செயலும் செயலின்மையும்.

இந்தியச்சூழலில் ‘வெட்டி வேதாந்தம்’ என்ற ஒரு சொல்லாட்சி உள்ளது. சும்மா வெறும் தர்க்கமாகப் பேசிக்கொண்டிருப்பது. வேதாந்திகள் என்றாலே ஒன்றுமில்லாதவற்றை நுணுக்கமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள் என்ற ஒரு சித்திரம் உள்ளது.

இது பாமரர் தரப்பில் இருந்து எந்த தத்துவம் பற்றியும் சொல்லப்படும் கருத்துதான். இந்தியாவில் வேதாந்தமே அனைவரும் கேள்விப்பட்டிருக்கும் தத்துவம். ஆகவே வேதாந்தம் என்ற சொல்லே தத்துவத்திற்கு உரியதாக ஆகிவிட்டது. தத்துவம் என்பது ஒரு வீண் செயல்பாடு என உலகியலில் ஈடுபட்டிருக்கும் சாமானியர்களுக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. ஏனென்றால் உடனடியாக அவர்களுக்குப் புரியும் ஒரு பயன்பாடு அதில் இல்லைதான்.

வேதாந்தம் உண்மையில் எதையும் செய்யத் தேவையில்லை, செய்வதனால் பயனில்லை, செய்யாமலிருப்பதே உயர்ந்த நிலை என்று சொல்கிறதா? வேதாந்தம் பயின்றால் செயலின்மை உருவாகுமா?

வரலாறு நேர்மாறாக காட்டுகிறது. இந்தியாவில் பெருஞ்செயலாற்றிய பெரும்பாலும் அனைவருமே வேதாந்திகள்தான். சங்கரர் முதல் விவேகானந்தர், நாராயண குரு வரை. அவர்கள் இல்லையேல் நவீன இந்தியாவே இல்லை. ஏன் வேதாந்திகள் இல்லையேல் இந்தியா என்னும் அமைப்பே இருந்திருக்காது.

வேதாந்திகளால்தான் இந்தியாவில் பெருஞ்செயல்கள் ஆற்ற முடிந்துள்ளது. ஏனென்றால் அவர்களுடையது தூய அறிவின் வழி. ஆகவே அவர்களால் பழைய நம்பிக்கைகளையும் சம்பிரதாயங்களையும் அறிவின் உதவியால் கடக்க முடியும். உலகிலுள்ள எல்லாச் சிந்தனைகளுடனும் உரையாட முடியும். எல்லா நவீனச் சிந்தனைகளையும் ஏற்று விவாதிக்க முடியும்.

நேர் மாறாக , ஆசாரவாதமும், சம்பிரதாய மதமும்தான் மனிதனைத் தேங்கச் செய்பவை. ஏனென்றால் ஆசாரவாதம் மாற்றமில்லா ஒரு சுழற்சியில் மனிதனை கட்டிப்போடுகிறது. சம்பிரதாயம் பழமையை இறுகப்பிடித்துக் கொண்டிருக்கச் செய்கிறது. இந்தியா ஆசாரவாதத்தாலும் சம்பிரதாயத்தாலும் தேங்கிச் செயலற்றிருந்தது. அதை உடைத்தது வேதாந்தம்.

இன்றும் வாழும் இந்துச் சிந்தனை மரபுகள் அடிப்படையில் இரண்டு. ஒன்று வைதிகம், அல்லது பூர்வமீமாம்சம். இன்னொன்று வேதாந்தம் அல்லது உத்தர மீமாம்சம். இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. வைதிகம் சடங்குகள், வழிபாடுகள் ஆகியவற்றை முன்வைக்கும் கர்ம மார்க்கம். வேதாந்தம் தூய அறிதலை முன்வைக்கும் ஞான மார்க்கம்.

