புராணமயமாதல் எங்கும்…

அன்புள்ள ஜெ,

புராணமயமாதல் என்ற கட்டுரையைக் கண்டேன். மனிதர்களை அதீதமாகப் புகழ்வதும், தாங்கள் அறிந்த எல்லா அற்புதக் கதைகளையும் அவர்கள் மேல் ஏற்றுவதும் நம் வழக்கம். இது நம்முடைய கல்வியறிவில்லாத பழைய மனநிலையில் இருந்து வருவது. வாய்மொழிப் பண்பாடும் எழுத்துப் பண்பாடும்கட்டுரையில்  நீங்கள் சொன்னதுபோல இது நம்முடைய வாய்மொழி- புராண மரபு சார்ந்த மனநிலை. எத்தனை படித்தாலும் நாம் வெளியே வருவதில்லை.

அண்மையில் இப்படி அதீதமான புராணப்படுத்தலுக்கு உள்ளாகி, கேலிக்கூத்தான கதைகள் கட்டப்படுபவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகள். கொஞ்சம் தர்க்கபுத்தியோ வாசிப்பறிவோ கொண்டவர்களுக்கு கேட்கவே கூச்சமாக இருக்கும். ஆனால் அதைச் சொல்லியும் எழுத்தியும் பரப்புபவர்கள் படித்தவர்கள்.

அதேபோல இங்கே படித்தவர்கள்கூட சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாந்தி என அனைவர் பற்றியும் புளுகுகளை பரப்புகிறார்கள். தங்கள் சொந்த அறிவுநிலையில் இருந்து எதையாவது சொல்லி அதை அந்த ஆளுமைகள்மேல் ஏற்றுவது அவர்களை இழிவுசெய்வது என்றுகூட இவர்கள் அறிந்திருப்பதில்லை.

இது இன்று இணையத்தில் வாசித்தது. இணைத்துள்ளேன்

ஆர்.கே.மகாதேவன்

இணையத்திலிருந்து…

தமிழ் மொழி, ஆங்கில மொழியில் திறமை பெற்று எழுத்தாற்றல், பேச்சாற்றலில் பிரகாசிப்பவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலருள் ஒருவராகக் கூறும் பெருமைக்குரியவரே பேரறிஞர் அண்ணா. அடுக்கு மொழி பேசுவதிலும் வல்லவர்.

ஒரு முறை அண்ணா அவர்கள் ரயிலில் பயணம் செய்த-போது, அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர். அண்ணாவின் தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர், அண்ணாவின் காலை வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார். அமைதியாக இருந்தார் அண்ணா. மீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும், அயாம் நாட் எ லாரி கேரி யுவர் சாரி (I am not a lorry carry your sorry) என ஆங்கிலத்தில் அடுக்குமொழி பேசி வெளிநாட்டவரை அதிர வைத்தார் அண்ணா.

அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர், அண்ணாவிடம் உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுவிட்டு உரையாடிக் கொண்டே பயணம் செய்தனர். அப்போது, பிகாஸ் (Because) என்ற வார்த்தையினை மூன்று முறை தொடர்ச்சியாக வருமாறு வாக்கியம் கூறும்படி அண்ணாவிடம் கேட்டனர். இரண்டு வாக்கியங்களை இணைக்க மட்டுமே பயன்படும் வார்த்தைதானே என்று கொஞ்சம்-கூடத் தயங்காமல், நோ சென்டன்ஸ் என்ட் வித் பிகாஸ் பிகாஸ் பிகாஸ் இஸ் எ கன்ஜெக்சன் (No sentence end with because because because is a conjunction) என்றார் அண்ணா.

ஆச்சரியமடைந்த வெளிநாட்டினர் எ,பி,சி (a,b,c) வராத வார்த்தைகளைக் கூறுங்கள் என்றதும், ஒன்,டூ, த்ரீ…. ஹன்ரடு (One, Two, Three…. Hundred) என்றார் அண்ணா. அண்ணாவின் ஆங்கிலப் புலமையையும் அறிவாற்றலையும் பார்த்த வெளிநாட்டினர் வியந்து போற்றினர்.

முந்தைய கட்டுரைஇ.எம்.எஸ் என்னும் அறிஞர்
அடுத்த கட்டுரைகடவுள்நம்பிக்கை உண்டா?