எழுதவிருப்பவரின் கடிதம், ஒரு பதில்…
எழுதவிருப்பவரின் கடிதம்…
அன்புள்ள ஜெயன்,
குரு என்ற அடையாளத்தை தாங்கள் நிராகரிக்கிறீர்கள். ஜெ என்று அழைப்பதை காட்டிலும் ஜெயன் என்று அழைப்பது எனக்கு மிக அணுக்கமாக உள்ளது. அவ்வாறே அழைக்கிறேன்.
முதல் முதலில் நவீன அண்ணாவிடம் நான் கேட்ட கேள்வி “அண்ணா தத்துவம் என்றால் என்ன ? ” என்று. அவர் அதற்கு “எனக்கு அதை சொல்லும் அளவிற்கு தகுதியில்லை. ஜெயமோகன் சார் class attend பண்ணுடா” என்றார்.
சிறிது நாள் கழித்து சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி கோவைக்கு வந்தார். நவீன் அண்ணா என்னை கைபேசியில் அழைத்து “தத்துவம்னா என்னனு கேட்டல தம்பி, கோவையில் சுவாமி பிரம்மானந்தா வருகிறார். மாலை இரண்டு மணி நேரம் கூடுகை உள்ளது .நீ அவரைப் பார்த்தால் தத்துவத்தைப் பற்றி ஒரு idea கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார் .
வாழ்வில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அறிமுகமான பிறகு எந்த நிகழ்வையும் எதிர்பார்ப்பின்றி மனதை முழுதாக திறந்தே அனைத்திலும் கலந்துள்ளேன். ஏனென்றால் எதிர்பாராத சொற்கள் அந்நிகழ்வுகளில் ஏதோ ஒரு ஆளுமையின் நாவில் உதித்து என் நெஞ்சில் பதிந்து வாழ்வை செதுக்குகின்றன.
என் அம்மா ” இரண்டு மணி நேரம் நிகழ்விற்காக கொடைக்கானல்ல இருந்து கோயம்புத்தூர் போறியா? ” என்று சற்று எரிச்சல் பட்டார். ஆனால் அந்நிகழ்வில் தான் என்னை வளர்த்தெடுக்கவிருக்கும் முக்கியமான விதைகள் துவக்கப்பட்டன. அந்நிகழ்வில் சுவாமி பிரம்மானந்தா அவர்கள் பேசிய உரையின் சாரம் “இலக்கியம் என்ற ஆன்மீகப் பாதை ” என்று நான் தொகுத்துக் கொண்டேன். இன்று அந்த ஆன்மீக பயணத்தில் இலக்கியத்துடன் ஒவ்வொரு நாளும் பயணிக்கிறேன்.
கவிஞர் தேவதேவன் சுவாமியுடன் உரையாடுகையில் “ஒருவர் சொல்லுவதை கூர்ந்து கவனித்து அவ்வாறே திருப்பிச் சொல்ல முடியும் என்றால் அதுவும் ஒரு உச்சகட்ட தியானம் தான்” என்றார். ‘ஷ்ரத்தை‘ என்று கூறப்படும் அக்கவனத்திற்கான விதைகள் துவப்பட்டன.
தூரன் விழாவில் கோவை மணி அவர்களின் நிகழ்வை நான் தொகுத்த பிறகு தேவதேவன் அவர்கள் ” ஒருத்தங்க ஒன்றரை மணி நேரம் பேசினத இவ்வளவு correct அ அப்படியே சொல்றது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. ரொம்ப நல்லா பண்ண ” என்றார். அவரின் ஆசி கிடைத்ததாகவே எண்ணினேன்.
நிகழ்வுகள் எல்லாம் முடிந்தபின் என்னுள் எழுத்திற்கான முதல் விதைகளை தூவினார் நவீன் அண்ணா. மிக மிக எதேச்சையாக தூவப்பட்ட விதைகள். எழுத்தாளர் புண்ணியவனுடன் உரையாடுகையில் என்னை அறிமுகப்படுத்தும் வகையில் ” சார் இவன் பேரு சபரீஷ், கொடைக்கானலில் இருந்து வந்திருக்கான். இவன் எழுத்தாளரா ஆகுற வாய்ப்பிருக்கு. ஒரு மாசத்துக்கு முன்னாடி எனக்கு night ஒரு மணிக்கு போன் பண்ணி ஜெயமோகன் சார் பாக்கணும்னு சொன்னான். அந்த மாதிரி ஒருத்தன் போன் பண்ணி அழைக்கிறான்னா , அவன் தலையில ஜெ வ பார்த்து ஏதோ கலண்டிருக்குனுதான அர்த்தம்” என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது . “எவ்வளவு பெரிய வார்த்தைகள், என்னால் எழுத முடியுமா?” என்று. அன்றிலிருந்து எழுதும் கனவு தூவப்பட்ட அவ்விதைகளில் இருந்து முளைக்க ஆரம்பித்தது. தங்களுக்கு நான் எழுதிய கடிதம் வலைதளத்தில் நேற்று “எழுத விருப்பவரின் கடிதம்” என்ற தலைப்பில் பிரசுரம் ஆயிற்று. நான் அதை எதிர்பார்க்கவில்லை. அத்தலைப்பு தங்களிடமிருந்து எனக்கு கிடைத்த ஆசி என்றே கருதுகிறேன்.
