அன்புள்ள ஜே,
வணக்கம்.
சில மாதங்களுக்கு முன், காலை நடை செல்லும்போது, மின்சார கம்பியில் காகம் அளவுள்ள பறவை அமர்ந்திருந்ததை பார்த்தேன். அது சாம்பல் வண்ணத்தில் இருந்தது. ஆனால் பறக்கும் போது பல வர்ண நீலத்தில், ஏதோ மாயாஜாலம் நிகழ்ந்தது போல் மாறிவிட்டது. (Google சொன்னது– பறவையின் பெயர் பனங்காடை(Indian Roller) என்று). பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன், பறவைகளின் நீல நிறமே மாயாஜாலம் தான் என்று. நீல நிறத்தில் நிறமிகள் (pigments) கிடையாது. அது உண்மையில் சாம்பல் வண்ணம். ஒளியின் பிரதிபலிப்பால் நமக்கு நீலமாக தெரிகிறது.
ஒரு பறவையைப் பார்ப்பதிலும், அதை ரசிப்பதிலும், அதன் பெயரையும், அதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்வதில் உள்ள சந்தோஷத்தையும் அன்று தெரிந்துகொண்டேன். இந்த அனுபவத்தை கொடுத்த பனங்காடை எனக்குப் பிடித்த பறவையாயிற்று.
பறவை பார்த்தல் வகுப்பு அறிவிக்கப்பட்டவுடன், பதிவு செய்துவிட்டேன். வகுப்பு தொடங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தேன். விஜய பாரதி Sir ம், ஈஸ்வரமூர்த்தி Sir ம் மாறி மாறி கற்றுக் கொடுத்தார்கள். அவர்களுக்குள் இருந்த ஒற்றுமையும், புரிதலும் ஆச்சரியப்பட வைத்தது. குழந்தைகள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும், அவர்களின் ஆர்வத்தை குலைத்து விடாமல், பதில் சொல்லியும், சமாளித்தும், அதேசமயம் குறித்த நேரத்துக்குள்ளாகவும் வகுப்பை அருமையாக நடத்தி முடித்தார்கள்.
பறவைகளின் உலகம் தான் எத்தனை விந்தையானது. எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள சுற்றுப்புறத்தில் உள்ள மரத்தின் பட்டைபோலவே இருக்கும் ஆந்தையும், மண் போலவே இருக்கும் முட்டையும் என்று பல அதிசயங்கள். எத்தனை வகை கூடுகள்? கூடு என்றாலே குச்சி வைத்து கட்டப்படுவது தான் நினைவுக்கு வரும். ஆனால் புல் வைத்து, இலைகளை சேர்த்து, மரப்பொந்தில், மணலை குவித்து வைத்து, மற்ற பறவைகளின் கூட்டை உபயோகிப்பது என்று பல வகைகளின் உள்ளது.
பறவைகள் பற்றி நாம் தெரிந்து கொண்டிருப்பது மிகவும் குறைவு. தெரியாதவை, புரியாதவை மற்றும் தவறாக புரிந்து கொண்டவை மிக அதிகம். ஆராய்ச்சி செய்வதற்கும், பங்களிப்பதற்கும் வாய்ப்புள்ள துறையாக Ornithology இருக்கிறது.
அத்துறையின் பல ஆளுமைகள், அவர்களின் பங்களிப்பு, பறவைகளின் நன்மைக்காக நம்மால் செய்யக்கூடியது பற்றியும் கற்றுக்கொண்டேன். குரல்களை வைத்தும் , நிழலை வைத்தும் அடையாளம் காண்பதிலும், பார்த்த காட்சிகளை ஆவண படுத்துவதிலும் (Nature Journaling) பெரியவர்களை விட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கெடுத்தார்கள். அத்தனை குழந்தைகள் இருந்தாலும், பறவை பார்க்க சென்றபோது ஒரு மணி நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். நேரம் செல்ல செல்ல, பறவைகள் எங்கள் அருகிலேயே வர ஆரம்பித்தது, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. வீட்டிற்கு வந்த பின்னும், வரிக் குயிலின் (Indian Cuckoo) இனிமையான கூவுதல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த வகுப்புகளை சாத்தியமாக்கிய உங்களுக்கும், கற்றுக்கொடுத்த இரு ஆசிரியர்களுக்கும், சிறு குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பல்வேறு வயதுகளில் இருந்த சக பாடிகளுக்கும் மிகவும் நன்றி.
என்றும் அன்புடன்,
ராஜேஷ்வரி.
பின்குறிப்பு: அதிகம் குழந்தைகள் இருப்பதால், ஒரு மருத்துவரையும் வகுப்பிற்கு அனுப்பி வைத்த அக்கறைக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோமோ? மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள் பல.
ராஜேஸ்வரி