இரு மரபுகளை ஒரே சமயம் கற்றல்

அன்புள்ள ஜெ

இந்திய தத்துவமரபையும் மேலைத் தத்துவ மரபையும் ஒரே சமயம் கற்றுக்கொள்ள முடியுமா? அதனால் குழப்பங்கள் வராதா? என் பிராக்டிகலான தனிப்பட்ட சந்தேகம் இது

எல்.

 

அன்புள்ள எல்

கற்றுக்கொள்ளலாம். ஆனால் இரண்டும் வேறுவேறு என்னும் தெளிவு தேவை. இந்திய தத்துவம் மெய்யியலுக்கு மேலும் அணுக்கமானது. இறையியலுக்கும் மிகப்பெரிய இடம் உண்டு. மேலைத்தத்துவம் இறையியலை தனித்துறையாக ஆக்கி தன்னில் இருந்து பிரித்துவிட்டது. அதன் கேள்விகள் அறவியல், பிரபஞ்சவியல் சார்ந்தவை. இந்திய தத்துவத்திற்குரிய கேள்விகளை மேலைத் தத்துவத்தில் கேட்பது, அங்குள்ள கேள்விகளை இங்கே கொண்டுவருவது ஆகியவற்றைச் செய்யக்கூடாது. அந்த வகை விவாதமே நிகழக்கூடாது. குழப்பமே எஞ்சும்.

இரண்டு தத்துவங்களையும் தனித்தனியாக பயிலவேண்டும். சிந்தனையிலும் குழப்பிக்கொள்ளக் கூடாது. அவற்றை நாம் போதிய அளவுக்குக் கற்றபின் நம் அகத்தில் அவை இயல்பாகவே ஒன்றுகலந்து ‘தத்துவப்பார்வை’ என்ற பொதுவான அறிவுத்தகுதி உருவாகும். அதுவரை காத்திருக்கவேண்டும்.

இதே நெறி இஸ்லாமிய தத்துவம், கிறிஸ்தவ தத்துவம், பௌத்ததத்துவம் ஆகியவற்றைக் கற்கையிலும் பொருந்தும்.

ஜெ

முந்தைய கட்டுரைமேலைத்தத்துவம், ஒரு புதுக்கேள்வி
அடுத்த கட்டுரைஎழுதவிருப்பவரின் கடிதம், மீண்டும்