தாங்கள் அளித்த தலைப்பை பார்க்க இனிமையாக இருந்தாலும் என்னை இன்னொரு புறம் அச்சுறுத்தவும் செய்கிறது. “எழுதி விடுவேனா ?” என்று. எழுத வேண்டும் என்ற கனவு உள்ளது. எழுத்தின் மூலமே இவ்வாழ்வு முழுமை பெறும் என்று எண்ணம் ஆலமரத்தின் வேர்கள் போல் ஒவ்வொரு நாளும் விரிந்து வலுவாகின்றன. எழுதும் நொடிகளில் என்னை இழந்து மெய் மறந்தே எழுதுகிறேன். சற்று விந்தையாகவும் உள்ளது.
அக்கடிதம் பிரசுரமான பிறகு நிறைய பாராட்டுக்கள் வருகின்றன. ஒரு வருடத்திற்கு முன்னால் முகாமில் சந்தித்தவர்கள் கூட எனக்கு செய்தி அனுப்பி மகிழ்ச்சியை தெரிவித்தனர். அனைவரும் “கடிதம் மிக சிறப்பாக இருந்தது. ஜெ கூறும் வார்த்தைகள் வீண் போகாது…..” என்றனர். தென் கொரியாவில் இருந்து சதீஷ் அண்ணா என்ற புதிய நண்பர் அழைத்திருந்தார். அவர் ” நீங்க பதினெட்டு பத்தம்போது வயசுல இவ்வளவு நல்லா ஆழமா சார கவனிச்சு எழுதி இருப்பது வியப்புற்றதா இருக்கு. ஜெயமோகன் சார் அவ்வளவு easyயா ஒருத்தர ‘இவர் எழுத்தாளராகலாம்‘-னு எல்லாம் சொல்ல மாட்டார். உங்களை சொல்லி இருக்கார்னா உண்மையிலே நீங்க blessed தான் ” என்றார்.
இப்பாராட்டுக்கள் அனைத்தின் எடை அதிகமாக உள்ளது. அச்சுமையை தூக்க சக்தி என் தேகத்தில் இல்லை. அனைவரும் தங்களின் பெயரை சுட்டி காட்டுவதாலோ என்னவோ. இப்புகழ்ச்சிகள் மனித மனதை எவ்வாறெல்லாம் செயல்பட வைக்கிறது என்று திரும்பிப் பார்த்தால் பெரும் வெறுமை ஒன்றே நிலவுகிறது. மானுட உள்ளம் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் பலியாகி தத்தளிக்கின்றது.
உண்மையில் இன்று மானுட மனதை திரும்பி பார்த்த உச்ச நொடிகளில் கண்களில் கண்ணீர் மல்கினேன். பரிதாபத்துக்குரிய ஒரு ஜீவனாகவே அது உள்ளது. அவை அனைத்தும் தங்களையே நினைவூட்டுகிறது.
குடகு மலை பயணம் முடிய தாங்கள் எனக்கு ஒரு கேள்வியை அளித்தீர். ” என்ன சபரி, இந்த மூன்று நாள் பயணம் எங்க கூட வந்தது ஏதாவது பிரயோஜனமா இருந்ததா?”
அதற்கு நான் ” இயற்கை சார்ந்து இதுபோன்று பயணிப்பது எனக்கு புதிதல்ல. ஆனால் ஒரு அறிவார்ந்த குழுவுடன் இது போன்ற பயணத்தை மேற்கொள்வது என்னுடைய நல்லூழ். நம் சூழல் கற்றலுக்கு அடிப்படையான விஷயங்களையே கற்றுத் தராத ஒரு சமூகமாக உள்ளது. அதுபோன்ற அடிப்படையான விஷயங்கள் பலவற்றை கற்கிறேன்…… ” என்றேன்.