ஆச்சரியமாக இரண்டுமே இரண்டு வகையில் உச்சகட்ட செயல்வேகத்தையே மீட்புக்கான வழியாக முன்வைக்கின்றன. வைதிகம் எல்லா செயலும் வேள்வியென்று ஆகும் ஒரு நிலையை வலியுறுத்துகிறது. உபவேதங்கள் என்று சொல்லப்படுபவை மருத்துவம், வில்வித்தை, கட்டிடக்கலை உள்பட்ட கலைகள். அவற்றில் உச்சத்தை அடைவதே வேள்விதான். அது மீட்புக்கான வழிதான். வேதாந்தம் தனக்குரிய செயலை விளைவுகளைப் பற்றிய கவலை இல்லாமல், பற்றின்றி செய்யவேண்டும் என்றும், அதுவே கர்மயோகம் என்றும், அது மீட்புக்கான வழி என்றும் சொல்கிறது.

வேதாந்த மரபின் முதன்மை நூலாகிய பகவத் கீதையைப் போல செயலை மீட்பின் வழி என முன்வைக்கும் இன்னொரு நூல் உலக தத்துவ மரபில் இல்லை. வெறுமே ஒரு வழிகாட்டலாக அது செயலை வலியுறுத்தவில்லை. செயலின் எல்லா வகைபேதங்களையும், எல்லா படிநிலைகளையும் தத்துவார்த்தமாக வகுக்கிறது. சாங்கியம் (அன்றாடம்)  ஒருவரின் செயல்முறை. கர்மம் (சேவை) ஒருவரின் செயல்முறை ஞானம் (அறிதல்) இன்னொருவரின் செயல்முறை. அவ்வாறு அது விரிவாக வகுத்தளிக்கிறது.

வேதாந்தத்தின் புகழ்பெற்ற வரிகள் செயலை அறைகூவிச் சொல்பவை. ‘எழுக, விழிப்புறுக, இலக்கடைவது வரை முன்னேறுக’ என்று உபநிடதம் கூறுகிறது. அறிதலின் பாதை சவரக்கத்திமுனையில் நடப்பது போல என்று உபநிடதம் சொல்கிறது.செயலாற்றவே இங்கு வந்தோம் என்று கீதை சொல்கிறது. சொல்வது இறைவனாக இருந்தாலும் உன் நுண்ணறிவுக்கு எட்டியவரை பரிசீலித்துப்பார் என்று கீதை சொல்லி முடிக்கிறது

வேதாந்தம் எங்கும் எப்போதும் விதியை நம்பி சும்மா இருக்கும்படிச் சொல்லவில்லை. ஒருவன் தனக்குரிய செயல்களைச் செய்து , அதன் வழியாகக் அதைக் கடந்து சென்று நிறைவடைவதைப் பற்றி மட்டுமே சொல்கிறது. ஒரு தனிமனிதனைப் பொறுத்தவரை அவனுக்குள் செயலாற்றும் விசை இருக்கும் வரை அவன் செயலாற்றிக்கொண்டே இருந்தாகவேண்டும். அவன் செயலால் இங்கே என்னென்ன விளைவுகள் நிகழுமென அவன் புரிந்துகொள்ளவோ, வழிநடத்தவோ முடியாது. அது அவனைவிட மிகமிகமிகப் பிரம்மாண்டமான ஒரு ஒத்திசைவு கொண்ட இயக்கம். அதுவே வேதாந்தம் சொல்லும் ஊழ்.

வேதாந்தம் செயலின்மையைச் சொல்கிறதா? சாவி கொடுக்கப்பட்ட பழையபாணி சுருள்கடிகாரத்தில் அந்த முடுக்கப்பட்ட ‘ஸ்பிரிங்’ முழுக்க தளரும்வரை முள் ஓடியாகவேண்டும். முற்றிலும் அந்தச் சுருள் விசையழியும்போதுதான் கடிகாரம் செயலில் இருந்து விடுதலை அடைகிறது. மனிதன் முழுமையாக முடுக்கப்பட்டே இங்கே வருகிறான்.

வேதாந்தம் செயல்கள் வழியாக அடையும் விடுதலை என்று சொல்வது அந்த உச்சகட்டத்தில் அமையும் செயலின்மையையே. ஆற்றுவது ஆற்றி அமையும் முழுமை அது. ஓடுவது ஓடியடைவதற்காகத்தான்.

 

முந்தைய கட்டுரைபறவை பார்த்தல், கடிதம்
அடுத்த கட்டுரைதத்துவம் உடனிருக்கட்டும்