Education and argument
அன்புள்ள ஜெ
முழுமையறிவு ஆங்கில பக்கத்தில் வெளியான எஸ்.கே. சரவணக்குமாரின் கடிதத்தை வாசித்தேன். இன்றைய மாணவர்கள் ஆசிரியர்கள் மேல் கொள்ளும் மதிப்பின்மையை, அது ஆழத்தில் அறிவு மேல் கொள்ளும் மதிப்பின்மையாக இருப்பதை எழுதியுள்ளார். அண்மையில் வரும் நவம்பரில் நீலி இதழ் கொண்டு வரவிருக்கும் பெருந்தேவி சிறப்பிதழுக்காக, அவரது கவிதைகளை முழுமையாக வாசித்து ரசனை மதிப்பீட்டு கட்டுரை ஒன்றை எழுதினேன். அக்கட்டுரைக்காக தேர்ந்தெடுத்த கவிதைகளில் ஒன்று, சரவணக்குமார் சொல்லும் இவ்விஷயத்தை பேசுவதாக அமைந்தது.
கேள்வி – பதில்
“இந்துமதம் ஆன்மாவைப் பற்றி என்ன சொல்கிறது ?”
என்னிடம் இதைக் கேட்டவன் படுஅம்சமான பையன்
(விவரணையைக் கத்தரித்துவிடு மனமே
ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தாய்தந்தை மாதிரி
அல்ல
தாய்தந்தையாகவே இருக்க வேண்டும்
மாதா பிதா போல் குரு இருந்தால் தெய்வம்
இல்லாவிட்டால் தேவடியாள்/ன்
தலைக்குள் வலி நழுவியது)
“இந்துமதம் என்பது பல மதங்கள், அதாவது…”
“பலவா? மொத்தத்தில் என்ன சொல்கின்றன ?”
அடே பையா கற்பவர்களுக்குப் பொறுமை வேண்டும்
நாக்கு துடிக்கிறது
(வாராது வந்த மாமணி வாத்தியார் வேலை
கோபப்பட்டால் ஒழித்துக்கட்டி விடுவார்கள்
குண்டி துடைக்க டாய்லெட் பேப்பருக்குப்
பிச்சையெடுக்க வேண்டும்)
“மொத்தத்தில் என்று ஒன்றுமில்லை
வரலாற்றுரீதியாகக் கட்டமைக்கப்படுபவை கருத்துகள்
இந்துமதம் எனப்படுவதன் வரலாற்றைப் பார்த்தால்…”
“ஆன்மா அழிவற்றது என்று பகவத்கீதை சொல்வதை
இந்துக்கள் நம்புகிறார்களா ?”
அடுத்த கேள்விக்கு நகர்ந்துவிட்டான்
(நினைத்திருப்பான்
இந்த வாத்திச்சிக்குப் பொட்டிலறைந்தாற் போல
சொல்லத் தெரியவில்லை
அல்லது
நேற்று மொண்டு குடித்ததன் மிச்ச சுருதி
இவளிடம் கலையவில்லை)
நம்புகிறார்களா நம்பவில்லையா
என் தலைவலியை எதுதான் குறைக்கும்
“ஆன்மா அழிவற்றது என்று நான் நம்புகிறேன்”
தொடர்ந்தான்
“நானும்தான்”
அவன் நம்பியதை ஆமோதிப்பதுதான்
எத்தனை பிடித்தமாக இருந்தது?
அழிவதாகவே இருக்கட்டும்
அவனுக்காகவாவது
ஆன்மா என்ற ஒன்று இருக்கவேண்டும்
இந்நேரத்தின் நித்தியமான
இந்தத் தலைவலியைப்போல
ஆசிரியர் மாணவர் உறவென்பது அதன் விழுமியத்திலிருந்து தாழ்ந்து கேள்வியும் பதிலுமென சுருங்கி போவதன் மேலான விமர்சனமாகவே முதல் பார்வைக்கு இக்கவிதை ஒலிக்கிறது. அடுத்தப்படியாக நிறுவனங்களில் அடைப்பட்டு மனிதத்தன்மையை இழந்து வருவதன் குறியீடாக எடுத்து கொள்ளலாம் என தோன்றியது.
இக்கவிதையில் மாதா பிதா போல் குரு இருந்தால் தெய்வம் இல்லாவிட்டால் தேவடியாள்/ன் என ஒரு வரி இருக்கிறது. பெருந்தேவியை வாசிப்பவர்களில் சிலர், இந்த இடத்தை அவரது எதிர்க்கவிதை உத்தி, அதிர்ச்சியின் மூலம் கவனத்தை இழுப்பது என கடந்து போகக்கூடும். ஆனால் இவ்வரி மிக நடைமுறையான ஒரு கூற்று என்பதை தனி அனுபவத்தில் இருந்து சொல்வேன். கல்லூரி படிக்கும் என் தம்பி, தன் ஆசிரியர்களை தேவடியாள், தேவடியா பையன், முண்டை என சகஜமாக விளித்து என்னிடம் பேச முற்படும் போது அதிர்ச்சியும் ஒவ்வாமையும் கொண்டேன். பின்னர் அவனை கவனிக்கையில் அவனது நண்பர்கள் குழாமும் பொதுவாக கல்லூரி மாணவர்களில் பாதிக்கு மேலானவர்கள் அப்படித்தான் அழைக்கிறார்கள் என்று அறிந்தேன்.
அறிவுக்கு பதில் தீவிரமான மூட நம்பிக்கையை அரசியல், சினிமா, மதம் சார்ந்து வளர்த்து கொள்ளும் ஒரு தலைமுறை ஒன்று உருவாகி வருகிறது. இவர்களின் உலகில் எல்லாமே பண்டங்களாக மட்டுமே இருக்கிறது.
அன்புடன்
சக்திவேல்