அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் தங்களை ஏற்கனவே மூன்று முறை கோயம்புத்தூரில் சந்தித்து சில நிமிடங்கள் பேசியுள்ளேன். அறம், விஷ்ணுபுரம், ஊமைச் சென்னாய், வெள்ளை யானை, புறப்பாடு, மற்றும் சொல்வளர்காடு உட்பட உங்களது பல நாவல்களை படித்திருக்கிறேன்.
இப்பொழுது கட்டண உரைகளை Youtube சேனலில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவை அனைத்தையும் சொல்வதற்கு காரணம் நான் தங்களிடம் பின்வரும் கேள்வியை கேட்பதற்கு ஓரளவு தகுதியானவன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ளத்தான்.
எனது கேள்வி,
“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை நான் அத்வைதி அதனால் கடவுளை வேண்டுவதில்லை.” என்று ஒரு பேட்டியில் சொல்லி இருந்தீர்கள். இன்னொரு youtube சேனலில் ” தேவதைகள் உண்டு என்பதை கேரளாவில் உள்ள மூதேவி கோயிலுக்கு செல்லும் பொழுது உணர்ந்து கொண்டேன் என்று கூறினீர்கள்.”
இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்லவா?
சூரியகாந்தி சதீஸ்குமார்
அன்புள்ள சதீஷ்
இதை நான் சுருக்கமாகத் தெளிவுற விளக்கமுடியாது. ஏனென்றால் ஒன்று அகவயமான அறிதல். இரண்டு தத்துவார்த்தமாகச் சிக்கலானது.
கடவுள் என்னும் கருத்துருவம் (அல்லது அறிதல்) காலத்தால் பிற்பட்டது. பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் ஒரு சக்தி. அதை வேண்டிக்கொண்டால் நல்லவை நடக்கும் என்னும் நம்பிக்கை. எனக்கு அக்கருத்துரு மேல் நம்பிக்கை இல்லை. ஆகவே வேண்டிக்கொள்வதில்லை. வேண்டிக்கொள்வதென்றால் ஆத்மவேண்டுதல், என் ஆத்மாவிடமே வேண்டுதல், எனக்கே ஆணையிட்டுக்கொள்ளுதல்தான்.
என் இறையுருவகம் என்பது அத்வைதம் சார்ந்தது. இங்கனைத்துமாகி நின்றிருக்கும் பிறிதில்லாத ஒன்று. அதன் இருப்பு உணரத்தக்கது. நோக்கமும் இயல்பும் அறிதலுக்கு அப்பாற்பட்டது. நானும் அதுவே. ஆகவே அதுவே நான் என உணர்தலே என் ஆன்மிகநிலை. அதை மீளமீள எனக்கே அறிவித்துக்கொண்டு அதுவாகி இருக்கும் நிலைகளை உருவாக்கிக்கொள்வதே என் தியானம்.
அந்த அது தன்னை இங்கே தன்னை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்திக் கொள்கிறது. கடல் அலையாவதுபோல. நாம் அறியும்நிலைகளாக சிலசமயம் அது கூர்கொள்கிறது. திமிறி நின்றிருக்கும் ஓரு மாபெரும் ஆலமரம் அதன் ஓர் அறிதல்புள்ளி. ஆலமரம் ஒரு பொருள். ஆனால் அப்பொருளாக வெளிப்படுவது ஒன்று உண்டு, அது அந்த ஒருமையின் ஒரு கூர்மையான புள்ளி. ஒரு வெளிப்பாட்டு முகம்.
அப்படி வெளிப்படுவதையே நான் deity என்கிறேன். வெளிப்பட்ட அதை நம் அறிவின், கற்பனையின் எல்லைக்குட்பட்டு உருவமாக ஆக்கிக்கொள்கிறோம். குணங்களை அளிக்கிறோம். நாம் அறியும் ‘தெய்வங்கள்’ எல்லாமே நம் கற்பனைகள். நம் கற்பனைக்குள்ளாகும் ஒன்றே அந்த தெய்வம். அதன் இருப்பை அறியலாம், அதை அறியமுடியாது. அது கடவுள் அல்ல.
இப்போதைக்கு நான் இவ்வளவே சொல்லமுடியும்.
ஜெ