அன்புள்ள ஜெ அவர்களுக்கு
ஜெயக்குமார் அவர்களது ஆலயக்கலை வகுப்பு முடிந்து எழுதுகின்றேன். மிகச் சரியான நிபுணரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். கோவில் கலை, பக்தி இலக்கியம், கோவிலோடு சேர்ந்த மற்ற கலைகள், கல்வெட்டு படிக்கும் திறன், பாட்டு இப்படி பல கூட்டுக் கலைகளில் நிபுணராய் உள்ளார் ஜெ கே (JK) சார். அதோடு கூட வெவ்வேறு நம்பிக்கைப் பின்புலத்தில் இருந்து வருபவர்களுக்கும் நம்பிக்கை ஊட்டும் வகையில், மிதமான ஒரு நகைச்சுவை உணர்வோடு அகந்தை ஏதும் இல்லாமல் வகுப்பை நடத்திச் சென்ற பாங்கு மிக அழகு. அவரது அடுத்த நிலை வகுப்பிற்கும், அவரோடு கூட கோவில் மற்றும் கலைக்கூடங்களுக்கு பயணம் செய்யும் நாட்களுக்காக காத்திருக்கிறோம்.
நான் ஏற்கனவே வியாபாஸனா பயிற்சி முகாமில் (அமலன் ஸ்டான்லி அவர்களது) பங்கு பெற்று பயனடைந்துள்ளேன். ஒரு நிறுவனம் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் தனி ஒருவராய் செய்வதை நினைத்தால் பிரமிப்பாக உள்ளது.நான் வணங்கும் இராமக்ருஷ்ணர் , அன்னை சாரதா, விவேகானந்தர் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.
எப்போதும் போல அந்தியூர் மணி அவர்கள் மற்றும் அவருடைய குழு எல்லா ஏற்பாடுகளும் மிக நன்றாக செய்திருந்தனர். உணவு, ஏகாந்த அமைதி, மயிலின் அகவல், காலை டீக்கடை வரை நண்பர்களுடன் நடை, யானைக்குடிலில் புது நண்பர்கள் – கப்பல்காரர் ஷாஹுல் ஹமீது, தங்கவேல் மற்றும் அவரது மகன் அமுதன், இரவு உணவிற்குப் பிறகு இனிய பாட்டு (JK, கவி, ஹேமா மற்றும் சிலர்), சிவதர்ஷினியின் நடனம், மொபைல் போனில் இருந்து விடுதலை (வோடபோன் என்பதால் சுத்தமாக எடுக்கவில்லை – அது மிகவும் சௌகர்யமாக இருந்தது), எல்லாம் சுகமான அனுபவங்கள்.
எனக்கு வயது 50. இவ்வளவு நாட்களாக இந்த அடிப்படையான விஷயம் கூடத் தெரியாமல் இருந்ததை நினைத்தால் வெட்கமாக உள்ளது. கல்விக்கட்டமைப்பு, பெற்றோர், சூழல் இவற்றை காரணம் கூறலாம் என்றாலும், முதல் குற்றவாளி நான்தான். இப்பொழுதாவது ஒரு அடி எடுத்து வைத்தேனே, இனி எந்த ஒரு கனத்தையும், நாளையும், வீணில்லாமல் பார்த்துக்க்கொள்ள வேண்டும் என்ற சங்கல்பம் எடுத்துள்ளேன்.
ஒரு பேராசை. வரும் செப்டம்பர் 19ல் இருந்து 21 தங்களது முதல் நிலை இந்திய தத்துவ வகுப்பு இருப்பதாக அறிந்தேன். எப்படியோ மறுபடி கவனிக்கத் தவறி விட்டேன். ஏற்கனவே பதிவு முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு வேலை இன்னும் இடமிருந்தால், அல்லது கடைசி நேரத்தில் நண்பர்கள் யாரும் வர இயலவில்லை என்றால் சொல்லுங்கள், சேர்ந்து கொள்கிறேன். இல்லையேல், அடுத்த வாய்ப்பிற்காக காத்திருப்பேன்.
மீண்டும் நன்றிகள்.
அன்புடன்
சு ரவிச்சந்திரன்