அன்புள்ள ஜெ,
உங்கள் காணொலிகளில் அதிகமாக பார்க்கப்படுவது வாழ்க்கையின் சிக்கல்களுக்கான தீர்வு என நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அறிவதற்காகத்தான். சூழ்ந்துள்ள எதிர்மறைப் பண்புகளை கடந்து மெய்யான இன்பங்களை செயல் வழியாக தேடிக்கொள்வதைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். கற்றல் கற்பித்தல், செயலாற்றுதல் வழியாக மட்டுமே ஒருவர் தனக்கான விடுதலையை அடையமுடியும் என்று சொல்கிறீர்கள்.
சமூகம் உங்களுக்கான விடுதலையை அளிக்காது. உங்களுக்கு உங்களால்தான் மகிழ்ச்சியை அளிக்கமுடியும். அது அறிந்துகொள்வது மட்டும் அல்ல செய்து பார்ப்பதும்கூடத்தான் என்று சொல்கிறீர்கள். இன்று ஒவ்வொருவரும் சமூகத்தைக் குற்றம் சாட்டுகிறார்கள். சமூக மாற்றம் என்கிறார்கள். அது நம்மிலிருந்தே தொடங்கப்படவேண்டும். நாம் மாறியபின் நம்மால் சமூகம் மாறவேண்டும். நம் கொடைதான் சமூகத்திற்கு இருக்கவேண்டும்.
உங்கள் காணொலிகளை காலையில் பார்க்கையில் உருவாகும் மனநிறைவும் தெளிவும் அந்த பகல் முழுக்க கூடவே நின்றிருப்பதாக உள்ளது.
ஆனந்த் பத்மநாபன்.










