பெண்களுக்கான வெளி

அன்புள்ள ஜெ

நான் 17 ஆண்டுகளாக இலக்கிய வாசகி. இன்றும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இலக்கிய முகாம்களில் கலந்துகொண்டதில்லை. இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனுபவமே இலக்கிய முகாம்களுக்குச் செல்லக்கூடாது என்னும் எண்ணம் உருவாகக் காரணம். பல இலக்கிய நிகழ்வுகளில் குடித்துவிட்டு வருவார்கள். அரங்கிலேயே அமர்ந்து கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலான நிகழ்வுகளில் இருந்து சோர்வும் சலிப்புமாகவே திரும்பியிருக்கிறேன்

அத்துடன் இந்தவகையான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பெண்களெல்லாம் ‘சுதந்திரப்போக்கு’ கொண்டவர்கள் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஓரிரு கூட்டங்களில் கலந்துகொண்டாலே போதும் ‘அப்ரோச்’ஆரம்பித்துவிடும். அது மிகப்பெரிய தொல்லை. அதிலிருந்து எளிதில் தப்ப முடியாது.நாம் ஒதுங்கினால்

திட்டமிட்டு கெட்டபெயர் உருவாக்கப்பட்டுவிடும். அந்த வம்புகள் நம் காதுக்கு வந்துகொண்டே இருக்கும். இன்றைக்குப் பெண்களுக்குப் பொதுவெளியே இல்லை என்பதுதான் உண்மை

முழுமையறிவு வகுப்புகளுக்கு முன்பு விஷ்ணுபுரம் வகுப்புகளுக்கு வந்திருக்கிறேன். அந்த வகுப்புகளில் இருக்கும் கட்டுப்பாடு பெண்களுக்கு மிகப்பெரிய ஒரு ஸ்பேஸை அளிக்கிறது. நம்பகமான, இயல்பான சூழல். இப்போது இந்த ஸ்பேஸை அறிந்து வந்து சேரும் ஏராளமான பெண்கள் இங்கே இருக்கிறார்கள். நிறைய தோழிகளை அடைய முடிகிறது. இந்த ஸ்பேஸுக்காகவே உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

கே

அன்புள்ள கே

எங்கள் நிகழ்வுகளையும் மற்ற நிகழ்வுகளையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மற்றநிகழ்வுகளில் அவற்றை நடத்துபவர்கள், அவற்றில் பெருவாரியாகப் பங்கேற்பவர்கள், தங்கள் மனைவிகளையோ குழந்தைகளையோ அழைத்து வருவதில்லை. எங்கள் நிகழ்வில் என் மனைவி, மகள் கலந்துகொள்கிறார்கள். இது நாங்கள் அவர்களுக்காகவும் உருவாக்கும் ஒரு வெளி.

நாங்கள் உருவாக்க விரும்புவது சிந்திப்பதற்கும் கற்றுக்கொள்வதற்குமான வெளி. சமூகத்தின் கட்டுப்பாடுகளை மீறி ஒருவகையான கட்டின்மையை அனுபவிப்பதற்கான வெளி அல்ல. அப்படி ஒரு வெளி வேண்டும் என நினைப்பவர்கள் அந்தப் பெயரால் அப்படி ஒன்றை அமைப்பதில் பிழையில்லை. இலக்கியத்தின் பெயரால் அப்படி ஒரு வெளியை அமைக்க எண்ணும்போதுதான் சிக்கல்கள் உருவாகின்றன

 

ஜெ

 

முந்தைய கட்டுரைஆசாரங்கள் எதுவரை தேவை?
அடுத்த கட்டுரைஇஸ்லாமிய தத்துவ வகுப்பு – கொள்ளு நதீம்