அதன் பிறகு தாங்கள் ஒரு பேருரையை ஆற்றினீர்கள். அதை தனியாக தொகுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் அன்று முழுமையான விடை அளிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை ஆழ் மனதுடன் தொடர்பு கொள்கிறார் . அந்த ஆழ்மனத்தொடர்பு அம் மாணவனை ஒவ்வொரு நாளும் செதுக்குகிறது. அனுபவங்களை அளிக்கிறது. எவ்வாறெல்லாம் செதுக்கப்படுகிறான் என்று அம்மாணவன் வாரத்திற்கு ஒரு கடிதம் கூட எழுதலாம்.
இந்த பயணம் முடித்தவுடன் நான் கண்ட பெரும் மாற்றம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் சமநிலையுடன் லௌகீக பணிகளையும் இலக்கியப் பணிகளையும் பிரித்து விளக்கங்களுடன் செய்கிறேன். ஒரு நாளில் எட்டு பத்து மணி நேரம் போட்டித் தேர்வுக்கும் நான்கு மணி நேரம் இலக்கியத்திற்காக செலவிடுகிறேன். ஒரு சில நாட்களில் கூடும் குறையும். இந்த சமநிலை எதனால் வந்தது என்று தெரியவில்லை. யோசித்துப் பார்த்தால் தங்களின் முக பாவனைகளையும் நடைமுறை வாழ்க்கையும் அருகில் இருந்து அவற்றைக் கூர்ந்து என்னை அறியாமல் கவனிப்பதனால் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட உங்களுடைய மொத்த ஆளுமையே உள்வாங்கும் ஒரு இன்பப் பயிற்சியிலேயே ஒவ்வொரு நாளும் கடக்கின்றது.
இப்புகழ்ச்சிகளை எதிர்கொள்வதற்கும் ஆழ் மனதில் வேரூன்றி இருக்கும் தங்களையே நாடினேன். வெண்முரசு போன்ற பெரும் காவியத்தை எழுதி அதில் இருந்து முற்றிலும் விலகி கர்மங்களை மெய்யுடன் பீடிக்காமல் சுதந்திரப் பறவையாக வாழ்கிறீர். ஒவ்வொரு நாளும் செயல் புரிந்து , அச்செயல் முடிவுற்றவுடன் முழு விளக்கத்தையும் அடைகிறீர். எனக்கு நான் திரும்பத் திரும்ப சொல்லுவதும் அதையே. ஆழ் மனதில் இருந்து திரைப்படம் போல உதிப்பதும் தங்களின் அந்த பிறந்த குழந்தைக்கு இருக்கும் அம்முக பாவனையே. ‘ நீண்ட காலம் இப்புவியில் குடியிருக்கும் வாய்ப்பை அந்த சிருஷ்டி எனக்கு அளித்தால் அக்குழந்தைத்தனத்தை என்னுடையதாக இவ்வுலம் ஆக்கிக் கொள்ளுமா? ‘ என்று கேள்வியே எழுகிறது.
செயலில் மூழ்கி இச் சிறு புகழ்ச்சிகளை மறக்க முயற்சித்தேன். ஐந்து நாட்களுக்கு முன்பு புதுவை வெண்முரசு கூடுகையில் தங்களின் உரையை பார்த்த உடனே டி எஸ் சொக்கலிங்கம் அவர்கள் மொழிபெயர்த்த போரும் அமைதியும் என்ற மகா காப்பியத்தை வாங்கினேன். எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளி நூலகத்தில் அக்காவியத்தை படிக்க முயற்சித்தேன். அன்று முடியவில்லை. தினமும் இரண்டு மணி நேரம் வாசிக்கவிருக்கிறேன் (உலகியலை பாதிக்காத வகையில்) .
என் இல்லத்திற்கு பின்னால் சுனாமியின் உயரிய அலை போல மலைத்தொடர் ஒன்று உள்ளது. அவற்றைக் கண்டு பிரகிருத்தி தியானம் தினமும் அரை மணி நேரம் செய்கிறேன். அப்பேரியற்கையுடன் கலக்கும் ஒரு முயற்சியாக. எனக்கு நானே சொல்லிக் கொள்வது “நீ இந்த உலகம் கண்ட வரலாற்று நாயகர்களாகிய டால்ஸ்டாய் ஜெயமோகன் போன்ற மாபெரும் எழுத்தாளர்களாக கூட ஆகலாம். அது நடவாமலும் போகலாம். உன் வாழ்வில் நீ பெரும் புகழையும் அடையலாம். அங்கீகாரம் இன்றியும் நீ அலையலாம். ஆனால் அவை அனைத்தும் எழுதியவனையும் எழுத விருப்பவனையே சேரும் . நீ அவன் அல்ல. வாழ்வை அர்த்தப்படுத்தக்கூடிய வாசிப்பையும் எழுத்தையும் ஒவ்வொரு நாளும் சுவாசித்து கொண்டாடுவதே உன் வினை . அதை மட்டும் செய் ” என்று.
