக மற்றியது. புதிய நட்பை உருவாக்கி கொள்ள முடியாத நிலைக்கு என்னை அழைத்து சென்றது. யார் எதை சொன்னாலும் மறுப்பது, சுற்றத்தில் உள்ள நண்பர்கள் அனைவரையும் சிறுமையாகவும், என்னை நானே பெருமையாகவும் பாவிப்பது, என்ற அடுத்த கட்டத்திற்கு என்னை இக்கர்வம் கடத்தி சென்றது. இதனால் எனது நண்பர் வட்டம் மெல்ல சுருங்கி , நற்சிந்தனை உள்ள, நன்கு வாசிக்க கூடிய, கலைகளில் ஆர்வம் கொண்ட ஒரு நண்பர் கூட எனக்கு இல்லாத நிலை. 

மாறக எனது அண்ணன் ராமுக்கு பல்துறை சார்ந்த, வயது வித்தியாசம் கொண்ட, உலகியல் சாறாத நண்பர்கள் பலர் உள்ளனர். அந்நட்பானது சம்பர்த்தயாபூர்வமானதாக இல்லாமல் சராசரிக்கு அப்பாற்பட்டதாக இருந்ததை கவனித்திருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு வரை  இது ஏன் என்றோ, எனது குறைகள் பற்றியோ நான் என்றும் சிந்தித்ததில்லை. 

இதுபோன்ற இறுக்கமான, தலைக்கணம் கொண்டவனாகத்தான் மேடையுரை பயிற்சி வகுப்பிற்காக நித்யவனம் வந்தேன். நித்யவனத்தில் தான் நான் என்னை உணரத்துவங்கினேன். நான் யார்எனக்காக இடம் எது ?இதுநாள் வரை என்னை எவ்வரெல்லாம் கற்பிதம் செய்துவந்துள்ளேன் என்பன புலபட ஆரம்பித்தது. என்னை திருப்பி ஒரு கண்ணாடியின் முன்பு அமரவைத்து விட்டது ஜெ வின் உரைகள். எனது தவறுகள் எனக்கு தெரிய ஆரம்பித்தன. அவற்றை ஏற்றுகொள்ளும் பக்குவத்திற்கு நகரலனேன். 

மேடையுரை பயிற்சி வகுப்பு வழியாக இலக்கிய ஆர்வமுள்ள புதிய நண்பர்களை உருவாக்கி கொண்டேன். இதுநாள் வரை என்றும் உணர்ந்திடாத மனநிறைவையும், கற்பதற்கான ஒரு புதிய உந்துசக்தியையும் அடைந்தேன்.தொடர் கற்றல் செயல்பாடு ஒன்று மட்டுமே சோர்வு, சலிப்பு, ஏதிர் மனநிலை மற்றும் மனஉலச்சல்களில் இருந்து நம்மை விடுவிக்கும் என்றும் கற்றல் ஒன்றே தொடர்ந்து நம்மை சுறுசுறுபாகவும், உற்சகமாகவும் , அகமகிழ்வோடும் வைத்திருக்கும் என்பதையும் மேடையுரை பயிற்சி வகுப்பின் வழியே உணர்ந்தேன். 

இது நாள் வரை எருமை போல் உறங்கி கொண்டிருந்த எனது மூளைக்கு அடிக்கபட்ட முதல் சாட்டை அடிமேடையுரை பயிற்சி வகுப்பு.

நன்றி.

எளிய அன்போடு,

  • ரவிக்குமார்பாரதி.             

அன்புள்ள ரவிக்குமார்

பொதுவாக சிந்திப்பதில் பல படிநிலைகள் உண்டு. ஒன்று, எண்ண ஓட்டம் மட்டுமே ஆன சிந்தனை. அது சிந்தனையே அல்ல. இரண்டு, கட்டமைப்புக்கு உட்பட்ட தர்க்க பூர்வமான சிந்தனை. அதற்குப் பயிற்சி தேவை. அப்பயிற்சியை அடையும்போது நாம் அதுவரை சிந்திக்கவே இல்லை என்னும் திகைப்பு உருவாகும். அந்த அமைப்புக்குள் சிந்திக்கும்போது பலமணிநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் வழக்கமுள்ளவர்கள் கூட ஒரு பத்தி எழுத, மூன்றுநிமிடம் பேச, தயங்குவர்.மூன்று, அந்தப் பயிற்சி வழியாக தேர்ந்தபின் சிந்தனை அதன் வழியாக தடையில்லாமல் பெருகும் நிலை. உண்மையில் அதுவே சிந்தனை என்பது. அனைவருக்குமே அந்த மூன்றுநிலைகளும் உண்டு. ஓர் ஆசிரியர் நம்மை உடைக்காமல் இரண்டாம்நிலை சாத்தியமல்ல. என் ஆசிரியர்கள் என்னை உடைத்தனர், நான் என்னை மீட்டுருவாக்கம் செய்துகொண்டேன். சாதாரணமான ஒரு வளர்ச்சிநிலைதான் அது.

ஜெ

முந்தைய கட்டுரைஎழுதுவது என்பது…
அடுத்த கட்டுரைகடவுள், கடிதம்