அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம். ஒவ்வொரு ஆண்டும் விழாவிற்கு வரும் போது இயன்றவரை முன் தயாரிப்புகளுடன் வருவது மகிழ்வையும் நிறைவையும் அதிகரிக்கிறது. தமிழ் விக்கி விழாவில் இசை நிகழ்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட பாடல்களை முன்பே கேட்டு வரும்போது இசை அனுபவம் மேம்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுகிறது. நண்பர் யோகேஸ்வரன் ராமநாதன் அவர்களின் முன்னெடுப்பில் இந்த ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஒலித்த ஒவ்வொரு பாடலையும் உடன் இயைந்து ரசிக்க இந்தப் பயிற்சி உதவியது. என்னுடன் இரண்டு நாட்களும் இணைந்து பங்கேற்ற சிவகங்கை நண்பர் ஆ. செந்தில்நாதன் கையில் பாடல் வரிகளை வைத்திருந்தார்.
இதனைப் பார்க்கும்போது நண்பர்கள் எவ்வளவு தீவிரமாகவும் அர்ப்பணிப்புணர்வுடனும் நம் நிகழ்வுகளில் பங்கேற்க்கிறார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்றே ஆகும். ஆம், தீவிரமும் அர்ப்பணிப்பும் ஓர் உயர்ந்த இலட்சியத்திற்காக நம்மை முற்றாக ஒப்புக் கொடுப்பதும் செயலில் கரைவதும் நம் விஷ்ணுபுரம் நண்பர்களின் பொது இயல்புகளாகவே உள்ளன. நாதமாய் ஒலிப்பதை மொழியில் நெருங்க முடிந்திருப்பது இந்த ஆண்டின் இனிய நினைவு. குறிப்பாக ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை கேட்கும்போது என் மனம் ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்த மற்றொரு கீர்த்தனையான
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நர்கதி அருள்வாய் அம்மா தேவி
என்னும் இந்த கீர்த்தனையை ஸ்வரங்களைப் பின் தொடர்ந்து சென்று தொட முடிந்தது. தாங்கள் கூறுவது போன்று புலன்களுள் ஒன்று திறந்து கொள்ளும் தருணம் இந்த ஆண்டு அமைந்தது.
மிகச் சிறப்பாக நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ள நண்பர்களுக்கு வாழ்த்துகள். விழாவில் விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்த அறிஞர்களுக்கும் இசைக் கலைஞர்களுக்கு வணக்கங்கள்.
கு. பத்மநாபன்