என் வாழ்வில் எதிர்காலத்தில் ஊழின் காரணமாக தவிர்க்க முடியாத அவல நிலைகள் வந்தால் கூட , அவை அனைத்தையும் மறந்து தாவி பறந்து செயல் புரியும் களம் ஒன்று எனக்கு அமைந்துள்ளது. “பஞ்சங்களில் போர்களில் ஏழ்மையில் தவித்து உணவிற்கும் குடிநீருக்கும் நடமாடும் மனிதர்கள் உள்ள இந்த அவனியில், ஏன் இது போன்ற நல்லூழ் பெற்றவனாக நான் இருக்கின்றேன்?” என்ற கேள்வி என்னை துளைக்கின்றது.
போன வருடம் ஆகஸ்ட் மாதத்தில் “ஜெயமோகன் ஜெயமோகன் என்று இவ்வளவு பேர் சொல்றாங்களே, அவர் யாரு? என்னெல்லாம் பண்ணி இருக்காரு? ” என்று ஒன்றும் அறியாதவனாக யோக வகுப்பு முடித்து ஷேக் முகமது அண்ணாவிடம் கேட்டேன். இன்று தாங்களோ என் வாழ்வில் தவிர்க்க முடியாத தாய் தந்தையருக்கு நிகரான வடிவமாக இதயத்தில் குடிகொண்டுள்ளீர்.
கவிஞர் ஆற்றுர் ரவிவர்மா அவர்கள் கூறிய வார்த்தைகளை சுட்டிக்காட்டி அருண்மொழி அம்மா எழுதிய பெருந்தேன் நட்பு புத்தகத்தின் வரிகளே நினைவிற்கு வருகின்றன. நான் அதை சற்று மாற்றிக் கொண்டேன். “தொலைந்த குழந்தை அதன் தாயை திரும்பச் சேர்வது எத்தகைய ஒரு அபூர்வ நிகழ்வோ அது போன்ற ஒரு நிகழ்வு தங்களை நான் சந்தித்தது. வாழ்வெனும் மாபெரும் புதிரான சதுரங்க ஆட்டத்தில் விழும் பகடைகளின் நிகழ்வுகள் நம் கணிப்பிற்கு அப்பாற்பட்டவை, எண்ண ஒண்ணாதவை, எண்ணில் அடங்காதவை. ஆனாலும் என்னிடம் மிகுந்த கருணையோடிருக்கிறது அப்பெருநியதி” என்ற நன்றி உணர்வே மனதில் நிகழ்கிறது.
மேலுள்ள வரிகளுக்கு எதிராக “அந்தப் பெருநியதி இவ்வுலகில் நடத்தும் பல perumutation combination-கல் நிறைந்த நாடகத்தில் இது ஒரு மிகச்சிறிய நிகழ்வு. அது உருவாக்கும் எல்லா நிகழ்வுகளும் விளைவுகளும் பெரிதோ சிறிதோ, அவை அனைத்தும் அதற்கு சமமானதே . அப்பெருநியதிக்கு மானுடனின் இன்ப துன்பங்களை பற்றி எல்லாம் தெரியாது. ஏனென்றால் அது எல்லையற்றது. பிரம்மாண்டமானது. அப்பெருநியதிக்கு சூரியனும் சந்திரனும் கூட சின்னஞ்சிறு கரப்பான்களே . அது உன் வாழ்வில் நிகழ்த்திய இவ்விளைவுகள் உனக்கு சாதகமாக இருப்பதனால் சாதகமான அர்த்தங்களை நீ அளிக்கிறாய், அது கிடையாது” என்ற முரணான வரிகளும் வருகின்றன.
மனத்தை திரும்பிப் பார்க்க பார்க்க அன்று நான் நவீன அண்ணாவிடம் கேட்ட கேள்வி பரிமாற்றம் அடைந்துள்ளது. தத்துவம் என்றால் என்ன? என்பதிலிருந்து முழுமையாக தத்துவம் பயில வேண்டும் என்று ஆசை வேரூன்றி உள்ளது . 2026 ல் இருந்து போட்டித் தேர்வுகள் எழுத வேண்டும் என்பதனால் அவ்வருடங்களில் தங்களின் தத்துவ வகுப்புகளில் கலந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை . ஆசி பெற்றவன் என்றால் அதையும் கற்பேன்.
அன்பும் காதலும் கலந்த முத்தங்களுடன்
பிரியத்துக்குரிய மாணவன்,
சபரீஷ் குமார்