வனம், வகுப்பு- கடிதம்

Screenshot

அன்புள்ள ஜே,

வணக்கம்.

 மூன்று நாட்கள் தாவரவியல் வகுப்புகள் முடித்து நேற்று வீட்டுக்கு வந்து விட்டேன்.

மதிப்பிற்குரிய ஆசிரியர் லோகமாதேவியின் வழிகாட்டுதலில், தாவரங்களின் மேல் உள்ள காதல், பல மடங்கு கூடிவிட்டது. அவர்களுக்கு இந்தத் துறையின் மேல் உள்ள passion வியக்க வைக்கிறது. பாடம் எடுக்கும் போது மட்டுமல்லாமல், சாப்பிடும் போதும் சரி, அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அது வெளிப்படுகிறது. நான்  கேள்விப்பட்டிராத விளிம்பி என்று ஒரு காயில் ஊறுகாய் செய்து கொண்டு வந்திருந்தார்கள். திரும்பி வரும் பொழுது அவர்களின் வாகனத்திற்கு பின்னால் வந்து கொண்டிருந்தோம். நடுவில் நிறுத்தி plant collection ஆரம்பித்து விட்டார்கள்.  She is an inspiration to all of us. 

வகுப்பில் புதிய பல தகவல்களை கற்றுக் கொண்டேன். தாவரவியலில் இத்தனை துறைகளா? குழுவாக சேர்ந்து செயல்முறை தேர்வு செய்தது மிக்க மகிழ்ச்சியாகவும் , மேலும் கற்றுக்கொள்ள வாய்ப்பாகவும் இருந்தது. குட்டி குழந்தைகளின் ஆர்வம் அடுத்த தலைமுறையின் மீது நம்பிக்கையை வரவழைக்கிறது

வீட்டிற்கு வந்து கற்றுக்கொண்ட புதிய தகவல்களை, கிடைத்த நண்பர்களை, பார்த்த விஷயங்கள் பற்றியும் பேசிப் பேசி குரலே மாறிவிட்டது.   மனதளவில் அங்கிருக்கும் என்னை, இங்கே வா என்று வீட்டில் எல்லோரும் அழைக்கிறார்கள். ஆனால் எனக்கு வனமலை பித்து பிடித்து விட்டது. அடுத்த நொடி ஒரு புதிய விஷயம் ஞாபகத்திற்கு வந்து புன்னகையை வரவழைக்கிறது

நண்பரின் தொலைநோக்கியை கடன் வாங்கி வானத்தில் தெரிந்த பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களை பார்த்த போது, விண்வெளியில் பறப்பது போன்று இருந்தது. எனது அறைக்கு திரும்பி நடந்து வரும் பொழுது காந்திஜி கூறிய உண்மையான சுதந்திரத்தை அடைந்தேன். மனதில் எவ்வித  பயமும் இன்றி, ஆனந்தத்துடன் நடந்து வரும் பொழுது , இப்படி ஒரு அனுபவத்தை சாத்தியமாக்கிய உங்களுக்கு, என் மனதின் ஆழத்திலிருந்து கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வகுப்பில் கலந்து கொண்டது மறக்க முடியாத அனுபவம் என்று  கூற முடியாது. அது வாழ்க்கை முழுவதும் கூட வரும் அனுபவமாக இருக்கப் போகிறது என்று மட்டும் உறுதியாக கூற முடியும்

மறுபடியும் நன்றி

அன்புடன் 

ராஜேஸ்வரி

முந்தைய கட்டுரைதாவரங்கள், கடிதம்
அடுத்த கட்டுரைமந்தாரை- கடிதம்