இலக்கியத்தைச் செயலாக்குதல்

உயர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களின் எழுத்தை சுவாசிக்கும் பலரில் நானும் ஒருவன் என்ற பெருமையில் இதை எழுதுகிறேன்.   Readforte watsup தளத்தில் இல் ஒவ்வொரு மாதமும் ஏதேனும்  ஒரு புத்தகத்தை பற்றி ஒரு மணி நேரம் பேசுவேன்சுதந்திர தாகம், எனது இந்தியா, கேள்வி குறி இப்படி.  

அந்த வகையில் ஜூலை மாதம் 5ஆம் தேதி தங்களின் ஆக சிறந்த படைப்பான வெண்முரசு தொகுதியில் ஒன்றான  சொல்வளர்காடு என்ற புத்தகத்தை பத்தி பேசலாம் என்று நினைக்கிறன்..  இதற்கு தங்களின் ஆசியும் அனுமதியும் வேண்டுகிறேன்.

நம்பிக்கையுடன்.

பாமணிவண்ணன்.

[email protected]

அன்புள்ள மணிவண்ணன்,

இலக்கியம் நிகழ்வதற்கு அவசியமானது அதைப்பற்றிய விவாதங்கள், உரையாடல்கள் தொடர்ச்சியாக நிகழ்வது. இலக்கியம் சார்ந்த காத்திரமான உரையாடல்கள் தேவைதான். ஆனால் அவற்றை விட முக்கியமானது இலக்கிய அரட்டை. இலக்கியம் பற்றிய சுவாரசியமான, நட்பார்ந்த அளவளாவல். அதை நிகழ்த்துவதென்பது இன்று மிக முக்கியமான ஒரு செயல்பாடு.

அத்துடன், இன்று சமூக வலைத்தளங்களும் இணைய ஊடகங்களும் உருவாக்கும் மனச்சோர்வுக்கும் சலிப்புக்கும்  மிகப்பெரிய மாற்று என்பது இத்தகைய செயல்பாடுகளில் நாம் ஈடுபடுவதுதான். செயல் அளிக்கும் மகத்தான விடுதலைதான். அத்தகைய செயல்பாடுகளில் ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டும், அதற்கு வரும் எதிர்வினைகளும் வரவேற்பும் அல்ல நம் எதிர்பார்ப்பு. நம ஒன்றைச் செய்யும்போது நமக்கு உருவாகும் அகவிடுதலைதான்.

வாழ்த்துக்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைதத்துவமும் இலக்கியமும்
அடுத்த கட்டுரைவாசகன் என்னும் ஆணவம்