அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
கணிப்பொறி விளையாட்டு பற்றிய காணொளி கண்டேன். என் மகன் அதில் மூழ்கிக் கிடக்கிறான். தட்டிக்கேட்கவே முடியாது. கடும் அடம். வேறு வழியில்லை. அபாயம் தெரிகிறது, ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என்ன செய்ய முடியும்?
பாலு
அன்புள்ள பாலு,
உங்கள் மகன் கஞ்சா புகைக்க விரும்புகிறான். மது அருந்துவேன் என அடம்பிடிக்கிறான். என்ன செய்வீர்கள்? ‘அடம்புடிக்கிறான் சார், ஒண்ணுமே செய்ய முடியலை’ என்று சொல்வீர்களா என்ன?
சில விஷயங்களை கண்டிப்பாகவே அணுகவேண்டும். ஒரு நோயை முற்றவிட்டு பின் புலம்புவதில் பொருளில்லை. எளிதல்ல என தெரியும். ஏனென்றால் நம் கல்விநிலையங்களில் கண்டிப்பு இல்லை. நம் சூழல் முழுக்கவே அதில் விழுந்து கிடக்கிறது. ஆனால் வேறு வழி இல்லை
ஆனால் வெறும் கண்டிப்பால் பயனில்லை. கண்டிப்புடன் வழிகாட்டுதலும் இருக்கவேண்டும். அதற்கு முதலில் நீங்கள் தகுதிகொண்டவராக இருக்கவேண்டும். உங்களுக்கு அறிவார்ந்த ஓர் உலகம் இருக்கவேண்டும். நீங்கள் செல்போனில் மூழ்கிக்கிடந்துவிட்டு மகனை கண்டிப்பதனால் எதிர்விளைவே உருவாகும்
அத்துடன் உங்கள் குடும்பம் கணிப்பொறி விளையாட்டு போன்றவற்றின் அபாயத்தை புரிந்துகொள்ளவேண்டும். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே வாழ்ந்து, எந்த வெளியனுபவமும் இல்லாமல், எதற்கும் ஆர்வமே இல்லாமல் வாழும் பெண்களே குழந்தைகளை கணிப்பொறி உலகு நோக்கி உந்தி விடுகிறார்கள். அவர்கள் தொலைக்காட்சியிலும் சமூகவலைத்தளங்களிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். அதற்கு வசதியாக குழந்தை கையில் செல்பேசியை அவர்களே திணிக்கிறார்கள்.
கண்டிப்புடன் கூடிய வழிகாட்டலுக்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. நான் கடைப்பிடித்தவை
1. முழுமையான இன்னொரு உலகை உருவாக்கி அளித்தல். நூல்கள் முக்கியமாக. பறவை அவதானித்தல், தாவரங்களை பார்க்க காட்டுக்குள் பயணம் என ஏராளமான நிகழ்வுகள் அடுத்தபடியாக. நேரடி வாழ்க்கையை அறிமுகம் செய்வதுதான் கற்பனையுலகை கடந்து குழந்தைகள் வெளிவர உதவியானது.
2 குழந்தைகளுக்கு அறிவார்ந்த தன்னுணர்வை, பெருமிதத்தை உருவாக்குதல். நீ அறிவானவன், மற்றவர்கள் செய்வதை நீ செய்யவேண்டியதில்லை, நீ ஒரு படி மேல், உன் வழியை நீ தேர்வுசெய்யவேண்டும், வித்தியாசமாக இருப்பதே உயர்வு என அவர்களை நம்பவைக்கவேண்டும்
ஜெயமோகன்